Published:Updated:

`ரஜினிகாந்த் கவலையில் இருக்கிறார்.. அரசை நான் தொடர்புகொள்கிறேன்'- சுர்ஜித் குறித்து லதா ரஜினி!

குழந்தைகளுக்காக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஆழ்துளை கிணறுகளை மூட ஒரு நெறிமுறைகளை வகுக்கவேண்டும். முதலில் அறிவிப்பு, கண்காணிப்பு, உள்ளாட்சி அமைப்புகள் என எல்லாருமே சேர்ந்து உழைக்கவேண்டும்.

லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் பல்வேறு குழுவினர் ஈடுபட்டுவருகிறார்கள். 25 மணிநேரத்தையும் கடந்து மீட்பு பணி நடந்துவருகிறது. இந்தசம்பவம் நாடுமுழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. `இது போன்றதொரு நிலை இனி தொடரக்கூடாது’ என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் லதா ரஜினிகாந்த் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார்.

லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்

அப்போது அவர், ``அந்த பகுதியில், ஆழ்துளைக்கிணறு மூடாமல் இருப்பது மிகப்பெரிய தவறு. நாம் அனைவரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். இது தான் நடந்துக்கொண்டிருக்கிறது. இதற்கு கண்டிப்பாக முழுமையான தீர்வுகள் காணப்படவேண்டும். இதற்கு மேலும் தாமதித்தால், அதற்கு அர்த்தமே இருக்காது. குழந்தைகள் சமுதாயம் நம்மை மதிப்பதையே நிறுத்திவிடுவார்கள். அந்த பெண்ணுக்கு தெரியலையா, அந்த தந்தைக்கு தெரியவில்லையா, சுற்றியிருப்பவர்களுக்கு தெரியவில்லையா?. அஜாக்கிரதையான சமூகத்தில் வாழ்கிறோம். குழந்தைகளுக்காக தேசிய அளவில் ஒரு அமைப்பை மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்காக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

ஆழ்துளை கிணறுகளை மூட ஒரு நெறிமுறைகளை வகுக்கவேண்டும். முதலில் அறிவிப்பு, கண்காணிப்பு, உள்ளாட்சி அமைப்புகள் என எல்லாருமே சேர்ந்து உழைக்கவேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். பெற்றொர்களும் கவனமாக இருக்கவேண்டும். இனிமேல் இப்படி நடக்க கூடாது. எல்லா இடத்துலையும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். ஆழ்துளை கிணறு மட்டுமல்லாமல், வேறு சில விபத்துகளும் அன்றாடம் நடந்துக்கொண்டிருக்கின்றன. பல சம்பவங்கள் வெளியே வராமல் போகின்றன. இதில் கவனம் செலுத்தவேண்டும். உலகம் முழுவதும் குழந்தைகளின் நன்மைக்காக எதாவது கண்டுபிடிக்கப்பட்டால் அது வெளியில் தெரிவதில்லை.

மீட்பு பணிகள்
மீட்பு பணிகள்

ஒரு ஐபோன் அறிமுகப்படுத்தும்போது கிடைக்கும் கவனம், விளம்பரம், குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் கிடைப்பதில்லையே. இதற்கு ஒரு பொதுத்தளம் தேவை. ஒருதொடர்பு தேவை. குழந்தைகளுக்கு ஒரு பாதிப்பு நடந்தால் அது பீகாரில் நடந்தாலும் சரி, தமிழ்நாட்டில் நடந்தாலும் சரி, நாடே அதில் கவனம் செலுத்தும் நிலை வரவேண்டும். அதற்கு ஒரு பொதுவான தொடர்பு தேவைப்படுகிறது. அதை ஏற்படுத்தவேண்டும். மாநில அமைப்பு ஒன்றை உருவாக்க தமிழக அரசை நான் தொடர்பு கொள்ள இருக்கிறேன். சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட தகவலறிந்த ரஜினிகாந்த் கவலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.