Published:Updated:

`மயானத்துக்கு எதிரில் 2 மதுபானக் கடைகள்!' - கொதிக்கும் கூடலூர் மக்கள்

மதுபானக் கடைகள்
மதுபானக் கடைகள்

`இறுதிச் சடங்கைக்கூட சண்டை சச்சரவு இல்லாமல் நடத்த முடிவதில்லை. சுடுகாட்டுக்கு வரும் மக்களைக் குறிவைத்து ஆதாயம் பார்க்க நினைப்பது மோசமான செயல்'.

கடந்த 2003-ம் ஆண்டு, தமிழ்நாடு வாணிபக்கழகம் மூலம் மதுபான விற்பனை தொடங்கப்பட்டது. அதுவரை தனியார் கைவசம் இருந்த மதுபான விற்பனை அரசின் வசம் மாறியது. தற்போது, அரசுக்கு வருவாய் அளிக்கும் முக்கிய துறையாக டாஸ்மாக் உள்ளது.

மதுபானக் கடைகள்
மதுபானக் கடைகள்

நீலகிரியில், ஆரம்பத்தில் 130-க்கும் அதிகமான கடைகள் திறக்கப்பட்டன. மதுபானக் கடைகள் ஆரம்பித்த சமயங்களில் மக்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த மதுபானக் கடைகளால் ஏராளமான குடும்பங்கள் பாதிப்படைந்தன. இதனால் கடைகளை அகற்றக்கோரி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதாலும், நீதிமன்ற உத்தரவுகளாலும் பெரும்பாலான கடைகள் அகற்றப்பட்டன.

தற்போது, நீலகிரியில் 60-க்கும் குறைவான கடைகளே உள்ளன. இதிலும் சில மதுபானக் கடைகளை அகற்றக்கோரி மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மதுபானக்கடை
மதுபானக்கடை

நீலகிரி மாவட்டம் கூடலூரில், நகராட்சி மயானத்திற்கு எதிரில் அரசின் 2 மதுபானக் கடைகள் அடுத்தடுத்து செயல்பட்டு வருகின்றன. மயான நுழைவு வாயிலுக்கு எதிரில் இந்தக் கடைகள் இருப்பதால், இறுதிச் சடங்குக்கு வரும் பெரும்பாலனோர், மதுபானக் கடைகளுக்குள் என்ட்ரி ஆன பின்னரே மயானத்திற்குள் நுழைகின்றனர். இதனால் இங்கு நடைபெறும் எல்லா இறுதிச் சடங்குகளிலும் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த மதுபானக் கடைகள் குறித்து நம்மிடம் பேசிய கூடலூர் மணி, ``கூடலூர் நகரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, காளம்புழா. இந்தப் பகுதியில் மயானம் உள்ளது. அங்கு, கூடலூர் நகராட்சி சார்பில் ரூ.6 கோடி செலவில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. இதன் எதிரில், ஒரு கடை பத்தாது என இரண்டு கடைகள் திறக்கப்பட்டன. இதனால் நாள்தோறும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்" என்றார் வேதனையுடன்.

எரிவாயு தகன மேடை
எரிவாயு தகன மேடை

இதுகுறித்து கூடலூரைச் சேர்ந்த கமலா, ``இந்த வழியில், பகலில் கூட நடந்துபோக முடியாது. ஊரில் சாவு விழுந்தால் கடைக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான். இறுதிச்சடங்கில் பங்கேற்கும் துயர மனநிலையில் இருக்கும் ஆண்கள், இங்கே அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, மயானத்தில் மயங்கிக் கிடக்கின்றனர். ஒரு சிலர், இதே இடத்தில் போதையில் தற்கொலையும் செய்துள்ளனர்.

இறுதிச் சடங்கைக்கூட சண்டை சச்சரவு இல்லாமல் நடத்த முடிவதில்லை. சுடுகாட்டுக்கு வரும் மக்களைக் குறிவைத்து ஆதாயம்பார்க்க நினைப்பது மோசமான செயல். எனவே, இவற்றை வேறு இடத்திற்கு உடனடியாக மாற்ற வேண்டும்" என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

மயானம்
மயானம்

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள்,``கூடலூர் நகரின் பிரதான சாலைகளில் அரசு மதுக் கடைகளை நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், நகரில் இருந்த இரண்டு டாஸ்மாக் மதுக் கடைகளும் காளம்புழா பகுதியில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் எந்த உள் நோக்கமும் இல்லை" என்கின்றனர் .

பின் செல்ல