Published:Updated:

`உயர் அதிகாரிகள் என்னை பழிவாங்குகிறார்கள்!'- தேனி ஆட்சியரிடம் கலங்கிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்

ஈஸ்வரன், அவரின் மனைவி மகாலெட்சுமி
ஈஸ்வரன், அவரின் மனைவி மகாலெட்சுமி

நெடுஞ்சாலைத்துறையில் கடந்த 23 வருடங்களாக சாலைப் பணியாளராக வேலைபார்த்துவரும் ஈஸ்வரன், தன்னை உயர் அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து பழிவாங்குவதாகவும், கடந்த எட்டு மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் இருப்பதாகவும் கூறி மாவட்டக் கலெக்டரிடம் முறையிட்டார்.

தேனி மாவட்டம் அரண்மனைப்புதூர் முல்லைநகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். மாநில நெடுஞ்சாலைத்துறையில் சாலைப்பணியாளராக வேலைபார்த்துவந்த இவர், குடும்பத்தோடு கலெக்டரை சந்தித்து முறையிட்டார். அவரிடம் பேசியபோது, ``என்னுடைய நெருங்கிய நண்பர், கோடாங்கிப்பட்டி முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் திருக்கண்ணன் என்பவருக்கு 3 லட்சம் ரூபாய் அவசரமாகத் தேவைப்பட்டது.

`லோனை நான் கட்டிக்கிறேன்; ஆயிரம் ரூபாய் வாங்கிக்கங்க!’ - தேனி பழங்குடியினப் பெண்களை அதிரவைத்த மோசடி
ஈஸ்வரன்
ஈஸ்வரன்

அப்போது, என்னுடை உயர் அதிகாரியான, நெடுஞ்சாலைத்துறை இளநிலைப் பொறியாளர் அனுஷியா என்பவரின் சித்தப்பாவும் தேனி சுப்பன்தெருவில் கோதையாண்டாள் நிதி நிறுவனம் நடத்தி வருபவருமான பாலகிருஷ்ணன் என்பவரிடம் பணம் கேட்டோம். என்னுடைய சாட்சிக் கையெழுத்துடன், என்னுடைய நண்பர் திருக்கண்ணனுக்கு ரூ. 3 லட்சம் பணம் கொடுத்தார். நான்கு தவணைகள் கட்டிய நிலையில், சூழ்நிலை காரணமாக, திருக்கண்ணனால் தொடர்ந்து பணம் கட்ட முடியவில்லை. இதனால், நீதிமன்றத்தை நாடிய பாலகிருஷ்ணன், எனக்கும் திருக்கண்ணனுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து, நானும் திருக்கண்ணனும் நீதிமன்றத்தில் ஆஜரானோம். விரைவில் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகத் திருக்கண்ணன் உறுதியளித்தார்.

இதற்கிடையில், பாலகிருஷ்ணன் அனுஷியாவின் சித்தப்பா என்பதால், அனுஷியா மூலமாக, அலுவலகத்தில் நெருக்கடி கொடுத்து எனக்கு வர வேண்டிய சம்பளத்தைப் பிடித்தனர். காரணம் கேட்டதற்கு, `பண மோசடி செய்திருக்கிறாய். நீ எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்!’ என்று கூறினார்கள். தொடர்ந்து நானும் கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தும், என்னுடைய உயர் அதிகாரிகளான உதயகுமார், அய்யப்பன் ஆகியோர் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியும், விரட்டியும் அடித்தனர். மிகுந்த மன உளைச்சலில், கடந்த 14-ம் தேதி அரளி விதையை அரைத்துக்குடித்து தற்கொலைக்கு முயன்றேன். கானாவிலக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னை தற்கொலைக்குத் தூண்டியதாக, அனுஷியா, கண்ணன், உதயகுமார் ஆகியோர் மீது பி.சி பட்டி காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதைத் தங்களது சொந்த பிரச்னை போல நினைத்துக்கொண்டு, அனைத்து உயர் அதிகாரிகளும் சேர்ந்து, அரசு வேலையில் இருந்த என்னை பழிவாங்கி, என் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்குகின்றனர். தொடர்ந்து எட்டு மாதங்களாக என்னுடைய சம்பளம் அனைத்தையும் முறைகேடாக மறைத்து, என்னுடைய வாழ்வாதாரத்தை முழுவதுமாக அழித்துள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நான் வேலை செய்ததற்கான சம்பளத்தைக் கொடுக்க வேண்டும்” என்றார்.

`உயர் அதிகாரிகள் என்னை பழிவாங்குகிறார்கள்!'- தேனி 
 ஆட்சியரிடம் கலங்கிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்

இதே கோரிக்கையை கலெக்டரிடம், ஈஸ்வரன், அவரின் மனைவி மகாலெட்சுமி, மகன் ஆகியோர் முறையிட்டனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை வரவழைத்து, ஈஸ்வரனின் புகார் மனுவை அவரிடம் கொடுத்த கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ், ``நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கிறேன்!” என ஈஸ்வரனிடம் கூறினார்.

`ஆவணங்கள், ஓட்டு மெஷின் ரூமில் இருக்கு!' - பட்டதாரி இளைஞருக்கு அதிர்ச்சிகொடுத்த தேனி அதிகாரிகள்
அடுத்த கட்டுரைக்கு