தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அருகேயுள்ள கீழநவ்வலடியைச் சேர்ந்தவர் சித்திரைவேலு. இவரின் மனைவி அம்மாள் தங்கம். 67 வயதான இவர், கடந்த சில நாள்களாக மாரடைப்பினால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்குப் பிறகு வீட்டிலேயே ஓய்வெடுக்கச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். கணவர் மற்றும் உறவினர்களும் வெளியில் செல்ல வேண்டாமென கூறியுள்ளனர். ஆனால், தனக்கு உடல் நிலை சீராகவே உள்ளது எனச் சொல்லி, வயல்வெளியில் புற்கள் அறுப்பதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில், பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன்,உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார் மற்றும் போலீஸார் வயல்வெளிக்குச் சென்று அம்மாள் தங்கத்தின் உடலை மீட்டனர். ஆனால், அது வயல்வெளிப் பகுதி என்பதால் வாகனப் போக்குவரத்து வசதி இல்லை.
இந்த நிலையில், சற்றும் யோசிக்காமல் காவலர் காளிமுத்து என்பவர் உயிரிழந்த அம்மாள் தங்கத்தின் உடலை சுமார் 1.5 கி.மீ தூரம் தோளில் சுமந்தபடியே மெயின் சாலைக்குக் கொண்டு வந்தார். அந்தக் காவலரை ஊர் மக்கள் பாராட்டினர். குரும்பூர் காவல் நிலைய போலீஸாரிடம் பேசினோம்.

``வயல்வெளியில வயதான பாட்டிம்மா ஒருவரின் உடல், உயிரிழந்த நிலையில் கிடக்கிறது என ஸ்டேஷனுக்கு போன் வந்தது. ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸ் டீம் அந்த வயல்வெளிக்குப் போனோம். அங்கு வயல்வெளியில அந்தம்மா உயிரிழந்த நிலையில கிடந்தாங்க. பாரக்கவே ரொம்ப பரிதாபமா இருந்துச்சு. அக்கம் பக்கத்துல விசாரிச்சோம்.
அந்தம்மாவுக்கு மூணு நாளுக்கு முன்னால நெஞ்சுவலி வந்திருக்குது. வீட்ல ஒய்வெடுக்கச் சொல்லி உறவினர்கள் கூறியும், ஆடுகளுக்குத் தீவனத்துக்காக புல்லு வெட்ட வந்திருக்காங்க. அந்த நேரத்துல மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துட்டாங்க. அது வயல்வெளிங்கிறதுனால பைக் கூட போக முடியாது. என்ன செய்யுறதுன்னு யோசிச்சிட்டிருந்தோம். அந்த நேரத்துல காவலர் காளிமுத்து, ``சார்… பாட்டியம்மாவ நான் தூக்கிக்கிறேன்.

ஆம்புலன்ஸை மெயின் ரோட்டுக்கு வரச் சொல்லுங்க’’ன்னு சொல்லி உடனே அந்தம்மாவைத் தூக்கி தோளில் போட்டுட்டு வரப்பு மேலயே வேகமாக நடக்க ஆரம்பிச்சுட்டார். எதையும் யோசிக்காம அந்தம்மாவை தூக்கினதைப் பார்த்தப்போ எங்களுக்கே கண் கலங்கிடுச்சு” என்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், காவலரின் மனிதநேயச் செயலை பாரட்டி பொன்னாடை அணிவித்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.