Published:Updated:

`மாட்டைப் புடின்னா, தொட்டு ஆசீர்வாதம் பண்ணிட்டு இருக்கீங்க’! - ஈரோடு ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்...

காளையை அடக்கும் வீரர்கள்
காளையை அடக்கும் வீரர்கள் ( க.தனசேகரன் )

காளைகள் திரும்ப யூ-டர்ன் அடித்துவந்து ‘யாராவது என்னைத் தொட்டுப் பார்க்குறீங்களா!’ எனத் தலையைச் சிலுப்பியது வேற லெவல் மிரட்டல்.

தென் மாவட்டங்களில் மட்டுமே நடந்துவந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியானது, ஈரோட்டில் 2-வது ஆண்டாக நேற்று நடைபெற்றது. வாடிவாசலில் சீறிய காளைகள், கம்பீரமாய்க் காளைகளை அடக்கிய வீரர்கள், பொதுமக்களின் கைதட்டல் உற்சாகம் எனப் பெரும் திருவிழாவாய் நடைபெற்ற ஈரோடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ்...

* ஈரோடு ஜல்லிக்கட்டுப் பேரவை சார்பில் 2-வது ஆண்டு ஜல்லிக்கட்டு திருவிழா, ஈரோடு - பெருந்துறை சாலையில் பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏ.ஈ.டி பள்ளி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

* ஜல்லிக்கட்டுப் போட்டியினை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் மற்றும் ஈரோடு கலெக்டர் கதிரவன், ஈரோடு எஸ்.பி சக்திகணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கும் அமைச்சர்கள்
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கும் அமைச்சர்கள்
க.தனசேகரன்

* 322 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர். வயது குறைவு, உடலில் காயம் போன்ற காரணங்களால் 6 காளைகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுமதி மறுக்கப்பட்டன.

* ஜல்லிக்கட்டினை பொதுமக்கள் கண்டுகளிக்க 5 ஆயிரம் பேர் உட்காரும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. விதிமீறல் மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்காக ஜல்லிக்கட்டு அரங்கைச் சுற்றிலும் 60 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

* 5 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 20 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாடுபிடி வீரர்களைப் பரிசோதிக்க, சிகிச்சையளிக்க 10 மருத்துவக் குழுக்கள், 108 ஆம்புலன்ஸ்கள் அலர்ட்டாக இருந்தன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளை
வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளை
க.தனசேகரன்

* முதல் சுற்றில் வாடிவாசலில் இருந்த சீறிய காளைகளைப் பிடிக்க முடியாமல், மாடுபிடி வீரர்கள் திணறிப் போயினர். அதே காளைகள் திரும்ப யூ-டர்ன் அடித்துவந்து ‘யாராவது என்னைத் தொட்டுப் பார்க்குறீங்களா!’ எனத் தலையைச் சிலுப்பியது வேற லெவல் மிரட்டல்.

* ‘ஏய் என்னய்யா மாட்டைப் புடிக்காம, ஓட விட்டுட்டு அழகு பாத்துக்கிட்டு இருக்கீங்க. உங்க ஆட்டத்துல இன்ட்ரஸ்டே இல்லையா’ என வர்ணனையாளர் மாடுபிடி வீரர்களிடம் சலித்துக் கொண்டார். அந்த அளவிற்கு முதல் சுற்றில் ஆட்டம் சுறுசுறுப்பில்லாமல் மந்தமாக இருந்தது. இரண்டாம் சுற்று வீரர்கள் களமிறங்கியதும் ஆட்டத்தின் டிஸைனே அதகளமானது.

காளையை அடக்கும் வீரர்கள்
காளையை அடக்கும் வீரர்கள்
க.தனசேகரன்

* இரண்டாம் சுற்றில் களமிறங்கிய வீரர்கள், வாடிவாசலில் சீறிய காளைகளின் திமிலை நேக்காகப் பிடித்து அடக்கி பரிசைக் குவிக்க ஆரம்பித்தனர். வரிசையாக மாடுகள் பிடிபட ஆரம்பிக்க, போட்டி சூடுபிடித்தது

* கிரைண்டர், மிக்ஸி, சோஃபா செட், காளைக்கன்று, செல்போன் மற்றும் தங்கம் வெள்ளி நாணயங்கள் எனப் பரிசு மழை கொட்டியது.

* பிடிபடாத மாட்டின் உரிமையாளர்கள் பலர் உற்சாகத்தில் மாட்டைப் பிடிக்க ஓட, ‘ஏய் என்னயா மாடு ஜெயிச்சிடுச்சின்னு ஓடுற, பரிசு வேணாமா’ என மைக்கில் அறிவிப்பாளர் அலற கூட்டம் கலகலத்தது.

காளையை அடக்கும் வீரர்கள்
காளையை அடக்கும் வீரர்கள்
க.தனசேகரன்

* ‘அஞ்சான் கார்த்திக் களத்துல இறங்கிட்டான்யா’... என அறிவிப்பாளர் சொல்ல, ‘இந்தப் பையன் தானே போன வருஷம் அதிக காளைகளை அடக்கினான்’ எனப் பார்வையாளர்கள் ரீவைண்டு மோடு பட்டனைத் தட்டிவிட்டனர். உடலின் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்ட போதிலும், தளராமல் காளைகளை அடக்கிய அஞ்சான் கார்த்திக் அரங்கை ஆச்சர்யத்தால் கட்டிப் போட்டார்.

* ‘ஒரு மாட்டை ரெண்டு பேர் புடிச்சீங்கன்னா பரிசு கிடையாது, வெறும் பொங்கல் வாழ்த்து தான்’; ‘மாட்டைப் புடிங்கன்னா, என்னய்யா எல்லாரும் மாட்டை தொட்டு ஆசீர்வாதம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க’; ‘டேய் தம்பி கலர் டவுசரு, உன் டவுசருக்கே பரிசு கொட்டுது பாரு’; ‘ஏய் எல்லாம் உஷாரா இருங்கய்யா, ஓசியிலயே காளை ஓட்டையைப் போட்டுடும்’; ‘டேய் தம்பி என்ன துண்டை ஆட்டி ஒயிலாட்டம் காட்றியா, ஓரமாப் போய்யா மாடு உன்கிட்ட ஒயிலாட்டம் ஆடிடப் போவுது’; ‘தம்பி தள்ளி நின்னு செல்போன்ல படம் எடுய்யா; அடுத்த தை மாசம் படத்தை ரிலீஸ் பண்ண நீ இருக்கணும்ல’ என ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் சரவணனின் ஒவ்வொரு கமென்ட்டிற்கும் விழுந்த கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது.

முதல் பரிசு பெற்ற அஞ்சான் கார்த்திக்
முதல் பரிசு பெற்ற அஞ்சான் கார்த்திக்
க.தனசேகரன்

* 3-வது சுற்றில் ஆஜானுபாகுவாக வந்த காளையொன்றை வீரர் ஒருவர் அடக்கினார். அதேகாளை களத்தினுள் திரும்ப வந்து ஆட்டம் காட்டியது மாஸ் ரகம். ‘இப்ப இந்தக் காளையை யாராவது புடிச்சா அவிய்ங்களுக்கு 10 ஆயிரம் ரூபா சிறப்புப் பரிசு’ எனச் சொல்ல எல்லோரும் சீட்டின் நுனிக்கு வந்துவிட்டனர். ஆனால், அந்தக் காளையோ களத்தையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டு வாடிவாசலுக்குள் புகுந்தது. அந்தக் காளையைக் களத்திலிருந்து இன்ச் பை இன்ச்சாக நகர்த்தி ஓட்டிச் சென்ற உரிமையாளர் நொந்துபோனார். அதற்குள்ளாக 5 காளைகள் வாடிவாசலிலிருந்து வெளியேறி வீட்டிற்கே சென்றிருக்கும்.

* சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல்பரிசை 14 காளைகளை அடக்கி மதுரையைச் சேர்ந்த அஞ்சான் கார்த்திக் தட்டிச் சென்றார். அவருக்கு பஜாஜ் நிறுவனத்தின் பைக் ஒன்றும், கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. 11 மாடுகளை அடக்கி திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அவருக்கு ஃபிரிட்ஜ் பரிசாக வழங்கப்பட்டது. 3-ம் இடத்தைப் பிடித்த நாமக்கல் மாவட்டம் காரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த சபரிக்கு டிரஸ்ஸிங் டேபிள் பரிசாக வழங்கப்பட்டது.

* சிவகங்கை மாவட்டம், கிருங்காகோட்டையைச் சேர்ந்த தவமணி என்பவரின் காளை, சிறந்த காளைக்கான முதல் பரிசு ஸ்கூட்டியைத் தட்டிச் சென்றது.

அடுத்த கட்டுரைக்கு