Published:Updated:

பாரம்பர்ய உடை, பழங்குடிகளுடன் நடனம்; கயல்விழியின் ஊட்டி விசிட் பழங்குடிகளுக்குப் பலன் சேர்க்குமா?

அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
News
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நீலகிரிக்கு அமைச்சர்களின் வருகை அதிகரிக்கவே செய்திருக்கிறது. என்றாலும், தங்களின் துறை சார்ந்த அமைச்சர் வருகிறார் என்கிற தகவல் பழங்குடி, ஆதிதிராவிடர் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பூர்வகுடி மக்களுக்குத்தான் முன்னுரிமை இருக்க வேண்டும். ஆனால், ஆங்கிலேயேர்கள் காலத்துக்கு முன்பிருந்தே, பூர்வகுடிகள் வெகுவாக ஒடுக்கப்பட்டே கிடக்கிறார்கள். இதற்கு உதாரணம்... ஊட்டியில் வாழும் பல்வேறு பழங்குடியின மக்கள்தாம். மக்களாட்சி மலர்ந்த பிறகு, காங்கிரஸ் காலத்திலும் சரி, திராவிட இயக்கங்களின் ஆட்சிகளிலும் சரி, பழங்குடிகளின் வாழ்க்கையில் பெரிதாக முன்னேற்றமில்லை என்பதே நிதர்சனம்!

இந்நிலையில், `ஒவ்வொரு துறை அமைச்சரும் தங்கள் துறை சார்ந்து பயன்பெற வேண்டிய மக்களைச் சந்தித்து, அவர்களுடை குறைகளைக் கேட்டறிந்து களைய வேண்டும்' என்று தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் சிலர் சுழல ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பல்வேறு பழங்குடியின மக்களைச் சந்தித்துப் பேசியிருப்பது, அந்த மக்களிடையே சிறுநம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நீலகிரிக்கு அமைச்சர்களின் வருகை அதிகரிக்கவே செய்திருக்கிறது. என்றாலும், தங்களின் துறை சார்ந்த அமைச்சர் வருகிறார் என்கிற தகவல் பழங்குடி, ஆதிதிராவிடர் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யிருந்தது. அதற்கேற்றாற்போல மூன்று நாள்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், பழங்குடியின மக்கள் பலரையும் சந்தித்துப் பேசினார்.

டிசம்பர் 28 அன்று தமிழக மாளிகைக் கூட்ட அரங்கில், நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா (தி.மு.க) தலைமையில் நடைபெற்ற வன உரிமைச்சட்டம் 2006 தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார் அமைச்சர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் மற்றும் பழங்குடியினர் நலச் செயற்பாட்டாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, தீர்வுகாணும் வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

மதியம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பழங்குடி பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசியபோதும், பழங்குடி மக்களுக்கான தேவை குறித்தே பேசினார். தமிழகத்தில் பழங்குடிகள் வாழ்ந்துவரும் மாவட்டங்கள், அவர்களின் இன்றைய நிலை, பழங்குடி மக்கள் தொகை சரிவு, அந்த மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள், குறைபாடுகளைக் களைய தமிழக அரசு கொண்டுவரும் திட்டங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முத்தோரை குதி என்ற இடத்தில் இயங்கிவரும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டவர், ஆபத்தான நிலையில் இருக்கும் பழங்குடிப் பள்ளிகளையும் ஆய்வு செய்தார். சோலூர் கோக்கால் எனும் கோத்தர் பழங்குடி மக்களின் கிராமத்துக்குச் சென்றவர், அந்த மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அந்த இனப் பெண்களுடன் சேர்ந்து பாரம்பர்ய நடனமும் ஆடி குஷிப்படுத்தினார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

பின்னர், தோடர் பழங்குடியின மக்கள் வாழ்ந்துவரும் பகல்கோடு மந்துக்குச் சென்ற அமைச்சருக்கு, பாரம்பர்ய முறைப்படி வரவேற்பு அளித்தனர் அந்த மக்கள். அவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் குறைகளைக் கேட்டறிந்தவர், அந்த இனப் பெண்களின் பூத்துக்குளி எனும் பாரம்பர்ய உடையை அணிந்து நடனம் ஆடி அசத்தியதோடு, அவர்களுடைய பாரம்பர்ய உணவையும் சாப்பிட்டார்.

நிறைவாகச் செய்தியாளர்களிடம் பேசிய கயல்விழி செல்வராஜ், ``நேரில் சென்று பிரச்னைகளை அறிந்து தன்னிடம் தெரிவிக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். அந்த வகையில்தான் இந்த ஆய்வுப்பயணம். பழங்குடியின மக்கள் நிறைய குறைகளை என்னிடம் பகிர்ந்துள்ளனர். வன உரிமைச் சட்டம் 2006 வெளியிடப்பட்டு 15 ஆண்டுகள் ஆனபோதிலும், அதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக அந்த மக்கள் கூறியுள்ளனர். ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் வனத்துறை ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வுக் கூட்டத்திலும் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் முதல்வரிடம் தெரிவித்து, பழங்குடியின மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு உரிய உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வேன்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

சாதிச்சான்று பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதோடு, பழங்குடியின மக்களின் மேய்ச்சல் நிலம் மீண்டும் அவர்களுக்குக் கிடைக்க வனத்துறை அதிகாரிகள் மூலமாக முயற்சி மேற்கொள்வேன். பழங்குடியின கிராமச் சாலைகளை மேம்படுத்தும் பணிகளையும் விரைவில் உரிய துறையின் உதவியோடு செயல்படுத்துவோம்.

மக்கள் வாழ்க்கை மேம்பட பல்வேறு திறன் மேற்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பழங்குடியின மக்கள் அனைத்து அரசுத் துறை தேர்வுகளையும் நீலகிரி மாவட்டத்தில் எழுதுவதற்கு ஏதுவாகத் தேர்வு மையங்களை நீலகிரி மாவட்டத்தில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

இந்த ஆய்வுப் பயணம் குறித்து நம்மிடம் பேசிய நீலகிரி பழங்குடி மக்கள், ``எங்கள் துறை அமைச்சர், எங்கள் கிராமங்களுக்கு நேரடியாக வந்து குறைகளைக் கேட்டிருப்பது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. எங்களின் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்'' என்று சொன்னார்கள்.

பலகாலமாக வீணாகப் போய்க்கொண்டிருக்கும் நம்பிக்கை, இனியும் வீணாகாமல் இருந்தால் சரி!