Published:Updated:

`நீர்நிலைகளில் இருக்கும் குமிழித் தூண்களின் முக்கியத்துவம் என்ன?' - பின்னணி சொல்லும் ஆய்வாளர்

பாசன மதகு
பாசன மதகு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு குமிழித் தூம்பின் பெயரே `ராஜராஜன்' எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. திருநெல்வேலி திருக்குறுங்குடி ஏரியில் உள்ள குமிழித் தூம்பின் தூண்கள் இரண்டிலும் சங்கு, சக்கரம், முதலை, ஆமை போன்ற உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன.

தஞ்சாவூரைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன், `திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, திருக்குறுங்குடி பெரிய ஏரியில் உள்ள பழைமையான மதகில் அரியவகை சிற்பங்கள் உள்ளன. ஏரிகளில் பொக்லைன் இயந்திரம் கொண்டு செய்யப்படும் தூர்வாரும் பணியால் இத்தகைய குமிழித் தூம்புகள் அழிந்துவிடும் நிலை உள்ளதால் தமிழ்நாடு அரசு இத்தகைய குமிழித் தூம்புகளைப் பாதுகாக்கப் பெற்ற வரலாற்றுச் சின்னங்களாக அறிவிக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெரியகோயிலை கட்டச்சொன்ன ராஜராஜன் தெரியும்; கட்டிய குஞ்சர மல்லனைத் தெரியுமா? #VikatanOriginals

இதுகுறித்து அவர் கூறியதாவது, ``இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் ஏரி நீர்ப்பாசனத்துக்காக அறிவியல் தொழில் நுட்பத்துடன் பயன்படுத்திய மதகுக் கட்டுமானத்தைக் குமிழித் தூம்பு எனக் குறிப்பிடுவர். மாவட்டம்தோறும் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்களில் கரையிலிருந்து ஏரியின் உட்புறம் சிறிது தூரத்தில் இரண்டு கல்தூண்கள் குறுக்கு விட்டங்களுடன் நிற்பதைக் காணலாம். அந்த இடத்திலிருந்து பூமிக்குக் கீழாக அமைக்கப் பெற்றுள்ள சுரங்கக் குழாய் வழியாக வெளியேற்றப்படும் நீர் ஏரிக்கரைக்கு வெளியே வந்து கால்வாய் வழியாகப் பாயும்.

குடவாயில் பாலசுப்ரமணியன்
குடவாயில் பாலசுப்ரமணியன்

இத்தகைய குமிழித்தூம்பு அமைப்பால் பாசனம் பெறும் ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு எவ்வளவு நீர்த்தேவையோ அந்த அளவு நீரை மட்டுமே வெளியேற்றலாம். அதேநேரத்தில் ஏரியின் தரையில் படியும் சகதியின் பெரும்பகுதி நீரோடு வெளியேறும் வகையில் சிறப்பான தொழில்நுட்ப அமைப்பு இருப்பதால் அவையும் ஏரியின் தரையில் படியாது.

ஆங்கிலேயர் காலத்தில் பொதுப்பணித்துறை ஏரிகளைப் பராமரிக்கத் தொடங்கியதிலிருந்து தூம்புகள் கைவிடப்பட்டன ஏரிகளும் மேடிட்டு அழிந்தன. பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பெற்ற இத்தகைய குமிழித்தூம்புகளின் தூண்களில் சோழர், பல்லவர்கள், பாண்டியர், பிற்கால அரச மரபினர் எனப் பலர் காலத்துக் கல்வெட்டுக்களும் அரசு சின்னங்களும், தெய்வச் சிற்பங்களும் காணப்படுகின்றன.

மதகு
மதகு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு குமிழித் தூம்பின் பெயரே `ராஜராஜன்' எனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. திருநெல்வேலி திருக்குறுங்குடி ஏரியில் உள்ள குமிழித் தூம்பின் தூண்கள் இரண்டிலும் சங்கு, சக்கரம், முதலை, ஆமை போன்ற உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. அந்தக் குமிழித் தூம்பினை திருமாலின் அம்சமென மக்கள் போற்றியதால் சங்கு சக்கரம் ஆகியவற்றைப் பொறித்துள்ளனர்.

இந்திய கலைமரபில் கங்கையின் வாகனமாக முதலையையும் யமுனையின் வாகனமாக ஆமையையும் காட்டுவது மரபு. இங்கு ஏரிநீரை கங்கை, யமுனை நீராக மக்கள் கருதியதால் முதலையையும் ஆமையையும் சிற்பங்களாகக் காட்டியுள்ளனர். தூம்பும் நீரும் மிகவும் புனிதமுடையவை என்பதைக் காட்டும் வகையில் இக்குமிழித்தூம்பு அமைந்துள்ளது.

வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்
வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்

ஏரிகளில் பொது மராமத்து தூர்வாருதல் என்ற பணியால் இத்தகைய குமிழித் தூம்புகளை பொக்லைன் இயந்திரங்கள் அழித்துவிடும் அபாயநிலை உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியது இதன் மூலம் அறிய முடிகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இத்தகைய குமிழித் தூம்புகளைப் பாதுகாக்கப்பெற்ற வரலாற்றுச் சின்னங்களாக அறிவித்துக் காப்பாற்ற வேண்டும். இதைக் காப்பது நமது கடமையாகும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு