Published:Updated:

`இளையான்குடியில் ரகசியமாகத் தங்கவைக்கப்பட்டார்களா?!’- சுகாதாரத்துறை ரேடாரில் 11 வெளிநாட்டினர்

சம்பவ இடத்தில் விசாரணை
சம்பவ இடத்தில் விசாரணை

இளையான்குடியில் அனுமதியின்றி தங்கியிருந்த இந்தோனேசியா மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த மத போதகர்களிடம் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ், உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. சீனாவில் தொடங்கிய பாதிப்பு தற்போது 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது- இதையடுத்து, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியிருக்கிறது.

மதபோதகர்கள் தங்கியிருந்த இடம்
மதபோதகர்கள் தங்கியிருந்த இடம்

கொரோனோ வைரஸ் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் கூடுவதற்கு மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சிவகங்கை இளையான்குடியை அடுத்த புதுக்குளம் பண்ணை வீட்டில் அனுமதியின்றி மலேசியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நபர்கள் அதிகாரிகளுக்குத் தெரியாமல் தங்கியிருப்பதாகத் தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். விசாரணையில், இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மதபோதகர்கள் கடந்த மாதம் டெல்லி வந்துள்ளனர். அங்கிருந்து ரயில் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்து, அங்கு ஒரு மாதம் தங்கியுள்ளனர். பின் அங்கிருந்து மதப் பிரசாரத்துக்காக ராமநாதபுரம் சென்றுள்ளனர். அதையடுத்து, இளையான்குடி பள்ளிவாசலுக்கு ஜாமாத்தார்கள் மூலம் மார்ச் 21-ம் தேதி வந்து ரகசியமாக அவர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது.

தங்கிருந்த இடத்தில் கிருமி நாசினி தெளிப்பு
தங்கிருந்த இடத்தில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனோ பரவலைத் தடுக்கும் முயற்சியில் அரசுத் துறைகள் முழுவீச்சில் இறங்கி பணியாற்றி வருகின்றன. இந்தச் சூழலில் எந்தவித அறிவிப்பும், அனுமதி இல்லாமல் கடந்த 5 நாள்களாக ரகசியமாக அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், இளையான்குடி தாசில்தார் ரமேஷ், இன்ஸ்பெக்டர் பொம்மையாசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு இளையான்குடி - சிவகங்கை சாலையில் உள்ள மணியாரான் சிராஜுதீன் தனியார் பண்ணை வீட்டில் வெளிநாட்டைச் சேர்ந்த 11 பேரையும், அவர்களுக்கு உதவியாக இருந்த ஏஜென்ட்டுகள் 2 பேர் உட்பட மொத்தம் 13 பேரையும் அழைத்துச்சென்று, தனிமைப்படுத்தித் தங்க வைக்கப்பட்டனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டு டயட் மெனு என்ன தெரியுமா? நம்பமாட்டீங்க!

நேற்று காலை சாலைக்கிராமம் வட்டார மருத்துவக் குழு டாக்டர் சந்திரபிரகாஷ் தலைமையில் தனிமைப்படுத்தப்பட்ட 11 பேரையும் ஆய்வு செய்தனர். ஆய்வில் மலேசியாவைச் சேர்ந்த ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

கொரோனோ
கொரோனோ

இதையடுத்து அவர் தனி ஆம்புலன்சிலும், மற்ற 10 பேரும் வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு