Published:Updated:

கொரோனா லாக்டௌன் - குடியாத்தம் சிரசுத் திருவிழா ரத்து #StayHome

சிரசுத் திருவிழா (கோப்புப் படம்)
சிரசுத் திருவிழா (கோப்புப் படம்)

மே மாதம் நடைபெற இருந்த புகழ்பெற்ற குடியாத்தம் சிரசுத் திருவிழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரசித்திபெற்ற அம்மன் கோயில் திருவிழாக்களில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள கெங்கையம்மன் சிரசு பெருவிழாவும் ஒன்று. ஆண்டுதோறும் வைகாசி முதல் நாள் இந்த விழா நடைபெறும். காப்புக் கட்டுதலுடன் தொடங்கி லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் சிரசு மிதந்து வரும். அப்போது, தாரைத் தப்பட்டை முழங்க மேள தாளங்களுடன் அம்மனுக்குச் சீர்வரிசை எடுத்து வரப்படும்.

சிரசுத் திருவிழா (கோப்புப் படம்)
சிரசுத் திருவிழா (கோப்புப் படம்)

ஊர்வலத்தைத் தொடர்ந்து சண்டாளச்சி அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன் பிறகு, கெங்கையம்மன் சாந்த சொரூபியாக மாறி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்தக் காட்சியைக் காண அவ்வளவு சிறப்பாக இருக்கும். சிரசு விழாவையொட்டி, அன்று ஒரு நாள் வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையும் விடப்படும்.

இந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து மத விழாக்களும் ரத்து செய்யப்படுகிறது என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார். அதேபோல், மே மாதம் நடைபெற இருந்த புகழ்பெற்ற சிரசுத் திருவிழாவுக்கும் அனுமதியில்லை என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

இதனால், வேலூர் மாவட்ட மக்களும் பக்தர்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். அதே சமயம், கொரோனாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போரில் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டிலிருப்பதாகவும் அடுத்த ஆண்டு முதல் சிரசு திருவிழாவைக் கொண்டாடிக் கொள்ளலாம் என்றும் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு