Published:Updated:

குமரி: `வெப்ப பரிசோதனை, கிருமி நீக்கம்!’ -உடல் கவசத்துடன் முடிதிருத்தும் தொழிலாளி

முழு உடல் கவசத்துடன் முடி திருத்தும் தொழிலாளி முருகன்
முழு உடல் கவசத்துடன் முடி திருத்தும் தொழிலாளி முருகன்

முழு உடல் பாதுகாப்பு கவசம் அணிந்து வேலை செய்வது சிரமமாக இருந்தாலும் பாதுகாப்பு முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டுள்ளேன் என்கிறார் முடி திருத்தும் தொழிலாளி முருகன்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடே முடங்கிப்போய் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. அதிலும் சில பகுதிகளில் கொரோனா பாதித்தவர்களுக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என அரசு மக்களிடம் அறிவுறுத்தி வருகிறது. நோய்த்தொற்று பயம் காரணமாகப் பல தொழில்கள் முடங்கிப்போயுள்ளன. அப்படிப் பாதித்ததில் ஒன்றுதான் முடிதிருத்தும் தொழில். முடிதிருத்தும் கடைகள் திறந்திருந்தாலும் நோய்த் தொற்றிவிடும் என்ற பயம் காரணமாக மக்கள் அங்கு செல்லத் தயங்குகிறார்கள். இதற்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக உடல் முழுவதும் பாதுகாப்பு கவசம் அணிந்துகொண்டு, பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் முடிதிருத்தும் தொழில் செய்துவருகிறார் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி முருகன்.

வாடிக்கையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை
வாடிக்கையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை

நாகர்கோவில் புன்னைநகரில் அர்ஜுன் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார் முருகன். இங்கு முடி வெட்டிக்கொள்ளவும், ஷேவிங் செய்துகொள்ளவும் கூட்டம் அலைமோதுகிறது. அதற்கு முருகன் கடைபிடிக்கும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்தான் காரணம். முடிவெட்ட கடைக்குள் செல்வதற்கு முன்பு பக்கெட்டில் வைத்துள்ள தண்ணீரில் சோப்பு போட்டு கை கழுவிவிட்டு வாடிக்கையாளர்கள் உள்ளே செல்கிறார்கள். உள்ளே செல்பவர்களுக்கு டெம்பரேச்சர் கருவி மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.

முடி திருத்தும் தொழிலாளி முருகன் கொரோனா வார்டில் பணி புரிபவர்களைப் போன்று தலைமுதக் கால்வரை புல் கிட் அணிந்துள்ளார். முடி திருத்த வருபவர்களுக்கு பயன்படுத்தும் சீப்பை அவர்களுக்கே கொடுத்து விடுகிறார். அவர்கள் வேண்டாம் என்றால் அதை பாதுகாப்பாக அப்புறப்படுத்திவிடுகிறார். ஒருவருக்கு பயன்படுத்தும் முகச்சவரம் செய்யும் கத்தியை உடனே பாதுகாப்பாக அப்புறப்படுத்திவிடுகிறார். ஒவ்வொருமுறையும் கத்தரிக்கோலை கிருமி நீக்கம் செய்கிறார். இவ்வளவு பாதுகாப்புடன் முடிதிருத்துவதால் முருகனிடம் முடி வெட்டிக்கொள்ள கூட்டம் அலை மோதுகிறது.

இதுபற்றி முருகன் கூறுகையில், "எனக்கு 60 வயது ஆகிறது. 40 வருடமாக முடி திருத்தும் தொழில் செய்கிறேன். கொரோனா தொற்று காரணமாக முடிதிருத்தும் தொழில் முடங்கிப்போனது. வாடிக்கையாளர்களின் மாஸ்க்கை கழற்றிய பிறகுதான் முடிதிருத்தும் தொழில் செய்ய முடியும். எனவே நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். இந்த நிலையில் வெளிநாட்டில் பணிபுரியும் எனது மகன் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக உடலில் அணியும் ஐந்து கிட்டுகள் மற்றும் டெம்பரேச்சர் சோதனை செய்யும் கருவியையும் எனக்கு அனுப்பித் தந்தான்.

முடி திருத்தும் தொழிலாளி முருகன்
முடி திருத்தும் தொழிலாளி முருகன்

ஒரு கிட்டை ஒரு நாள் மட்டும் அணிந்துகொள்வேன். பின்னர் அதை துவைத்து காயப்போட்டுவிட்டு, ஐந்து நாள்களுக்கு பிறகுதான் அடுத்ததாகப் பயன்படுத்துவேன். வாடிக்கையாளர்கள் அமரும் இருக்கையின் கைப்பிடியை ஒவ்வொரு முறையும் கிருமி நீக்கம் செய்கிறேன். பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதால் என்னிடம் அதிகமான வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் வருகிறார்கள். முழு உடலுக்கும் பாதுகாப்பு கவசம் அணிந்து வேலை செய்வது சிரமமாக இருந்தாலும் பாதுகாப்பு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டுள்ளேன். விரைவில் கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலைமை திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு