நீலகிரி மாவட்டம், முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பழங்குடி கிரமங்கள் உள்ளன. பல கிராமங்களில் பழங்குடி மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்துவருகின்றனர். அதிகாரிகள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மக்களை வனத்திலிருந்து வெளியேற்றிவருகின்றனர். இதனால், பல இடங்களில் பெரிய அளவிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்த நிலையில், கூவக்கொல்லிப் பகுதியில் செயல்பட்டுவரும் ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளிக்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லாத காரணத்தால் ஊராட்சி அலுவலகக் கட்டட வளாகத்தில் வகுப்புகள் நடத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய முதுகுளி மக்கள், ``இந்தப் பகுதியில் பல கிராமங்களுக்குச் சாலை வசதி கிடையாது. மண் பாதை மட்டுமே இருக்கிறது. மழைக் காலங்களில் இந்த மண் பாதைகளில் நடக்கவே முடியாது. இதனால், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. அருகிலிருக்கும் அரசுக் கட்டட வாசலில் அமர்ந்து படிக்கிறார்கள்" என்றனர்.
இந்த விவகாரம் குறித்து கூடலூர் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். ``இந்தப் பள்ளியில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இன்று ஒரு நாள் மட்டும் ஊராட்சி அலுவலக வளாகத்தில் வகுப்புகள் நடத்தப்படும். நாளை மாற்று ஏற்பாடு செய்யப்படும்" என உறுதியளித்தனர்.
