தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் நவம்பர்18 -ம் தேதி கனமழை முதல் மிக கனமழை வரை கொட்டிதீர்த்தது.
இதன் காரணமாக ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணையிலிருந்து அதிக அளவு உபரிநீர் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் தரைப்பாலங்களும் சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில், பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட எலப்பநாயுடுப்பேட்டை கிராமத்தில் தரைப்பாலத்தின் மேலேயே வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தரைப்பாலத்தின் இருபுறமும் உள்ள சாலைகளில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டன; சாலையோரங்கள் ஆற்றிலும் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது வெள்ளம் ஓரளவு குறைந்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இருப்பினும் மக்கள் தற்போது வெள்ளநீர் சென்றுகொண்டிருக்கும் தரைப்பாலத்தின் மீது நடந்து சென்றே பள்ளி, கல்லூரி, வேலை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக ஆபத்தான வழியில் ஆற்றைக் கடந்துவருகின்றனர். இது போன்ற பாதிப்பிலிருந்து மீண்டு வர தரைப்பாலத்தை உயர்த்திக் கட்டுவதே தீர்வு எனக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

சென்ற வாரம் பெய்த மழையின் பாதிப்பிலிருந்தே அந்த கிராம மக்கள் முழுவதுமாக மீண்டு வராத நிலையில், மீண்டும் திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடப்பட்டிருப்பது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
- ஏ.சூர்யா
மாணவப் பத்திரிகையாளர்