Published:Updated:

`வெளிநாட்டு சாலை விதிகள்; 2,000 கேள்விகள்!' - ஓட்டுநர் உரிமத்துக்கான புதிய விதிகள்

ஓட்டுநர்களுக்கு ஹெல்மெட் வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
ஓட்டுநர்களுக்கு ஹெல்மெட் வழங்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

வெளிநாடுகளில் உள்ளதுபோல தமிழகத்தில் முதல்கட்டமாக, ரூ. 25 கோடி மதிப்பில் திருச்சியிலிருந்து செங்கல்பட்டு வரை சாலை விதிகளை மீறுவோர் மீது தானியங்கி அபராதமுறை கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக, 54 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளது.

``திருச்சி முதல் செங்கல்பட்டு வரை சாலை விதிகளை மீறுவோர் மீது விரைவில் தானியங்கி அபராத முறை செயல்படுத்தப்படும்" என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 ஓட்டுநர், நடத்துநர்களுக்கு விருது
ஓட்டுநர், நடத்துநர்களுக்கு விருது
Vikatan

சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, கரூரில் உள்ள தனியார் கலையரங்கத்தில் அரசு போக்குவரத்துத்துறை, பள்ளி, கல்லூரி நிறுவன ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மருத்துவ முகாம்
மருத்துவ முகாம்

அந்த விழாவில், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பேருந்துகளை இயக்கிவரும் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களைப் பாராட்டி, அவர்களுக்கு நினைவுக் கேடயங்கள், 50 பேருக்கு விலையில்லா தலைக்கவசங்கள், மருத்துவ முகாமில் கலந்துகொண்ட மருத்துவர்கள், செவிலியர்களைப் பாராட்டி நினைவுப் பரிசுகளை எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதோடு, கண், பொது மருத்துவச் சோதனை செய்துகொண்டனர்.

அதன் பின்னர் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், ``சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் சாலைப் பாதுகாப்பு வாரம் நடத்தப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு தமிழகத்துக்கு முதல் பரிசு வழங்கியுள்ளது. 2000-ம் ஆண்டில், 10,000 வாகனங்களுக்கு, 19 பேர் உயிரிழப்பு என்ற நிலை இருந்தது. தற்போது, அந்த எண்ணிக்கை 3 பேராகக் குறைக்கப்பட்டு, 53 சதவிகிதம் என்னும் அளவுக்கு விபத்துகள், உயிரிழப்புகளை தமிழக அரசு குறைத்துள்ளது. இதற்காக, சாலைப் பாதுகாப்பு நிதி ரூ. 20 கோடியிலிருந்து ரூ. 65 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்துக்கு பெறப்பட்ட ரூ. 15 கோடி நிதி சாலைப் பாதுகாப்பு நிதியில் உயர் மின்கோபுரங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ முகாம்
மருத்துவ முகாம்

வருங்காலங்களில் வாகன உரிமம் பெறுவதற்கு தேர்வு முறை கடுமையாக இருக்கும். இதற்காக, வெளிநாடுகளிலிருந்து சாலை விதிகள் சேகரிக்கப்பட்டு சுமார் 2,000 கேள்விகள் தயார் செய்யும் பணி நடைபெறுகிறது. விரைவில் அது இணையதளத்தில் வெளியிடப்படும். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் சாலைப் பாதுகாப்பு விதிகளைத் தெரிந்துகொள்ளும் வகையில், பாடத் திட்டத்தில் சாலை விதிகள், சாலைப் பாதுகாப்பு தொடர்பாக பாடப்பிரிவு கொண்டு வரப்படவுள்ளது.

இதற்காக, சாலைப் பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. வெளிநாடுகளில் உள்ளதுபோல தமிழகத்தில் முதல்கட்டமாக, ரூ.25 கோடி மதிப்பில், திருச்சியிலிருந்து செங்கல்பட்டு வரை சாலை விதிகளை மீறுவோர் மீது தானியங்கி அபராதமுறை கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக, 54 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளது. அதுபோல், விதிமீறி வாகனம் ஓட்டியோர் அபராதத்தைச் செலுத்தினால் மட்டுமே தனது வாகனத்தை விற்க முடியும் என்னும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. விபத்து நிவாரண நிதி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.180 கோடி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதே தமிழக அரசின் லட்சியமாக உள்ளது.

மருத்துவ முகாம்
மருத்துவ முகாம்

அரசுப் பேருந்துகளில் அதிகளவு பொதுமக்கள், மாணவர்கள் பயணம் செய்வதால் ஓட்டுநர்கள் கவனமாகப் பேருந்துகளை இயக்க வேண்டும். அரசு என்னதான் சட்டம் இயற்றினாலும், பொதுமக்கள் அவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். தனிநபர் ஒழுக்கம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற திட்டங்களை அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்" என்றார்.

பின் செல்ல