Published:Updated:

`தொடர் அறிவுறுத்தலை மதிக்காத பொதுமக்கள்!’ - அதிரடியில் இறங்கிய வேலூர் கலெக்டர் #corona

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

தினசரி இயங்கும் காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் வாரந்தோறும் திங்கள், வியாழன், ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே திறக்க அனுமதி.

வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று உயிரிழந்தார். அதேபோல், அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவையும் பொதுமக்கள் சரியாகப் பின்பற்றாத சூழல் நிலவுகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.

வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,``வேலூரில் கொரோனாவுக்கு 46 வயதுடைய நபர் நேற்று உயிரிழந்தார். அவர் வெளிமாநிலத்துக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை. எனினும், அவருக்கு கொரோனா எப்படித் தொற்றியது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீடு, வீடாக அரசு அலுவலர்கள் கணக்கெடுப்புக்கு வரும்போது பொதுமக்கள் காய்ச்சல், மூச்சுத் திணறல், இருமல், தும்மல் அறிகுறி இருந்தால் விவரங்களைத் தாமாக முன்வந்து தெரிவிக்க வேண்டும்.

கொரோனா விழிப்புணர்வு ஓவியம்
கொரோனா விழிப்புணர்வு ஓவியம்

சிலர் தகவல் தெரிவிக்காமல் மறைப்பதால் பலருக்கு நோய்த் தொற்றுகிறது. தற்போது, உயிரிழந்த நபர் வசித்து வந்த பகுதியில் 200 அலுவலர்கள் வீடு வாரியான கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 50 பேர் கிருமி நாசினி தெளிக்கிறார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேரின் உறவினர்கள் 56 பேரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவர்களின் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுடன் உள்ள தாய்மார்களைத் தவிர்த்து 11 நபர்கள் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அலட்சியமாக இருந்தால் நோய்த் தொற்று பரவுதைக் கட்டுப்படுத்த இயலாது. தினமும் காலை நேரங்களில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் ஊரடங்கைப் பொருட்படுத்தாமல் சென்று வருகிறார்கள். பொதுமக்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைச் சாமான்களை மூன்று நாள்களுக்கும் 10 நாள்களுக்கும் வாங்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டும் நாள்தோறும் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸார்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸார்

எனவே, கொரோனா தொற்று மேலும் பரவுவதைத் தடுப்பதற்கு நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்படுகிறது. அதன்படி, தினசரி இயங்கும் காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் வாரந்தோறும் திங்கள், வியாழன், ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது. அன்றைய தினங்களில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

பெட்ரோல் பங்குகள் தினமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். மருந்துக் கடைகள் வழக்கம் போல் தினமும் இயங்கும். பால் விற்பனை நிலையங்கள் தினமும் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் இயங்கும். கோழி, ஆடு, மாடு, மீன் ஆகிய இறைச்சி கடைகளில் ஊரடங்கு காலம் முழுவதும் விற்பனை செய்யத் தடை விதிக்கப்படுகிறது. பெட்டிக் கடைகள், தள்ளுவண்டிகள், மார்க்கெட்டிற்காக ஒதுக்கியுள்ள இடங்களில் முளைத்துள்ள புதிய கடைகளுக்கு அனுமதியில்லை.

‘பெல் மிஸ்டா்’ இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
‘பெல் மிஸ்டா்’ இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

சமூக விலகலைக் கடைப்பிடிக்காத காரணத்தினால் மூடி `சீல்’ வைக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட கடைகளும் ஊரடங்கு காலம் முடிந்தாலும் மேலும் மூன்று மாதங்களுக்குத் திறக்க அனுமதிக்கப்படாது. கடை உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் பொதுமக்கள் பிரார்த்தனை செய்யத் தடை செய்யப்படுகிறது.

மீறி பிரார்த்தனை, தொழுகை, அர்ச்சனை நடந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இறந்து போனவர்களைப் புதைப்பது அல்லது எரிப்பது தொடர்பாக தமிழக அரசு தெளிவான வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, இறப்பவர்களின் உடல் துணியால் பல அடுக்குகளாகச் சுற்றி மூடப்படும். இறுதிச் சடங்கிற்காக உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படாது.

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

எனினும், அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் தொலைவில் நின்று மதச் சடங்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், மத ரீதியான பிரார்த்தனைகளை செய்து கொள்வதற்கும் அனுமதி வழங்கப்படும். அவ்வாறு அனுமதிக்கப்படும்போது, இறந்துபோனவர்களின் உறவினர்கள் அதிகபட்சம் 10 பேரைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, பொதுமக்கள் நிலைமை உணர்ந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்ட இந்த உத்தரவு வேலூர் மாவட்டம் முழுவதும் பொருந்தும்’’ என்று அறிவுறுத்தியிருக்கிறார் கலெக்டர் சண்முக சுந்தரம்.

அடுத்த கட்டுரைக்கு