Published:Updated:

சேலம்: அருகிலேயே மதுக்கடை; மதுபோதையில் வகுப்புக்கு வரும் மாணவர்கள்! - கல்லூரி முதல்வர் புகார்

அறிஞர் அண்ணா அரசு கல்லூரி

சேலத்தில் கல்லூரி அருகே மதுக்கடை அமைந்திருப்பதால் மாணவர்கள் மதுபோதையில் கல்லூரி வருவதாக வேதனை தெரிவிக்கிறார்கள் ஆசிரியர்கள்.

சேலம்: அருகிலேயே மதுக்கடை; மதுபோதையில் வகுப்புக்கு வரும் மாணவர்கள்! - கல்லூரி முதல்வர் புகார்

சேலத்தில் கல்லூரி அருகே மதுக்கடை அமைந்திருப்பதால் மாணவர்கள் மதுபோதையில் கல்லூரி வருவதாக வேதனை தெரிவிக்கிறார்கள் ஆசிரியர்கள்.

Published:Updated:
அறிஞர் அண்ணா அரசு கல்லூரி

சேலம் தலைவாசல், வடசென்னிமலையில் அமைந்திருக்கிறது அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி. இதில், சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் கல்லூரி வரும் மாணவர்கள் பலர் மதுக்கு அடிமையாகி கல்லூரி நேரங்களில் மது அருந்திவிட்டு வருவதாகவும், வகுப்பறைக்குள்ளேயும் அதனை வாங்கி எடுத்து வருவதாகவும் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்களிடம் விசாரித்தபோது, ``கல்லூரி, பள்ளி அமையப்பெற்றிருக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைந்திருப்பது பெரிதும் வேதனையளிக்கிறது. அதைவிட கல்லூரிக்கு அருகே மாணவர்கள் டாஸ்மாக்கில் மது வாங்கிக் குடிப்பதை பார்த்தால் கொடுமையாக இருக்கிறது. இதனால் பெண் பிள்ளைகளை பள்ளிக் கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கே அச்சமாக இருக்கிறது" என்றனர்.

கல்லூரி முதல்வர் சித்ரா
கல்லூரி முதல்வர் சித்ரா

மேலும், அரசு அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் சித்ரா பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ``இந்தக் கல்லூரியில் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் படித்து வருகிறார்கள். கல்லூரிக்கு மாணவர்கள் காட்டுக்கோட்டை பஸ் நிறுத்தத்தில்தான் இறங்கி வருகின்றனர். வரும்பாதையில் கல்லூரிக்கு அருகில் அரசு டாஸ்மாக் கடை இருந்து வருகிறது. இதனால் கல்லூரிக்கு வரும்போதே மது அருந்திவிட்டு வருகிறார்கள். இல்லையென்றால் வகுப்பை புறக்கணித்துவிட்டு மது அருந்தச் செல்கின்றனர். நாங்களும் கல்லூரிரீதியாக மாணவர்கள்மீது நடவடிக்கை எடுத்தும் எந்தவித பலனும் இல்லை. மதுபோதையில் மாணவர்கள் சமூக விரோத செயல்களிலும், ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகளுக்கு எதிராக நடந்துவரும் பல குற்றச்செயல்கள் பெரும்பாலும் போதையின் விளைவாகவே நடக்கின்றன. அந்த வகையில் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சேலம் ஆட்சியரிடம் இது தொடர்பாக புகாராளித்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் கார்மேகம்
மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

இந்த விவாகரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் பேசினோம். ``இது குறித்து தாசில்தார் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். உண்மையிலேயே பிரச்னைக்குரிய இடத்தில்  இருந்தால் உடனே அந்த மதுக்கடையை அகற்ற தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.