Published:Updated:

சுய ஊரடங்கிற்குத் தயாராகணும் தான்... அதற்காக இப்படியா..?! - ஊட்டி உழவர் சந்தை காட்சிகள்

Ooty farmer's market
Ooty farmer's market

சுய ஊரடங்கிற்கு நாளை தயாராகிறோம் என கடைத்தெருவிலும், சந்தைகளிலும் திருவிழா கூட்டத்தைப்போல கூடிவருகின்றனர் மக்கள். இதுபோன்ற செயலே தொற்றை அதிகரிக்கும் என ஆர்வலர்கள் கவலை.

ஒட்டுமொத்த உலக மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த நிலையில், நாளை ஒட்டுமொத்த தேசமும் சுய ஊரடங்கிற்குத் தயாராகிவருகிறது.

Ooty farmer's market
Ooty farmer's market

இந்த சுய ஊரடங்கிற்காக, அரசு மற்றும் தனியார் துறைகள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தவுள்ளது. மக்களை வீடுகளிலேயே இருக்க அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், கேரளா மற்றும் கர்நாடக சோதனைச் சாவடிகள் முழுமையாக மூடப்படுகின்றன. மிக அவரசத் தேவைகளுக்காக மட்டுமே அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Ooty farmer's market
Ooty farmer's market

கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்ததுமுதலே மக்கள், அத்தியாவசிய பொருள்களை வாங்க ஆர்வம்காட்டிவருகின்றனர்.

இந்த நிலையில், ஊட்டியில் உள்ள உழவர் சந்தையில், இன்று காலை 7.30 மணி முதலே வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டத்தால் நிரம்பியது. பெண்கள், ஆண்கள் எனப் பலரும் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் நடக்கவே முடியாத அளவிற்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் மாஸ்க் அணிந்திருந்தாலும், பாதுகாப்பற்ற நிலையே உள்ளது.

Ooty farmer's market
Ooty farmer's market

கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்கவே, நாளை சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், சுய ஊரடங்கிற்குத் தயாராகிறோம் என்ற பெயரில், போதிய பாதுகாப்பு இல்லாமல் சந்தைகளிலும், கடைத்தெருக்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடுவது கொரோனா பரவல் குறித்த அச்சத்தை அதிகப்படுத்தும் வகையில் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் அரசு அதிகாரிகள் சிலர்.

Ooty farmer's market
Ooty farmer's market

இது குறித்து உதகை நகர மக்கள் விழிப்புணர்வு இயக்க நிறுவனர் ஜனார்த்தனன் நம்மிடம் பேசுகையில், "மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்கவே விடுமுறை அளிக்கப்பட்டு, பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், சுய ஊரடங்கிற்குத் தயாராகிறோம் என்ற பெயரில், இன்று காலை முதல் மக்கள் கடைத்தெருக்களில் கூடுவது கவலையளிக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு