Published:Updated:

குமரி: மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு! - அடித்துச் செல்லப்பட்ட பாலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

6 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. அந்தத் தற்காலிக பாலத்தை மழை வெள்ளம் அடித்துச் சென்றிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்தது. களியல் பகுதியில் 172 மி.மீ மழையும், குழித்துறையில் 151 மி.மீ., நாகர்கோவிலில் 117 மி.மீ மழை என பல இடங்களில் நூறு மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்து குமரியைக் குளிர்வித்தது. இதனால் அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. 48 அடி கொள்ளளவுகொண்ட பேச்சிப்பாறை அணையில் 44.37 அடி தண்ணீர் இருக்கிறது. 77 அடி கொள்ளளவுகொண்ட பெருஞ்சாணி அணையில் 59.65 அடி தண்ணீர் இருக்கிறது. இந்த இரண்டு அணைகளிலும் தண்ணீர் உள்வரத்தும் அதிகரித்திருக்கிறது.

ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்ததால், குளங்கள், ஆறுகளில் தண்ணீர்வரத்து அதிகரித்திருக்கிறது. நாகர்கோவில் பழையாறு, இரணியல் வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளில் அதிக அளவு வெள்ளம் பாய்ந்து செல்கிறது. பேச்சிப்பாறை அணையில் 3,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், தாமிரபரணி ஆற்றின் கரை ஓரமுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

துண்டிக்கப்பட்ட பாலம்
துண்டிக்கப்பட்ட பாலம்

மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அருவியிலுள்ள பாறைகள் வெளியே தெரியாத அளவுக்குத் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. திற்பரப்பு அருவி முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. வழக்கமாக தெளிந்த தண்ணீர் பாயும் திற்பரப்பு அருவியில் கலங்கிய தண்ணீர் பாய்ந்து செல்கிறது. கொரோனா லாக்டெளன் காரணமாக, திற்பரப்பு அருவியில் குளிக்கவோ, அங்கு செல்லவோ சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை. மேலும் அருவிக்குச் செல்லும் கேட் மூடப்படிருப்பதால் அந்தப் பகுதிக்கு மக்கள் யாரும் செல்லவில்லை.

கீரிப்பாறைப் பகுதியில் முத்துக்குழி, மாறாமலை போன்ற மலைப்பகுதியிலிருந்து பெருஞ்சாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிக்கு மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்றது. இதனால் அரசு ரப்பர் கழக குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் தற்காலிக பாலம் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட மழை காரணமாக, இந்தப் பகுதியில் இருந்த பாலம் சேதமடைந்தது. இந்தநிலையில் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. அந்தத் தற்காலிக பாலத்தை மழை வெள்ளம் அடித்துச் சென்றிருக்கிறது.

திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு
திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு
மகாராஷ்டிரா மழை வெள்ளம்: நிலச்சரிவில் சிக்கி 251 பேர் உயிரிழப்பு; 100 பேர் மாயம்!

நாகர்கோவில் குருகுலம் சாலையிலுள்ள சலோம் நகரிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்துள்ளனர். ஒரு நாள் மழையில் புத்தேரி பெரியகுளம் நிரம்பி, தண்ணீர் வெளியேறி புளியடி சாலையில் வெள்ளம் பாய்ந்து சென்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு