Published:Updated:

``பென்னிகுவிக் மதுரை வீட்டில் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை!" - அடித்துச் சொல்லும் அரசு

சர்ச்சைக்குரிய கட்டடம்
சர்ச்சைக்குரிய கட்டடம்

மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர், ``இது பொய்யான குற்றச்சாட்டு. ஜான் பென்னி குவிக் மரணமடைந்த பின் கட்டப்பட்டதுதான் அந்த இல்லம்" என்று விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டும், இந்த சர்ச்சை இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஜான் பென்னி குவிக் மதுரையில் தங்கியிருந்த இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் கட்டுகிறார்கள் என்று உள்ளூர் விவசாய சங்கம் முதல் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என தலைவர்கள் வரை வரிசையாகக் கண்டனம் எழுப்பி வருகிறார்கள்.

ஒன்றியம், ஜெய்ஹிந்த், கொங்கு நாடு என சர்சைகள் எழுந்து அடங்கிய நிலையில் தற்போது பென்னிகுவிக் தங்கியதாகச் சொல்லப்படும் மதுரை பொதுப்பணித்துறை இல்லம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர், ``இது பொய்யான குற்றச்சாட்டு. ஜான் பென்னிகுவிக் மரணமடைந்த பின் கட்டப்பட்டதுதான் அந்த இல்லம்" என்று விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டும், இந்த சர்ச்சை இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்புகாரை முதலில் எழுப்பிய பெரியாறு - வைகை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.பி.இராமனிடம் பேசினேன்.

``இது சம்பந்தமாக முதலில் மதுரை கலெக்டரிடம் மனு அளித்தோம். அவர் விடுத்த அறிக்கை ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. அதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புகார் அளிக்க சென்னை சென்றோம். அவரை சந்திக்க முடியவில்லை. அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆகியோரை சந்தித்து விளக்கி கூறினோம். அடுத்து முதலமைச்சரின் செயலாளர் அணு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் மனுவை அளித்து முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு எழுதிக் கொடுத்து வந்திருக்கிறோம். வாய்ப்பு கிடைத்தால் முதலமைச்சரை நேரில் சந்தித்து விளக்கி கூறுவோம்" என்றவரிடம்,

பெரியாறு- வைகை விவசாய சங்கத் தலைவர் எம்.பி.இராமன்
பெரியாறு- வைகை விவசாய சங்கத் தலைவர் எம்.பி.இராமன்

``பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் உள்ள கட்டடம் பற்றி கலெக்டர் அளித்துள்ள விளக்கத்தில் உங்கள் புகாரை மறுத்துள்ளார். பென்னி குவிக் அங்கு தங்கியிருந்ததற்கான வேறு ஆதாரம் ஏதும் உள்ளதா?" என்றேன்.

``அவர் அங்கு தங்கியிருந்தது உண்மை. முல்லைப் பெரியாறு அணை கட்டிக்கொண்டிருக்கும்போது பல்வேறு பணிகளுக்காகவும், அதிகாரிகள், தென் மாவட்ட விவசாயிகளை சந்திக்கவும் மதுரை வரும் அவர், அங்குதான் தங்கியிருக்கிறார். ஆறடி உயரமுள்ள அவருக்கு தகுந்தாற்போல் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. குதிரைகள் கட்டிப்போட்ட லாயம் உள்ளது. ஆனால், அவர் மரணமடைந்ததுக்குப் பிறகுதான் இந்தக் கட்டடம் கட்டப்பட்டதாக அதிகாரிகள் பொய்யான வருடத்தைக் குறிப்பிடுகிறார்கள். அதையே கலெக்டர் சொல்கிறார்.

அரசியலிலும், இலக்கியத்திலும் பல சாதனைகளை செய்த கலைஞருக்கு நூலகம் அமைக்க இவர்களுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? உலக தமிழ்சங்கம் அமைந்திருக்கும் வளாகத்தில் இடம் உள்ளது. அங்கு அமைக்கலாம். பென்னி குவிக் வசித்ததாகச் சொல்லும் அந்தக் கட்டடம் பாரம்பர்யமானது என்ற அடிப்படையிலாவது அதைப் பராமரிக்க வேண்டாமா? அது போன்ற கட்டடத்தை இப்போது கட்ட முடியாது. அவ்வளவு அருமையாக உள்ளது. அந்த இடத்தில் ஒருவேளை நூலகம் கட்டினாலும் சாதாரண மக்கள் யாரும் அங்கு வர முடியாது. முகப்புல அப்ப வச்ச கல்வெட்டை எடுத்திருக்காங்க. அந்த இல்லத்தோட நெத்தியில எழுதப்பட்டிருந்த `பெரியார் ஹவுஸ்' என்ற வார்த்தைகளை அழிச்சு இப்ப புதுசா எழுதி வச்சிருக்காங்க.

சர்ச்சைக்குரிய கட்டடம் முன் புகார் எழுப்பிய விவசாய சங்கத்தினர்
சர்ச்சைக்குரிய கட்டடம் முன் புகார் எழுப்பிய விவசாய சங்கத்தினர்

இதுபோலத்தான் ஆரப்பாளையம் அருகே ரவுண்டானா அமைக்கும்போது அதன் அருகில் அமைந்துள்ள பழங்காலத்து நீரேற்று நிலையத்தை இடிக்கப் பார்த்தார்கள். மதுரைக்கு குடிநீர் வழங்க பிரிட்டிஷ் ஆட்சியில் அமைக்கப்பட்ட முதல் குடிநீரேற்று நிலையம் அது. அந்த வரலாற்றை மக்கள் தெரிந்துகொள்ள, இடிக்கக் கூடாது என்று எல்லோரும் குரல் எழுப்பியவுடன் அது இடிக்கப்படாமல் இன்றுவரை வரலாற்றின் அடையாளமாகக் காட்சி அளிக்கிறது. அதுபோல் மதுரை நகருக்குள் பொதுப்பணித் துறையினர் குடியிருப்பு வளாகத்தில் அருமையான கட்டுமானத்தில் அமைந்துள்ள பென்னி குவிக் வசித்த இல்லத்தை இடித்துவிட்டு அங்கு நூலகம் கட்டுவது கலைஞருக்கு எப்படி பெருமை சேர்க்கும்? அது அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் பாதுகாக்கப்பட வேண்டாமா? ஒரு வரலாற்றை அழிக்கலாமா? இதைத்தான் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல சென்னை சென்றோம். குடியரசுத் தலைவர் வந்திருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. மூத்த அமைச்சர் துரைமுருகன் எங்களிடம் நன்கு விசாரித்துவிட்டு இதை சி.எம் கவனத்துக்கு கொண்டு செல்வதாகக் கூறினார். வரலாற்று ஆய்வாளர்கள், மூத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தாலே அரசுக்கு உண்மை தெரிந்துவிடும். அதையும் மீறி அங்கு கட்டுமானம் எழுப்பினால் உயர் நீதிமன்றம் செல்வோம்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``பென்னி குவிக் மரணத்துக்குப் பின்புதான் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் கட்டடம் கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை புகார் எழுப்பிய விவசாய அமைப்பினர் மறுக்கிறார்களே?" என்று மதுரை கலெக்டர் அனீஷ் சேகரிடம் பேசினோம்.

கலெக்டர் அனீஷ் சேகர்
கலெக்டர் அனீஷ் சேகர்
`பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை இடித்து நூலகமா?' தி.மு.க vs அ.தி.மு.க; யார் சொல்வது உண்மை?

``எந்த ஆதாரமும் இல்லாமல் சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வது? பொதுப்பணித்துறை பதிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுதியான தகவலின் அடிப்படையில்தான் நாங்கள் அப்படி தெரிவித்தோம். வரலாற்று ரீதியாகவு ஆய்வு செய்தாலும் அதுதான் உண்மை. அதில் வேறு எந்த மாற்றமும் இல்லை" என்றார் அவர்.

ஆண்டுதோறும் பென்னி குவிக் பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடி அவர் புகழை தினமும் பேசிக்கொண்டிருக்கும் தேனி மாவட்டம் பாலார்பட்டியைச் சேர்ந்த கர்னல் பென்னிகுவிக் எழுச்சிப் பேரவைத் தலைவர் ஓ.ஆண்டியிடம் இது சம்பந்தமாகப் பேசினேன்.

``நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் வெள்ளக்கார துரை என்று பென்னிகுவிக்கின் பெயரைக்கூட சொல்லாமல் மக்கள் அவர் பெருமையைப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால், நடிகர்கள் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் இளவட்டங்கள் ஆர்வம் காட்டுவார்கள். கல்லூரியில் படிக்கும்போது எங்க ஆசிரியர் ஒருவர், பென்னிகுவிக் மட்டும் இல்லேன்னா பலபேர் இப்பகுதியில் படிச்சிருக்க முடியாது. ஆடு மாடு மேய்க்க போயிருப்பாங்க. இல்லே, வெளியூருக்கு வேலை தேடி போயிருப்பாங்க என்பார். அப்போதிருந்து பென்னிகுவிக் பிறந்த நாள் விழாவை கொண்டாடனும்கிற எண்ணம் ஏற்பட்டுச்சு. ஆனாலும், அவர் பிறந்த தேதி யாருக்கும் தெரியல. அதைத்தேடி அலைஞ்சேன்.

ஓ.ஆண்டி
ஓ.ஆண்டி

அப்பத்தான் பல ஆய்வு நூல்களை எழுதிய பேராசிரியர் வர்கீஸ் ஜெயராஜ் பற்றிக் கேள்விப்பட்டேன். அவர்தான் பென்னி குயிக் வரலாறு பற்றி ஆய்வு செய்ததாகச் சொன்னார்கள். அவரிடம் தொடர்ந்து முயற்சி செய்ததில் பென்னி குயிக் பிறந்த தேதியை தெதிவித்தார். அது தெரிந்தவுடன் கடந்த 2000-ம் ஆண்டு முதல் பென்னிகுவிக் பிறந்த நாள் விழாவை சாதாரணமாகத் தொடங்கி தற்போது பெரியளவில் நடத்தி வருகிறோம். அவர் பேரன் சாம்சன் 2003-ல எங்க ஊருக்கு வந்தார். அதுபோல் முல்லை பெரியாறு போராட்டத்தை முதலில் தொடங்கியதும் நாங்கதான். எங்க ஊரில் பென்னிகுவிக் மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தினர் அனைவரின் பேரையும் வைக்கிறார்கள்.

என்னோட மகளுக்கு பென்னி குவிக்கின் அம்மா சாரா பெயரை வைத்திருக்கிறேன். அப்படி பென்னி குவிக்கின் குடும்பத்தின் மீது அவ்வளவு நெருக்கமாகவும், அவருடைய வரலாற்றை நன்கு தெரிந்தவர்களாகவும் இருக்கும் எங்களுக்கு அவர் எங்கு வாழ்ந்தார், எங்கெங்கு சென்றார் என்பதெல்லாம் தெரியாதா?

பாலார்பட்டியில் நடந்த பென்னி குவிக் பிறந்த நாள் விழா
பாலார்பட்டியில் நடந்த பென்னி குவிக் பிறந்த நாள் விழா
சேதமான பென்னிகுவிக் கல்லறையை சீர்செய்தது யார்? உரிமை கொண்டாடும் அரசியல் கட்சிகள்... உண்மை என்ன?

எங்களுக்குத் தெரிந்து அவர் மதுரையில் வசிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் பெரியாறு டேம் இங்க கட்டும்போது அவ்வளவு தூரமுள்ள மதுரையில தங்கியிருக்க வாய்ப்பில்லை. கூடலூரில் பொதுப்பணித் துறை அலுவலகம் உள்ளது. அங்கு அவர் தங்கின வீடு உள்ளது. தேக்கடியிலும், மேல மெயின் டேமிலும் வசித்திருக்கிறார். கொடைக்கானலிலுல் அவர் தங்கியிருக்கிறார். அங்கு அவருக்கு 6 ஏக்கர் பட்டா நிலம் இருந்தது. இதுதான் உண்மை. மற்றபடி மதுரையில் அவர் தங்கினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு