Published:Updated:

`4 யானைகள்; 300 கிலோ அரிசி!' - நீலகிரியில் நள்ளிரவில் அலையும் யானைக் கூட்டம்

யானைகள்
யானைகள்

குந்தா பகுதியில் உலவும் நான்கு யானைகளைக் கொண்ட கூட்டமும் அரிசியை உண்ணத் துவங்கியுள்ளன. இது மேலும் மனித - விலங்கு எதிர்கொள்ளலை அதிகரிக்கும் என கவலை தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

தென்னிந்தியாவில் ஆசிய யானைகள் அதிகம் வாழும் பகுதிகளில் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் மிக முக்கியப் பகுதியாக உள்ளது முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம், முத்தங்கா காட்டுயிர் சரணாலயம், நீலகிரி வனப்பகுதிகள். இவையே ஆசிய யானைகளின் கடைசி புகலிடமாக இருக்குமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உணவு மற்றும் தண்ணீரைத் தேடி இரவு நேரங்களில் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குன்னூர், குந்தா பகுதிகளிலும் யானைக் கூட்டங்கள் உலவுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

யானைகள்
யானைகள்

மேலும், யானை மனித எதிர்கொள்ளல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. எதிர்கொள்ளல்களைத் தவிர்க்கின்றோம் என்ற பெயரில் ஊருக்குள் வரும் யானைகளை பட்டாசுகளை வெடிக்கச் செய்தும், தீப்பந்தங்களைக் காட்டியும் விரட்டுகின்றனர். ஆனால், திரும்பவும் யானைகள் ஊருக்குள் வருகின்றன. `இதுபோன்ற செயல்கள் தற்காலிகத் தீர்வை தருமே தவிர, யானைகளை ஆக்ரோஷமாக மாற்றி சிக்கலை உண்டுபண்ணும்' என காட்டுயிர் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், குந்தா சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு குட்டியுடன் கூடிய நான்கு யானைகள் கொண்ட சிறிய கூட்டம் ஒன்று உலவி வருகிறது. இன்று அதிகாலை குன்னூர் அருகிலுள்ள கிரேக் மோர் எஸ்டேட்டில் நுழைந்து அங்கிருந்த மளிகை மற்றும் ரேஷன் கடை உள்ளே வைக்கப்பட்டிருந்த அரிசியை அள்ளித்தின்றுச் சென்றன. மேலும், கடந்த பல ஆண்டுகளில் யானை நடமாட்டம் இல்லாத இடங்களுக்குக் கூட தற்போது யானைகள் வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிரேக்மோர் எஸ்டேட் ரேஷன் கடை
கிரேக்மோர் எஸ்டேட் ரேஷன் கடை

இதுகுறித்து காட்டுயிர் ஆர்வலர் விஜய் கூறுகையில், ``நீலகிரியில் யானைகள் வாழ்வதற்கான சூழல் படிப்படியாக குறைந்து வருகிறது. நாளுக்கு நாள் தொடரும் கட்டடப் பெருக்கம், அதிகரிக்கும் ரிசார்ட்டுகள், வேளாண்மை விரிவாக்கம், புதிய புதிய சாலைகள் போன்றவை யானைகளை பேரிடருக்கு இட்டுச் செல்கின்றன. யானைகளும் வேறு வழியின்றி நேரடியாக மனிதர்களிடம் சண்டையிட்டு, தனது உணவை தேடிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அப்போதும் மின்வேலியில் சிக்கிக் இறக்கும் சம்பவங்களும் நடப்பதுண்டு. ஊருக்குள் வரும் யானையைக் காட்டுக்குள் விரட்டியடிப்பது நிரந்தரத் தீர்வாகாது. அதற்கான வாழ்விடத்தை மீட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான உடனடி பணியை அரசு துவக்கினால் மட்டுமே தீர்வாகும்" என ஆவேசப்படுகிறார்.

குடோன்
குடோன்

யானைகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுவரும் பெயர் குறிப்பிட விரும்பாத பேராசிரியர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``நீலகிரி மலையில் கூடலூர், கல்லார், கெத்தை, குஞ்சப்பனை ஆகிய நான்கு புறங்களில் இருந்தும் யானைக் கூட்டங்கள் உணவு, தண்ணீருக்காக வாழிடம் தேடி மலையில் முன்னேறி வருகின்றன. இவற்றுக்கும் இது ஒன்றுதான் வழி. யானையை விரட்ட முடியாமல் வனத்துறையும் திணறிவருகிறது. தற்போது குந்தா பகுதியில் உலவும் நான்கு யானைகளைக் கொண்ட கூட்டமும் அரிசியை உண்ணத் துவங்கியுள்ளது. இது மேலும் மனித - விலங்கு எதிர்கொள்ளலை அதிகரிக்கும். வழித்தட மீட்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என கவலை தெரிவித்தார்.

பின் செல்ல