Published:Updated:

வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி... விடாமல் பெய்யும் கனமழையால் மக்கள் கடும் அவதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மழையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்டனர்
மழையில் சிக்கிய குழந்தைகள் மீட்கப்பட்டனர்

மழை காரணமாக வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மாவட்டம் முழுவதும் 19 முகாம்களில் சுமார் 560 பேர் தஞ்சமடைந்துள்ளனர். எட்டு சாலைகள் துண்டிக்கப்படுள்ளன. ஆறுகளிலும் குளங்களிலும் கரைகள் உடைந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. கடந்த மாதம் 16, 17 தேதிகளில் பெய்த கனமழையால் குமரி மாவட்டம் வெள்ளக்காடானது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, முக்கடல், சிற்றாறு அணைகள் நிரம்பியுள்ளன. 22 ஆண்டுகளுக்குப் பிறகு பொய்கை அணையும் நிரம்பியிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் தொடங்கிய கனமழை இரவு முழுவதும் கொட்டித்தீர்த்தது. இன்று காலையும் மழை நீடித்துவருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வெள்ளக்காடான குமரி
வெள்ளக்காடான குமரி

நாகர்கோவிலிலுள்ள குளத்தின் கரை உடைந்து ஊட்டுவாழ்மடம் ஊருக்குள் தண்ணீர் பாய்ந்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, மக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். பழையாறு, தாமிரபரணி ஆறு, இரணியல் வள்ளியாறுகளில் தண்ணீர் கரையைத் தாண்டி ஓடுகிறது. இந்த ஆறுகளின் கரையோரங்களிலுள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். வள்ளியாற்றின் கரையிலுள்ள விநாயகர் கோயிலை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது.

பழையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஒழுகினசேரி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் பேருந்துகள் அஞ்சுகிராமம் வழியாக மாற்றுவழியில் இயக்கப்பட்டன. தடிக்காரங்கோணம் பகுதியில் தொட்டிப்பாலம் நிரம்பி தண்ணீர் சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. திங்கள்நகர் அருகேயுள்ள கல்லுக்கூட்டம் பகுதியில் சானல் கரை உடைந்து தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது.

கல்லுக்கூட்டத்தில் சானல் உடைந்து வீட்டுக்குள் புகுந்த தண்ணீர்
கல்லுக்கூட்டத்தில் சானல் உடைந்து வீட்டுக்குள் புகுந்த தண்ணீர்

நேற்று காலை 8 மணிமுதல் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி ஆனைக்கிடங்கு பகுதியில் 180.7 மி.மீ மழை பெய்துள்ளது. கன்னிமார் பகுதியில் 140 மி.மீ., சுருளக்கோடு பகுதியில் 135.4 மீ.மீ., தக்கலையில் 134.5 மி.மீ மழை என மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. முக்கடல் அணை முழுக் கொள்ளளவான 25 அடி நிரம்பியுள்ளது. பொய்கை அணை முழுக் கொள்ளளவான 42.65 அடியையும், மாம்பழத்தாறு அணை 54.12 அடியையும் எட்டியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

48 அடி கொள்ளளவுகொண்ட பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் 43.39 அடியாக உள்ளது. அணைக்கு உள்வரத்து 4,337 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து 4,032 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. 77 அடி கொள்ளளவுகொண்ட பெருஞ்சாணி அணையில் 74.13 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. நேற்று இரவு பெய்த மழையில் ஏழு வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டம் ஆகின. 58 வீடுகள் பாதி இடிந்துள்ளன.

வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்
வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்

கருங்கல் அருகேயுள்ள வட்டவிளை பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்திருக்கிறது. இதனால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்துக் குளங்களிலும் தண்ணீர் நிரம்பி வெளியேறி வருகின்றன. சில குளங்களில் கரைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்திருக்கிற. சில குளங்களின் கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

நீச்சல்குளமான சுரங்கப்பாதை; மருத்துவமனையில் புகுந்த வெள்ளம்! - சென்னை மழை வெள்ளத்தில் ஒரு நாள்!

மாவட்டத்தில் பல ரோடுகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 19 முகாம்களில், சுமார் 560 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர். தண்ணீர் பெருக்கால் மாவட்டம் முழுவதும் சுமார் எட்டு சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், ரேஷன் கடைகளிலும் வெள்ளம் புகுந்துள்ளன. வயல்வெளிகள், வாழைத்தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் உள்ளிட்ட விவசாய நிலங்களில் குளம்போல தண்ணீர் தேங்கியிருக்கிறது. தேவையில்லாமல் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் எனவும், ஆறுகளில் தண்ணீர் செல்வதை வேடிக்க பார்க்கச் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு