Published:Updated:

நீலகிரி: குரல் கொடுத்த விகடன்; பழங்குடிகளின் துயர் துடைத்த மாவட்ட நிர்வாகம்!

உதவிக்கரம் நீட்டிய மாவட்ட நிர்வாகம்
உதவிக்கரம் நீட்டிய மாவட்ட நிர்வாகம்

நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி மலைக்கிராமங்களில் வாழும் மலையக மக்கள் உணவுப் பொருள்கள் இன்றி தவித்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், ஏழை, எளிய மக்கள் சிலர் உணவுக்கே சிரமப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடி மலைக்கிராமங்களில் வாழும் மலையக மக்கள் உணவு பொருள்கள் இன்றி தவித்து வருகின்றனர்.

 பழங்குடிகள்
பழங்குடிகள்

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை குளி மூலா பகுதியில் இருந்து பெண் ஒருவர் நம்மை போனில் தொடர்பு கொண்டு பேசினார். ``அண்ணா, எங்க ஊர்ல 11 குடும்பத்துக்கு ரேஷன் கார்டு இல்ல. சமைக்க அரிசியும் இல்ல. அரசாங்கம் குடுத்த ரூ.2,000 பணமும் கிடைக்கல. இதுவரை இருந்த காச வச்சு கடைல அரிசி வாங்கினோம். வேலை இல்லாததால இப்போ அதுக்கும் பணம் இல்ல. எங்களுக்கு ஏதாவது உதவி கிடைச்சா நல்லா இருக்கும்..." என்றார்.

இந்த விவகாரத்தை உடனடியாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் கொண்டு சென்றோம். ``அவர்களின் விவரங்களை அனுப்பி வையுங்கள், உடனடியாக உதவி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்றார். இது குறித்து விகடன் இணையதளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இன்று காலை அந்தக் கிராமத்திலிருந்து அதே பழங்குடிப் பெண் நம்மை தொடர்பு கொண்டார். ``அண்ணா... நேத்து சாயங்காலமே கலெக்டெர் சொன்னதா அதிகாரிங்க வந்தாங்க. வந்து வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள் எல்லாம் கொடுத்துட்டுப் போனாங்க. காலைல வந்து அரசி கொடுக்கிறதா சொன்னாங்க. சொன்ன மாதிரியே காலைல வந்து எல்லாருக்கும் அரசி குடுத்தாங்க. ரொம்ப நன்றி..." என மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

உதவிக்கரம் நீட்டிய மாவட்ட நிர்வாகம்
உதவிக்கரம் நீட்டிய மாவட்ட நிர்வாகம்

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசினோம். ``முதல் கட்டமா இவங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை கொடுத்துருக்கோம். இவங்களுக்கான ரேஷன் கார்டு மற்றும் மற்ற தேவைகளை உடனடியா கிடைக்க ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கோம்" என்றார்.

நமது குரலுக்கு செவிமடுத்து, பழங்குடி மக்களின் துயரை உடனடியாகத் துடைத்த மாவட்ட நிர்வாகத்துக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தோம்.

அடுத்த கட்டுரைக்கு