Published:Updated:

நீலகிரி: 2 மாதங்களில் 11 மாடுகள்; புலி தாக்கிக் கொல்லப்பட்ட மாட்டுடன் வனத்துறை அலுவலகம் முற்றுகை!

நீலகிரி மாவட்டம், கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் 10-க்கும் அதிகமான பசுமாடுகளைப் புலி தாக்கியிருப்பதால், ஆத்திரமடைந்த கூடலூர் மக்கள் இறந்த மாட்டுடன் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் மனித-வன விலங்கு எதிர்கொள்ளல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்தவண்ணமே உள்ளன. குறிப்பாக, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள குடியிருப்புகளை ஒட்டியே யானை, புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றன. இது போன்ற சமயங்களில் எதிர்கொள்ளல்கள் மேலும் அதிகரிக்கின்றன.

முற்றுகையிட்ட மக்கள்
முற்றுகையிட்ட மக்கள்

இந்தநிலையில், கூடலூர் ஸ்ரீமதுரை ஊராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடமாடிவரும் புலி ஒன்று, கால்நடைகளை வேட்டையாடிவருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 10-க்கும் அதிகமான பசுமாடுகளை அது தாக்கியிருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துவந்தனர். இதே பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவரின் ஆறு மாத கன்றுக்குட்டியை புலி தாக்கிக் கொன்றது. தொடர் சம்பவங்களால் ஆவேசமடைந்த ஸ்ரீமதுரை மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

நீலகிரி: `கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி முடித்த முதல் மாவட்டம்!’ - நம்பிக்கை பகிரும் கலெக்டர்

புலி தாக்கியதில் கொல்லப்பட்ட கன்றுக்குட்டியின் உடலை வாகனம் மூலம் கொண்டுவந்து, கூடலூர் கோட்ட வன அலுவலகத்தை ஊராட்சித் தலைவர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டனர். கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக மறியலைக் கைவிட்டனர்.

முற்றுகையிட்ட மக்கள்
முற்றுகையிட்ட மக்கள்

பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாததால், கூடலூர் கோட்ட வன அலுவலகத்திலிருந்து பொதுமக்கள் ஊர்வலமாக தொரப்பள்ளி வனத்துறை சோதனைச்சாவடிக்கு உயிரிழந்த கன்றுக்குட்டியின் உடலைத் தூக்கியபடியே ஊர்வலமாக வந்தனர். கூடலூர் அதிமுக எம்.எல்.ஏ ஜெயசீலன் தலைமையில் மீண்டும் மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம், கேரளா, கர்நாடகா என‌ மூன்று மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போராட்டம் குறித்து ஸ்ரீமதுரை மக்கள், ``ஊருக்குள் புகுந்து விநாயகன் என்ற காட்டுயானை பயிர்களைச் சேதம் செய்துவருகிறது. தற்போது ஆடு மாடுகளை புலி தாக்கிவருகிறது. இதைத் தடுக்கக் கோரி‌ பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்" என்றனர்.

முற்றுகையிட்ட மக்கள்
முற்றுகையிட்ட மக்கள்

இது குறித்து தெரிவித்த கூடலூர் வனத்துறையினர், ``கால்நடைகளைத் தாக்கிவரும் புலியைக் கூண்டுவைத்து பிடிக்க உறுதி அளித்திருக்கிறோம். மேலும் விநாயகன் யானை ஊருக்குள் வராமல் தடுக்க நான்கு கும்கி யானைகளை ஸ்ரீமதுரை ஊராட்சிப் பகுதியில் நிறுத்தி கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு