Published:Updated:

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! - வெள்ளக்காடான சாலைகள்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பொழிந்துள்ளது.

சென்னை மழை
சென்னை மழை

தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், தெற்கு ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்று முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்திருந்தார். ஆனால், சென்னை உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதலே மிதமான மழை பெய்யத் தொடங்கிவிட்டது.

மழை
மழை

இன்னும் இரண்டு நாள்களுக்கு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழையும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளதால் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை காற்று வீசக்கூடும். இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாள்களும் குமரி, மாலத்தீவு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழை
மழை

சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் மிதமான மழை பொழிந்தது. மீண்டும் நேற்று இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்து மொத்த சென்னையையும் குளிரவைத்துள்ளது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், அண்ணாநகர், பெருங்களத்தூர், விமானநிலையம், பல்லாவரம். குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், முகப்பேர், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பொழிந்துள்ளது.

மழை வெள்ளத்தில் நிரம்பி வழியும் குமரி அணைக்கட்டு... பிரத்யேகப் படங்கள்!

கனமழை எதிரொலியாக இன்று சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் நிலவி வந்தது. ஆனால், இன்று வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி அறிவித்துள்ளார்.

மழை
மழை

சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால், பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் அதிகமான அளவு நீர் தேங்கியுள்ளது, இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். அதபோல், தமிழகத்தில் திருப்பூர், நெல்லை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.