Published:Updated:

`வதந்திகளால் திரண்ட வட மாநிலத்தவர்கள்!’ -திருப்பூர் வைரல் வீடியோவின் பின்னணி

திருப்பூரில் கூடிய வட மாநிலத்தவர்கள்
திருப்பூரில் கூடிய வட மாநிலத்தவர்கள்

'ஊருக்குச் செல்ல ரயில் தயாராய் இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷன் வந்தால் எப்படியாவது அடித்துப் பிடித்து ஊருக்குச் சென்றுவிடலாம்' எனத் தகவல் அனுப்பி சிலர் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் சிலரின் வதந்தியால் ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் ஒரே இடத்தில் திரண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

` இது பழைய வீடியோ. பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்க சிலர் இதுபோன்ற வீடியோக்களைப் பரப்புகின்றனர்' எனக் கொதிக்கின்றனர் திருப்பூர் மாவட்ட அதிகாரிகள்.

ரயில்வே ஸ்டேஷனில் வட மாநிலத்தவர்கள்
ரயில்வே ஸ்டேஷனில் வட மாநிலத்தவர்கள்

`திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் தனிமனித இடைவெளியை மறந்து பல ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் கூடியிருக்கிறார்கள்' என்ற வீடியோ ஒன்று நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஊரடங்கு சமயத்தில் ஒரே இடத்தில் பல ஆயிரம் பேர் எப்படி கூடினார்கள்.. அந்த வீடியோ உண்மையிலேயே திருப்பூரில்தான் எடுக்கப்பட்டதா என்பன போன்ற கேள்விகளோடு விசாரித்தோம்.

வைரலாகப் பரவும் அந்த வீடியோ கடந்த மே 8-ம் தேதி, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எடுக்கப்பட்டது என மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாள்களாக திருப்பூரிலுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஜெய்வாபாய் பள்ளியில் உள்ள பெரிய ஆடிட்டோரியத்தில் அதிகாரிகள் சிலர், வட மாநிலத் தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரித்துள்ளனர்.

வதந்தியால் கூடிய வட மாநிலத் தொழிலாளர்கள்
வதந்தியால் கூடிய வட மாநிலத் தொழிலாளர்கள்

அதேசமயத்தில் ரயில்வே ஸ்டேஷன் அருகே ஒரு கூட்டம், எப்போது ஊருக்கு அனுப்புவீர்கள் எனக் கேட்டு வாக்குவாதத்தில் இறங்கியுள்ளது. அவர்களைப் போலீஸார் சமாதானப்படுத்தி, அருகிலுள்ள ஜெய்வாபாய் பள்ளிக்கு அழைத்துச் சென்று அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்திருக்கின்றனர். இதற்கிடையே, `ஊருக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட் கொடுக்கிறார்கள்' என ஒரு வதந்தி கிளம்ப, சில நிமிடங்களிலேயே நூற்றுக்கணக்கானோர் கூடியிருக்கின்றனர்.

ரயில் டிக்கெட் கொடுக்கப்படவில்லை என்பது தெரிந்ததும், கூடியவர்கள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும் திணறிப் போயிருக்கின்றனர். அந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது என்கிறார்கள். திருப்பூர் வடக்கு தாசில்தார் பாபு மற்றும் திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் ஆகியோர் வீடியோவில் இருக்கும் சம்பவம் கடந்த 8-ம் தேதி வெள்ளிக்கிழமை நடந்ததாக உறுதிப்படுத்துகின்றனர்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் பேசினோம்.``சமூக வலைதளங்களில் பரவிவரும் அந்த வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதில்லை. சில நாள்களுக்கு முன்பு, ஊருக்குச் செல்ல ரயில் டிக்கெட் கொடுக்கிறார்கள் என்ற ஒரு தவறான தகவலால் வட மாநிலத் தொழிலாளர்கள் கூடினார்கள். உண்மை நிலவரத்தைச் சொல்லி, உரிய ஏற்பாடு செய்யப்படுமெனக் கூறி அவர்களை அனுப்பிவிட்டோம்.

ஒருவேளை அன்று எடுக்கப்பட்ட வீடியோவை, யாரோ இப்போது வாய்ஸ் ஓவர் போட்டு வெளியிட்டு தேவையில்லாத பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள் என நினைக்கிறேன். வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து போலீஸாரிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். இப்படியான பொய்யான தகவல்களையெல்லாம் நம்பாதீர்கள் என நான்கூட ஒரு ஆடியோ வெளியிட்டிருக்கிறேன்" என்றவர்,

திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன்
திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன்
வட மாநிலத் தொழிலாளர்களை இந்த ஊரடங்கு நேரத்தில் மிகச் சிறப்பாக கவனித்து வருகிறோம். இப்படிப்பட்ட நேரத்தில் இதுபோன்ற வீடியோக்கள் வெளியாவது அவசியமில்லாதது.
மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்

``ஊருக்குச் செல்வதற்காக திருப்பூர் மாவட்டத்தில் 11,000 வட மாநிலத்தவர்கள் ஆன்லைனில் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் 670 பேரை பஸ் ஏற்பாடு செய்து அனுப்பிவைத்திருக்கிறோம். 10-ம் தேதி 1,140 பேரை ரயில் மூலமாக பீகார் அனுப்பி வைத்திருக்கிறோம். மீதமிருப்பவர்கள் வரும் நாள்களில் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வட மாநிலத் தொழிலாளர்களை இந்த ஊரடங்கு நேரத்தில் மிகச் சிறப்பாக கவனித்து வருகிறோம். இப்படிப்பட்ட நேரத்தில் இதுபோன்ற வீடியோக்கள் வெளியாவது அவசியமில்லாதது. இது பொதுவெளியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவது வருத்தமாக இருக்கிறது" என்றார்.

துரத்தி துரத்தி படம்பிடித்த ட்ரோன்; தெறித்து ஓடிய இளைஞர்கள்! -ட்ரெண்டிங்கில் திருப்பூர் போலீஸ் #Video

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய மாவட்ட அதிகாரிகள் சிலர், ``சொந்த ஊருக்குச் செல்ல விருப்பமுள்ளவர்களைப் பதிவு செய்ய வாருங்கள் என அழைத்தால், பெட்டி படுக்கைகளோடு வந்து விடுகிறார்கள். இப்படிக் கடந்த 15 நாள்களில் மட்டும் மூன்று முறை கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தைக் கலைப்பதற்குள் பெரும் தலைவலி உண்டாகிவிடுகிறது. இப்படியான சிக்கல்கள் மேலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான், பதிவு செய்தவர்களை முன்னுரிமை அடிப்படையில் பேருந்து மூலமாக ஏற்றிவந்து ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி, ரயில் மூலமாக அனுப்பி வைக்கிறோம்.

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் வட மாநிலத்தவர்கள்
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் வட மாநிலத்தவர்கள்

இப்படி நாங்கள் அழைத்துவரும் நபர்களே போன்மூலமாக `ஊருக்குச் செல்ல ரயில் தயாராய் இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷன் வந்தால் எப்படியாவது அடித்துப் பிடித்து ஊருக்குச் சென்றுவிடலாம்' எனத் தகவல் அனுப்பி கூட்டத்தைக் கூட்டி விடுகின்றனர். அப்படித்தான் அந்த வீடியோவும் வெளியானது" என்கின்றனர் வேதனையோடு.

அடுத்த கட்டுரைக்கு