Published:Updated:

நெல்லை: மீண்டும் திரும்பிய வடமாநிலத் தொழிலாளர்கள்! - வேகம்காட்டும் தொழில் நிறுவனங்கள்

வடமாநிலத் தொழிலாளர்கள்
வடமாநிலத் தொழிலாளர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்குச் சென்ற வடமாநிலத் தொழிலாளர்கள் தற்போது மீண்டும் பணிக்காகத் திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் தொழில் நிறுவனங்கள் மீண்டும் வேகமாகச் செயல்படத் தொடங்கியுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் தங்கியிருந்து, சொந்த வியாபாரம் செய்வது மற்றும் தொழில் நிறுவனங்களில் வேலை செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார்கள்.

கூடங்குளம் அணு உலை
கூடங்குளம் அணு உலை

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் 3 மற்றும் 4-வது அணு உலைக்கான கட்டுமானப் பணிகளிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் 5,000-க்கும் அதிகமானோர் ஈடுபட்டு வந்தார்கள். இது தவிர, மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திலும் ஏராளமானோர் பணியாற்றி வந்தார்கள்.

`நான் மீண்டும் வருவேன் சார்...’ -ரயிலில் சொந்த ஊர் சென்ற ஜார்க்கண்ட் தொழிலாளி உருக்கம்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், வடமாநிலத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்தார்கள். சிலர், உணவுக்குக் கூடத் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதனால் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினார்கள்.

மீண்டும் திரும்பிய வடமாநிலத் தொழிலாளர்கள்
மீண்டும் திரும்பிய வடமாநிலத் தொழிலாளர்கள்

பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டதால், சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்த நிலையில், மத்திய அரசின் சார்பாக ரயில் சேவை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைவருமே சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

கொரோனா ஊரடங்கில் தற்போது சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அளித்து வருகின்றன. அதன்படி, தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லாததால் பணிகள் முடங்கிக் கிடந்தன.

'வலிகளோடு போகிறோம்... திரும்ப வருவோம்!' -திருச்சியில் உருகிய வடமாநிலத் தொழிலாளர்கள்

தொழிற்சாலைகளுக்குப் பணியாளர்களை வேலைக்கு அழைத்து வருவதற்கு இ-பாஸ் உடனடியாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனத்தினரும் வடமாநிலத் தொழிலாளர்களை மீண்டும் அழைத்துவரத் தொடங்கியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலை கட்டுமானப் பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கு கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, வேலை செய்யும் இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

பேருந்துகளில் அழைத்து வரப்படும் தொழிலாளர்கள்
பேருந்துகளில் அழைத்து வரப்படும் தொழிலாளர்கள்

வடமாநிலத் தொழிலாளர்கள் வருகை நாள்தோறும் அதிகரித்தபடியே இருப்பது தொழில் நிறுவனத்தினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. முன்பு போலவே, நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை அதிகமாகப் பார்க்க முடிகிறது.

அடுத்த கட்டுரைக்கு