இன்று சென்னை வரும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் நலத்திட்டங்களில் ஒன்று, `லைட் ஹவுஸ்'. நகர்ப்புற ஏழை மக்கள் வசிப்பதற்கு அடுக்கு மாடி குடியிருப்பை ஏற்படுத்தித் தருவதே 'லைட் ஹவுஸ்' எனப்படும் கலங்கரை விளக்கத் திட்டம். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சென்னையில் வசிக்கும் நகர்ப்புற ஏழைகளுக்கு 116 கோடி ரூபாய் செலவில் 1,152 வீடுகள், அமெரிக்கா மற்றும் பின்லாந்தில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது.
அதாவது, அமெரிக்கா மற்றும் பின்லாந்துகளில் பிரமாண்ட வீடுகள் கட்ட `ப்ரீ - காஸ்ட் கான்ரீட்' தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் கட்டடத்தை உருவாக்க, கான்கிரீட் கலவை மூலம் சுவர் மற்றும் மேற்கூரை தயார் செய்யப்பட்டு இருக்கும். தயார்நிலையில் உள்ள சுவர் மற்றும் மேற்கூரையை ஒன்றன் மீது ஒன்றாக பொருத்திக் கட்டடத்தை உருவாக்குவார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உலகளாவிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன் முறையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டது இந்தக் கட்டடம்தான் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று பிரதமர் மோடி நகர்ப்புற ஏழை மக்கள் வசிப்பதற்கான அடுக்கு மாடி குடியிருப்பைத் திறந்து வைக்கிறார்.
கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, லைட் ஹவுஸ் எனப்படும் கலங்கரை திட்டத்தை நாடு முழுவதிலுமுள்ள ஆறு இடங்களில் செயல்படுத்த மோடி அடிக்கல் நாட்டியிருந்தார். இந்நிலையில், சென்னையில் இது வெற்றிகரமாக முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்படுவது, குறிப்பிடத்தக்கது.