`இதுவும் எங்க கடமைதான்!’- 100 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

தூத்துக்குடியில் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வறுமையில் வாடும் தங்களது பள்ளியில் படித்து வரும் 100 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1,000 மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் வழங்கியுள்ளனர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் பல மாணவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து, உணவிற்காகத் தவித்து வருவதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் சீனி, அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் சக ஆசிரிய, ஆசிரியைகளுடன் கலந்து பேசி மிகவும் பின்தங்கிய 100 குடும்பங்களை அடையாளம் கண்டு, 10 கிலோ அரிசி, ரூ.500 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள், முகக் கவசம் என ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை வழங்கினர்.

நிவாரண உதவிகளைப் பெற வந்திருந்த 100 குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணாயிரம், நாலாட்டின்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கடல்ராணி அந்தோணிராஜ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பாராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனியிடம் பேசினோம். ``நாலாட்டின்புதூர், முடுக்குமீண்டான்பட்டி ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள சுமார் 40 கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எங்க பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இவர்களது பெற்றோர்கள் விவசாயக்கூலி, கட்டடவேலை, ஆடு, மாடு மேய்த்தல், கூடை பின்னுதல், தீப்பெட்டி ஆலைக்கூலி, பட்டாசு ஆலைக்கூலி என சாதாரண அன்றாடம் கூலி பெற்று வாழ்க்கை நடத்துபவர்களாகத்தான் உள்ளார்கள். பேருந்து, சைக்கிளில் வரும் குழந்தைகளை விட நடந்து வரும் மாணவ,மாணவிகளின் எண்ணிக்கைதான் அதிகம்.
கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல நிலை கூலித்தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களது பள்ளியில் படிக்கும் பல மாணவர்களின் குடும்பத்தினரும் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக உள்ளூர்க்காரர்கள் சிலர் மூலம் கேள்விப்பட்டேன்.

உடனே, பள்ளியில் பயிலும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் அனைவரிடமும் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவ, மாணவர்களின் குடும்பத்தினர்களுக்கு உதவுவது குறித்து ஆலோசனை செய்தேன். அனைவரும் வரவேற்றதுடன், ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்புத் தொகையை மனமுவந்து வழங்கினார்கள்.
மொத்தம் ரூ.1 லட்சம் கிடைத்தது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களில் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்கள், தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் என 100 மாணவ, மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அந்தக் குடும்பத்தில் ஒருவரை மட்டும் பள்ளிக்கு வரவழைத்து, ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட ரூ.1,000 மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளோம்.

மாணவர்களுக்கு கல்வி போதிப்பது மட்டுமல்ல, வறுமையால் வாடும் போது முடிந்த உதவிகளைச் செய்வதும் ஒவ்வொரு ஆசிரியரின் கடமைதான்” என்றார். ஆசிரியர்களின் இச்செயல் பெரும் பாரட்டைப் பெற்றுள்ளது.