Published:Updated:

தேனி: மழை பாதிப்பு அபாயம்; ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் ராஜ வாய்க்கால்!- கவனிக்குமா அரசு இயந்திரம்?

சாலையில் தேங்கிய மழைநீர்

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகத்துக்கு 500 மீட்டர் தூரம் சுரங்கப்பாதை வழியில் மண் மேவி அடைப்பு ஏற்பட்டிருப்பதால், தண்ணீர் தாமரைக்குளம் கண்மாய்க்குச் சென்றடைய முடியவில்லை.

தேனி: மழை பாதிப்பு அபாயம்; ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் ராஜ வாய்க்கால்!- கவனிக்குமா அரசு இயந்திரம்?

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகத்துக்கு 500 மீட்டர் தூரம் சுரங்கப்பாதை வழியில் மண் மேவி அடைப்பு ஏற்பட்டிருப்பதால், தண்ணீர் தாமரைக்குளம் கண்மாய்க்குச் சென்றடைய முடியவில்லை.

Published:Updated:
சாலையில் தேங்கிய மழைநீர்

தேனி மாவட்டம், கொட்டக்குடி ஆற்றில் வடகரை மதகு மூலம் திறக்கப்படும் தண்ணீரும், மீறுசமுத்திரம் கண்மாயில் மறுகால் பாயும் தண்ணீரும், தேனி நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை மழைநீர் வடிகால்கள் ஆகியவை பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ராஜவாய்க்கால் மூலம் 2.8 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, மதுரை சாலையிலுள்ள தாமரைக்குளம் கண்மாய்க்குச் சென்றடைகிறது.

பள்ளியில் தேங்கிய மழைநீர்
பள்ளியில் தேங்கிய மழைநீர்

இந்த வாய்க்காலில், தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகத்துக்குள் 500 மீட்டர் தூரம் சுரங்கப்பாதை வழியில் மண் மேவி அடைப்பு ஏற்பட்டிருப்பதால், தண்ணீர் தாமரைக்குளம் கண்மாய்க்குச் சென்றடைய முடியவில்லை.

இதனால் மழைக்காலத்தின்போது ராஜ வாய்க்காலில் தண்ணீர் செல்ல வழியின்றி தேனி நகரின் முக்கியச் சந்திப்பான நேரு சிலை பகுதி, மதுரை ரோடு, பங்களாமேடு ஆகிய பகுதிகளில் கழிவுகளுடன்கூடிய மழைநீர் தேங்குகிறது. மேலும், பங்களாமேடு பகுதிகளிலுள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகும் நிலை நிலவுகிறது. 

ஆக்கிரமிப்பு
ஆக்கிரமிப்பு

பழைய பேருந்து நிலையப் பகுதியில் இருக்கும் கால்வாய் அடைப்பை நீக்குவதற்கு பதிலாக, ராஜவாய்க்காலின் வழித்தடம் மாற்றப்பட்டு கொட்டகுடி ஆற்றுக்கே திருப்பி விடப்பட்டது. மேலும் ராஜவாய்க்கால் தூர்வாரும் பணியில் பொதுப் பணித்துறையினர் அக்கறை காட்டாததால் நகராட்சி பழைய பேருந்து நிலையத்துக்குப் பின்புறம், சுப்பன்தெரு, சோலைமலை அய்யனார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாய்க்காலின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் எழுப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 29, 30, 31, 32 ஆகிய வார்டுகளின் வழியாகச் செல்லும் ராஜ வாய்க்காலை ஆக்கிரமித்து 250 வீடுகள் வரை கட்டப்பட்டன. மேலும், கால்வாயின்மீது மண்மேவி அதில் ஹோட்டல்கள், ஜவுளிக்கடைகள், பலசரக்குக் கடைகள் என மொத்தம் 100 கடைகள் உருவாகிவிட்டன. இதனால் 40 அடி அகலம்கொண்ட ராஜ வாய்க்கால் 10 அடிக்கும் குறைவாகிவிட்டது. சில பகுதிகளில் 2 அடி அகலம்கொண்ட சாக்கடையாக மாறிவிட்டது. 

சுமார் 20 ஏக்கர்கொண்ட தாமரைக்குளம் கண்மாய்த் தண்ணீரை நம்பி விவசாயம் செய்துவந்தவர்களும், ``ராஜ வாய்க்கால் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, பொதுப் பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற முன்வர வேண்டும். ராஜ வாய்க்கால் அதன் இயல்பான வழித்தடத்தில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர். 

மழைநீர்
மழைநீர்

தேனி மாவட்டத்துக்குப் பல கலெக்டர்களும், நகராட்சி அதிகாரிகளும் மாறிவிட்டபோதிலும் ராஜ வாய்க்கால் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. கடைசியாக தேனியில் கலெக்டர் பல்லவி பல்தேவ் இருந்தபோது, அவர் உத்தரவின்பேரில் கொட்டகுடி ஆறு வடகரை மடை முதல் பள்ளிவாசல் தெரு, தேனி-கம்பம் சாலை, நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகம், சுப்பன் தெரு, சோலை அய்யனார் கோயில் தெரு, பங்களாமேடு, மதுரை சாலை ஆகிய பகுதிகளில் ராஜ வாய்க்காலை பொதுப்பணித்துறைப் பொறியாளர்கள் நில அளவை செய்தனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் அளவைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் பாதியில் விடப்பட்டன.

இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் ராஜ வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கியது. தாமரைக்குளம் கண்மாயிலிருந்து கால்வாய் தூர்வாரும் பணி தொடங்கியது. அந்தப் பணி குடியிருப்புப் பகுதிகளை நெருங்கும்போது பிரச்னைகள் எழக்கூடும் என்பதால் தொய்வு ஏற்பட்டது. தற்போதைய கலெக்டர் முரளிதரனும், ஆய்வுசெய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இருப்பினும் ஆக்கிரமிப்பாளர்கள், `நகராட்சிக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டியிருக்கிறோம். மின்வாரியத்தில் விண்ணப்பித்து இணைப்பு பெற்று அதற்கான கட்டணத்தையும் முறையாகச் செலுத்திவருகிறோம்' எனக் கூறி, தூர்வாரும் பணிக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். குறிப்பாக, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஹோட்டல்கள், கடைகளால் ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் தூர்வாரும் பணிக்குத் தடையாக இருக்கின்றனர். 

ஆக்கிரமிப்புப் பகுதி
ஆக்கிரமிப்புப் பகுதி

இத்தகையை சூழலில், திட்டச்சாலை அருகே ராஜவாய்க்காலை ஒட்டியுள்ள அரசு உதவி பெறும் மகாராஜா தொடக்கப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு தலைமையாசிரியர், ஓர் உதவி ஆசிரியர், 40 மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர். இந்தப் பள்ளியின் முதல் தளத்தில் வாய் பேச மற்றும் காது கேளாதோர் சிறப்புப் பள்ளியும் தனியார் தொண்டு மூலம் இயங்கிவருகிறது. இதில் 3 முதல் 6 வயதுடைய 16 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் கடந்த இரு தினங்களாகப் பெய்யும் மழைநீர் தேங்கியிருக்கும் வீடியோ பரவியது. இதையடுத்து, `ராஜவாய்க்காலை ஒட்டியுள்ள பள்ளியில் குழந்தைகள் வந்து செல்வது ஆபத்தானது, எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். 

இந்த நிலையில், தற்போது நடந்துவரும் தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்ய பெரியகுளம் தி.மு.க எம்.எல்.ஏ சரவணக்குமார் வந்திருந்தார். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டுச் சென்றார். 

ஆக்கிரமிப்புப்  பகுதி
ஆக்கிரமிப்புப் பகுதி

மழைக்காலத்தின்போது தேனி நகரில் மழைநீர் தேங்காமல் தடுக்க ஒரே வாய்ப்பாக ராஜ வாய்க்கால் மட்டுமே இருக்கிறது. எனவே, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, கால்வாயைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.