Published:Updated:

ஒரு மணி நேர மழைக்கே வெள்ளக்காடான ஊட்டி! - பராமரிப்பில்லாத வடிகால்களால் தொடரும் துயரம்

ஊட்டி வெள்ளம்
ஊட்டி வெள்ளம்

நகரின் மையப்பகுதியிலுள்ள கோடப்பமந்து கால்வாய்க்குச் செல்லும் வடிகால்களை நகராட்சி நிர்வாகம் முறையாகப் பராமரிக்காததன் விளைவே இந்த வெள்ளப்பெருக்கு என மக்கள் கொந்தளிக்கின்றனர்.

நீலகிரியில் கடந்த மாதத்தில் ஒரு வாரம் கொட்டித்தீர்த்த‌ பெருமழைக்குப் பிறகு மழையின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது. கடந்த இரண்டு நாள்களாக கோத்தகிரி, கொடநாடு ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துவந்தது.

ஊட்டி வெள்ளம்
ஊட்டி வெள்ளம்

ஊட்டி நகரில் அவ்வப்போது சாரல் மழை பெய்துவந்தாலும், நேற்று மாலையில் தொடங்கிய மழை இரவு வரை கொட்டித்தீர்த்தது. இடைவிடாமல் பெய்த இந்த மழையால் ஊட்டி நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிக் காட்சியளித்தன.

நீலகிரி: பலத்த காற்றுடன் மழை; பெயர்ந்து விழும் மரங்கள்! - 3-வது நாளாக இருளில் மூழ்கிய கிராமங்கள்

ஊட்டி மலை ரயில் நிலையம் அருகிலுள்ள பகுதிகளில் அதிகளவு வெள்ள நீர் சூழ்ந்ததால், கார் ஒன்று நீரில் மூழ்கியது. வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு அதன் ஓட்டுநர் தப்பி வெளியேறினார். பின்னர் மீட்புக்குழுவினர் வந்து கயிறு மூலம் வாகனத்தை பத்திரமாக மீட்டனர். ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே காவல் நிலையத்திலும் வெள்ள நீர் சூழ்ந்தது. நீரை வெளியேற்ற முடியாமல் ஊழியர்கள் திணறினர் .

ஊட்டி வெள்ளம்
ஊட்டி வெள்ளம்

இதேபோல் ஊட்டி கிரீன்ஃபீல்டு பகுதியிலுள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் பாதிப்படைந்தன. வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். நகரின் மையப்பகுதியிலுள்ள கோடப்பமந்து கால்வாய்க்குச் செல்லும் வடிகால்களை நகராட்சி நிர்வாகம் முறையாகப் பராமரிக்காததன் விளைவே இந்த வெள்ளப்பெருக்கு என மக்கள் கொந்தளிக்கின்றனர்.

மழை பாதிப்புகள் குறித்து ஊட்டியைச் சேர்ந்த ராணி நம்மிடம் பேசுகையில், ``முன்னெல்லாம் எவ்வளவு மழை பெஞ்சாலும், டவுனுக்குள்ள எந்த பாதிப்பும் பெருசா இருக்காது. ஆனா, இப்போ சின்ன மழைக்கே எல்லா ஏரியாலயும் தண்ணி தேங்குது.

ஊட்டி வெள்ளம்
ஊட்டி வெள்ளம்

மழைத் தண்ணி வடிஞ்சி ஓட‌ எந்த ஏற்பாடும் இல்லை. கோடப்பமந்து கால்வாயைச் சரியா பராமரிச்சா போதும், எவ்வளவு மழை பெஞ்சாலும் டவுனுக்குள்ள வராது" என்றார்.

கிரீன்ஃபில்டு பகுதியைச் சேர்ந்த சத்யா, ``எப்போ மழை ஆரம்பிச்சாலும் எங்களுக்கு பயமாவே இருக்கு. சின்ன மழைக்கே வீட்டுக்குள்ள தண்ணி வந்துருச்சு. குழந்தைங்களைவெச்சிக்கிட்டு நாங்க எங்கே போறது சொல்லுங்க... எவ்வளவோ முறை சொன்னாலும், இந்த முனிசிபாலிட்டிகாரங்க சரி செஞ்சே குடுக்க மாட்டேங்குறாங்க" எனக் கொந்தளித்தார்.

ஊட்டி வெள்ளம்
ஊட்டி வெள்ளம்

மக்கள் முன்வைக்கும் இந்தப் புகார் குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பேசினோம். ``கால்வாய் ஓரங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்கிறோம். தூர்வாரும் பணிகளும் முடிவடைந்திருக்கின்றன. வடிகால் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். விரைவில் சீரமைக்கப்படும்" என்றனர்.

இன்று காலை நிலவரப்படி மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ஊட்டியில் 62 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு