Published:Updated:

`சாத்தூர் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு; வீடு கட்டிக் கொடுக்கணும்!'- அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அருண் சின்னதுரை
ஈ.ஜெ.நந்தகுமார்

``10 லட்ச ரூபாயை பெண்ணின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். மீதமுள்ள 15 லட்ச ரூபாயை இரு குழந்தைகள் பெயரிலும் டெபாசிட் செய்ய வேண்டும்''

hc
hc ( நந்தகுமார் )

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெ.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டு பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாயும் வீடும் கட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம்

மதுரை அப்பாசாமி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அளித்த பொதுநல மனுவில், ``ஹெச்.ஐ.வி., தொற்று கொண்ட ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான சிகிச்சையும் உரிய இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும்.

மேலும், ரத்த மாற்று சிகிச்சையை பாதுகாப்பானதாக மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தவும், மக்களின் நலன் கருதி தானமாகப் பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பானதாகப் பெற முறையான விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, ``பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்ச ரூபாயை தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். 10 லட்ச ரூபாயை பெண்ணின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். மீதமுள்ள 15 லட்ச ரூபாயை இரு குழந்தைகள் பெயரிலும் டெபாசிட் செய்ய வேண்டும். தற்போது அந்தப் பணத்தை எடுக்க முடியாத வகையிலும் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின் அதை உபயோகித்துக்கொள்ளும் வகையில் டெபாசிட் செய்ய வேண்டும்.

ஹெச்.ஐ.வி
ஹெச்.ஐ.வி

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கெனவே 450 சதுர அடிக்கு குறையாமல் இரு படுக்கையறைகளைக் கொண்ட சுற்றுச்சுவருடன் கொண்ட வீடு கட்டித்தர வேண்டும். ரத்தம் வழங்குதல், பெறுதலை பாதுகாப்பானதாக மேற்கொள்ள வல்லுநர்களைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்கவும், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்குதல் தொடர்பாக உரிய பயிற்சி அளித்து பணியாளர்களை நியமிக்க வேண்டும்" என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர். மேலும், இதன் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை ஜனவரி 11-ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.