Published:Updated:

`மன அழுத்தம் குறைய காமெடி ஷோ!’ -மருத்துவர்களை உற்சாகப்படுத்திய கலெக்டர்

நகைச்சுவை நிகழ்ச்சி
நகைச்சுவை நிகழ்ச்சி

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மன அழுத்தம் குறைய நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி அசத்தியிருக்கிறார், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி.

திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்துவருகிறது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. இந்த நிலையில், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்களை ஊக்கப்படுத்தும்விதமாக கலெக்டர் கந்தசாமி பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகிறார்.

திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி
திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி

அதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆடிட்டோரியத்துக்கு கலெக்டர் கந்தசாமி திடீரென சென்று நாற்காலியில் அமர்ந்துகொண்டார். கொரோனா வார்டில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட மருத்துவப் பணியாளர்கள் அனைவரையும் ஆடிட்டோரியத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

பிறந்தநாள் மூலம் பரவிய கொரோனா! -தி.மு.க பிரமுகரால் அதிர்ச்சியில்  அதிகாரிகள்

`ஏதோ பிரச்னை’ என்று பதறியடித்துக் கொண்டு ஆடிட்டோரியத்துக்கு வந்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார் கலெக்டர் கந்தசாமி. ஆடிட்டோரியத்தில் நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து, சின்னத்திரை பிரபலம் அன்னபாரதி ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நகைச்சுவை நிகழ்ச்சி
நகைச்சுவை நிகழ்ச்சி

அப்போது பேசிய கலெக்டர், ``கொரோனா பணியில் நீங்கள் சோர்வடைந்திருப்பீர்கள். அதிலிருந்து நீங்கள் மீள நகைச்சுவை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்’’ என்று கலகலப்பைக் கூட்டினார். நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த மருத்துவர்களும், செவிலியர்களும் ``இந்தப் பணியில் நாங்கள் மன அழுத்தத்தில் இருந்தோம். கலெக்டரின் புதுவிதமான செயல் எங்களுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது’’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அடுத்த கட்டுரைக்கு