Published:Updated:

`இறப்பு விகிதம்.. ரேபிட் டெஸ்ட் கிட்டின் விலை.. வீடு திரும்பிய 82 பேர்!’ -சுகாதாரத்துறை பிரஸ்மீட்

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

``லேசான சளி, காய்ச்சல் இருந்தாலே கொரோனா தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. யாரும் விடுபடாத அளவுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம்” - விஜயபாஸ்கர்

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இங்கு 1000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே வந்த சூழலில் கடந்த சில நாள்களாக புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

கொரோனா
கொரோனா

அப்போது, ``தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 49 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 7 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் விகிதமானது 1.1% என்ற நிலையிலேயே உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது” என்றார்.

`கொரோனா பணி... மருத்துவத்துறை, காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள்... குடும்பத்தின் ஒத்துழைப்பு தேவை!’ - மனநல மருத்துவர்

மேலும், ``தமிழகத்தில் இதுவரை 35,036 பேருக்கு கொரோனா தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பரிசோதனை நிலையங்கள் உள்ளன. இதை அதிகப்படுத்தவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஒரேநாளில் 5,360 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளும் அளவுக்கு நம்மிடம் வசதிகள் உள்ளன. விரைவாக பரிசோதனைகளை மேற்கொள்ள 36,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் தமிழகத்துக்கு வந்துள்ளன. விரைவான சோதனை என்பது உறுதிபடுத்துவதற்கான சோதனை அல்ல. ஒரு நபர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதை கண்டறிவதுதான். மேலும், இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது” என்றும் தெளிவுபடுத்தினார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் இயக்குநர் உமாநாத், ``மத்திய அரசானது 15 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு சீனாவிடம் ஆர்டர் கொடுத்துள்ளது. அவை பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவுக்கு வந்த கருவிகளில் இருந்து 36,000 கருவிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. ஒரு ரேபிட் டெஸ்ட் கிட்டின் விலை ரூ.600 ஆகும். மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலைக்கே கருவிகள் வாங்கப்படுகின்றன. தமிழகம் மொத்தம் 5 லட்சம் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``லேசான சளி, காய்ச்சல் இருந்தாலே கொரோனா தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. யாரும் விடுபடாத அளவுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் மட்டும்தான் கொரோனா தொற்று வந்துள்ளது” மேலும், பிளாஸ்மா தொடர்பான ஆராய்ச்சிகளையும் மருத்துவர்கள் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

``கொரோனா புண்ணியத்துல முழு நேர விவசாயியாகிட்டேன்!'' - `பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின்
அடுத்த கட்டுரைக்கு