Published:Updated:

`அப்போதே அத்தனை வசதிகளுடன் உருவானது!'- 20 வருடங்களாகப் பராமரிப்பின்றி கிடக்கும் மணிமுத்தாறு பூங்கா

மணிமுத்தாறு அணை
மணிமுத்தாறு அணை

மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, கோதையாறு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லக்கூடிய நுழைவாயிலாக மணிமுத்தாறு உள்ளது. அங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவர அமைக்கப்பட்ட பூங்கா பராமரிப்பின்றி பாழாகிக் கிடக்கிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையின் நீர் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு 1958-ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் நெல்லை மாவட்டத்தில் கட்டப்பட்டதுதான் மணிமுத்தாறு அணைக்கட்டு. 118 அடி கொண்ட இந்த அணைக்கட்டு மூலம் 5,511 மில்லியன் கன அடி தண்ணீரைச் சேமிக்க முடியும். 

மணிமுத்தாறு அணை
மணிமுத்தாறு அணை

இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 22,852 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அத்துடன் இரு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது.

மணிமுத்தாறு அணை கட்டப்பட்டபோதே அதன் அருகில் மூன்று ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்கப்பட்டது. அணைக்கட்டைப் பார்க்கவும் அருவியில் குளிக்கவும் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டது. 

பயனற்றுக் கிடக்கும் நீரூற்று
பயனற்றுக் கிடக்கும் நீரூற்று

குழந்தைகள் விளையாட்டுச் சாதனங்கள், பார்வையாளர்களைக் கவரும் சிலைகள், செயற்கைக் குளங்கள், நீரூற்றுகள், காட்சி கோபுரம், சுற்றுலாப் பயணிகள் அமர்வதற்கான ஓய்வுக் கூடம் என அனைத்து அம்சங்களுடன் இந்தப் பூங்கா அமைந்திருந்தது.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளையும் குழந்தைகளையும் கவரும் வகையில் மலைப்பாம்பு, மான்கள் போன்றவையும் கூண்டுகளில் அடைத்து  வைக்கப்பட்டிருந்தன, இரவு நேரத்தில் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் வகையில் பூங்காவை அப்போது அமைத்திருக்கிறார்கள். 

புதர் மண்டிக் கிடக்கும் பூங்கா
புதர் மண்டிக் கிடக்கும் பூங்கா

ஆனால், கடந்த 20 வருடங்களாகப் பூங்கா பராமரிப்பின்றி கிடக்கிறது. பூங்காவின் சிலைகள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. நடைமேடைகள், ஓய்வெடுக்கும் அறை, பயணிகள் அமரும் இருக்கைகள் ஆகியவை புதர் மண்டிக் கிடக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் இந்தப் பகுதி, கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியாகவும் குடிமகன்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

பூங்காவைச் சீரமைக்க அவ்வப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், முழுமையாகச் சீரமைக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையே இருக்கிறது. இந்தப் பூங்காவை மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அதைக் கொடுக்காததால் பயனற்றுக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  

மணிமுத்தாறு அணை
மணிமுத்தாறு அணை

இது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ``பூங்காவைச் சீரமைக்க ஒவ்வொரு முறையும் குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுவதால் முழுமையாகச் சீரமைக்க இயலவில்லை. இது பற்றி அரசிடம் எடுத்துக் கூறி விரைவில் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் நிலைக்கு உருவாக்குவோம்’’ என்கிறார்கள்.

பின் செல்ல