Published:Updated:

`இந்த நடவடிக்கையால் இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பிரச்னை இல்லை' - நிலத்தடி நீரை மேம்படுத்தும் கரூர்!

துரை.வேம்பையன்
நா.ராஜமுருகன்

அனைத்து அரசுக்கட்டடங்களிலும் மழைநீர் சேகரிக்கும் அமைப்பு உள்ளதை உறுதிசெய்து, தனியார் வீடுகளிலும் இந்த அமைப்பை வைக்க வலியுறுத்துவோம்.

அதிகாரிகளின் தடுப்பணை ஆய்வு
அதிகாரிகளின் தடுப்பணை ஆய்வு ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், தனியார் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக, கிராமத் தொழில் ஆணையத்தின் நிதி ஆலோசகர் உஷா சுரேஷ் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையிலும், மழைநீர் சேகரிப்புக்கான வழிவகைகளை மேற்கொள்ளும் வகையிலும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மத்திய அரசின் சார்பில் கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் நிதி ஆலோசகர் மற்றும் இணைச்செயலாளர் உஷாசுரேஷ் தலைமையிலான ஜல் சக்தி அபியான் (JAL SAKTHI ABHIYAN) குழுவினர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனும் ஆலோசனக்கூட்டம் நடத்தினர்

அரசு அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம்
அரசு அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம்
நா.ராஜமுருகன்

இக்குழுவில் மத்திய அரசின் பெருநிறுவன விவகாரத்துறையின் துணைச் செயலர் வைத்தீஸ்வரன், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துணைச் செயலர் அச்சுட்டியா நந்த் ஜெனா, தேசிய நீர் மேம்பாட்டு ஆணையத்தின் துணை இயக்குநர் கிருஷ்ணா ரெட்டி, வணிகவியல் துறை துணைச் செயலர் வெங்கடாஜலபதி, புனேவில் உள்ள மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி புரோகித், தேசிய நீர் நிலை நிறுவனத்தின் விஞ்ஞானி ராஜேஸ்சிங் ஆகிய அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். இக்கூட்டத்தில் கரூர் மாவட்டம் முழுவதும் நகரம் மற்றும் ஊரகப்பகுதிகளில் நீர்மேலாண்மை குறித்தும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கும், மழை நீர் சேகரிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

`தொடர் வாசிப்பின் வழி நான் கண்டடைந்த இன்னொரு சொர்க்கம் எழுத்து!’ - எழுத்தாளர் கே.வி.ஷைலஜா #LetsRelieveStress

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலமாக ஏரி, குளங்களை துர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது, பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு தொடர்ந்து பராமரிக்கப்படுவது, தடுப்பணைகள் கட்டப்பட்டு வருவது, உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், இந்தப்பணிகளால் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலை குறித்தும் பகுதிவாரியாக ஆலோசிக்கப்பட்டது.

அதிகாரிகள் தடுப்பணை ஆய்வு
அதிகாரிகள் தடுப்பணை ஆய்வு
நா.ராஜமுருகன்

இக்கூட்டத்தில் மத்தியக் குழுவின்சார்பில் கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் நிதி ஆலோசகர் மற்றும் இணைச்செயலாளர் உஷா சுரேஷ் அவர்கள் பேசியதாவது, "கரூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும் என்பதை நோக்கி அடுத்தகட்ட திட்டங்களை வகுக்க உள்ளோம். கரூர் மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகமாக உள்ள பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி நிலத்தடி நீரை செறிவூட்டவும், மழை நீரை சேமிக்கவும் நீண்ட காலத்திற்கு நீர்ப்பற்றாக்குறை வராத அளவிற்கு திட்டங்களை வகுத்து மத்திய அரசிற்கு பரிந்துரைக்க உள்ளோம்.

அனைத்து அரசுக்கட்டடங்களிலும் மழைநீர் சேகரிக்கும் அமைப்பு உள்ளதை உறுதிசெய்து, தனியார் வீடுகளிலும் இந்த அமைப்பை வைக்க வலியுறுத்துவோம். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் பொதுக்கிணறுகள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யவும் தேவையான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். இக்குழுவின் முதல்கட்ட ஆய்வு செப்டம்பர் 13 வரையிலும், இரண்டாம் கட்ட ஆய்வு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் நடைபெறவுள்ளது.

அதிகாரிகள் தடுப்பணை ஆய்வு
அதிகாரிகள் தடுப்பணை ஆய்வு
நா.ராஜமுருகன்

டிசம்பர் இறுதியில் மத்திய அரசிற்கு நீர் மேலாண்மைக்கு தேவைப்படும் திட்டங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். 2020ஆம் ஆண்டிற்குள் அனைத்துக் குடிமக்களுக்கும் தேவையான குடிநீர் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாகும். இப்போது எடுக்கும் இந்த நடவடிக்கையால் இன்னும் 5 வருடங்களுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது" என்றார்.