Published:Updated:

நீலகிரி: இடைவிடாமல் தொடரும் காற்று, மழை! - 24 மணி நேரமும் தயார்நிலையில் மீட்புக் குழுவினர்

நீலகிரி மழை
நீலகிரி மழை

ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டால், மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற வசதியாக, பிற மாவட்டங்களிலிருந்து கூடுதலாக தீயணைப்பு மீட்புக்குழுக்கள் வரவழைக்கப்படும்.

தென்மேற்குப் பருவக் காற்றின் தீவிரம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாத பலத்த காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்துவருகிறது. அதிலும் குறிப்பாக ஊட்டி, மஞ்சூர், கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி ஆகிய பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. பலத்த காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்துவருவதால், ஊட்டியில் கடுமையான குளிர் நிலவுகிறது.

நீலகிரி மழை
நீலகிரி மழை

காற்றின் வேகம் காரணமாக ஒருசில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. பல கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையில் விழுந்துள்ள மரங்களை தீயணைப்புத்துறையினர் உடனுக்குடன் வெட்டி, அகற்றிவருகின்றனர். மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தயார்நிலையில் இருப்பதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

நீலகிரி: துரியன் பழ ஏலம்; நடுரோட்டில் உருண்டு வணிகர்கள் அடிதடி! - காரணம் என்ன?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் பேசிய நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி, ``மழை பாதிப்புகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் தயார்நிலையில் இருக்கிறோம். மழை தீவிரமடையும்பட்சத்தில் அனைத்துத் தீயணைப்பு வீரர்களையும் அவசரகாலங்களில் உடனடியாக மீட்புப் பணிகளுக்குச் செல்லும் வகையில் 24 மணி நேரமும் தயார்நிலையில் வைத்திருக்கிறோம். தீயணைப்பு வாகனங்கள், மரம் அறுக்கக்கூடிய இயந்திர வாள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் சரிபார்க்கப்பட்டு பயன்படுத்துவதற்கு ஏதுவாக வைக்கப்பட்டுள்ளது.

ஊட்டி மழை
ஊட்டி மழை

வெள்ள பாதிப்புகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக மூன்று நவீன படகுகள் தயார்நிலையில் உள்ளன. ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டால், மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற வசதியாக பிற மாவட்டங்களிலிருந்து கூடுதலாக தீயணைப்பு, மீட்புக்குழுக்கள் வரவழைக்கப்படும். தேவைப்பட்டால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற குழுவும் சென்னையிலிருந்து வரவழைக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு