Published:Updated:

கோவை தெற்கு: வானதி சீனிவாசன் வெற்றிக்கு எதிரான புகாரும், தேர்தல் ஆணையத்தின் பதிலும்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கோவை தெற்குத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றியை எதிர்த்து போராடுகிறார் ராகுல் காந்தி என்ற வேட்பாளர்.

தமிழகமே உற்று நோக்கிய கோவை தெற்குத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றிபெற்றார். கோவை தெற்குத் தொகுதியில் ம.நீ.ம கமல்ஹாசன், காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார், பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன் இடையே கடுமையான போட்டி நிலவியது. முதல் 22 சுற்றுகளுக்கு கமல்ஹாசனே முன்னிலை வகித்துவந்தார்.

கமல்ஹாசன் வானதி சீனிவாசன்
கமல்ஹாசன் வானதி சீனிவாசன்
திக் திக் நிமிடங்கள்; பேசிக்கொண்ட கமல் - வானதி: கோவை தெற்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கை பரபர!

ஆனால், கடைசி நான்கு சுற்றுகளில் வானதி சீனிவாசனுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைக்கவே 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றார். கமல்ஹாசன் இரண்டாவது இடம்பிடித்தார். இது மக்கள் நீதி மய்யத்தினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், அதே கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட இந்துஸ்தான் ஜனதா கட்சியின் வேட்பாளர் ராகுல் காந்தி என்பவரும் கோவை தெற்குத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆகியோரிடம் ராகுல் காந்தி புகார் மனுவும் அளித்திருந்தார்.

புகார்
புகார்

இதையடுத்து, ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்பதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தெற்குத் தொகுதிதான். நாடாளுமன்றத் தேர்தலில் கேரளா வயநாடு தேர்தலில் போட்டியிட்டே கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தேன். இங்கு 73 வாக்குகள்தான் பெற்றுள்ளேன். எனது தந்தை காங்கிரஸில் நீண்ட காலம் இருந்தவர். அங்குள்ள பழைய காங்கிரஸ்காரர்கள் எல்லாம் எனக்குத்தான் ஆதரவு தெரிவித்தனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மக்களிடமும் எனக்கு நன்கு ஆதரவு கிடைத்தது. எனது கிரிக்கெட் மட்டை சின்னமும் மக்களிடம் பரிச்சயம் அடைந்தது. நான் நான்கு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். இதுபோல குறைவான வாக்குகளை நான் இதற்கு முன்பு பெற்றதே இல்லை.

தேர்தல் பிரசார களத்தில் பா.ஜ.க-வுக்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. எங்கு சென்றாலும் பா.ஜ.க-வை மக்கள் வெறுக்கவே செய்தனர். கமலுக்கும் எனக்கும் நல்ல ஆதரவு இருந்தது. பல பேர் என்னை வீட்டுக்கு அழைத்து சாப்பிட எல்லாம் வற்புறுத்தினர். எனது உறவினர்கள், நண்பர்கள் பலரது ஆதரவு இருந்தும் இவ்வளவு குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதன் பின்னணியில் ஏதோ நடந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இல்லையென்றால் எனக்கு வாக்குகள் குறைந்து பா.ஜ.க-வுக்கு வாக்கு அதிகமாக வாய்ப்பு இல்லை. எனக்கு வாக்களித்த மக்களே நேரடியாக வந்து சாட்சி சொல்லத் தயாராக உள்ளனர். தேவையான ஆதாரங்களும் உள்ளன. அதை உரிய இடத்தில் சென்று நிரூபிப்பேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு