Published:Updated:

`11 வருஷமாச்சு, அவன் இறப்புக்குப்பின் பண்டிகை கொண்டாடறதில்ல'- ஹிதேந்திரனை நினைத்துக் கலங்கும் தந்தை

ஹிதேந்திரன்
News
ஹிதேந்திரன்

``அந்தக் கோயிலைக் கடக்கும்போது, அவரை `ஹித்து முருகா'ன்னுதான் கூப்பிடுவேன்.''

`11 வருஷமாச்சு, அவன் இறப்புக்குப்பின் பண்டிகை கொண்டாடறதில்ல'- ஹிதேந்திரனை நினைத்துக் கலங்கும் தந்தை

``அந்தக் கோயிலைக் கடக்கும்போது, அவரை `ஹித்து முருகா'ன்னுதான் கூப்பிடுவேன்.''

Published:Updated:
ஹிதேந்திரன்
News
ஹிதேந்திரன்

`பதினோரு வருடங்களுக்கு முன்னாள், இதே நாளில்தான் என் மகன் அந்த விபத்தைச் சந்தித்தான். அடுத்த இரண்டு தினங்களில் அவன் மூளைச்சாவு அடைந்துவிட்டான் என்றார்கள் மருத்துவர்கள். இளைஞர்களே, கவனமாக வாகனங்களை ஓட்டுங்கள். இந்த உலகத்துக்கு எல்லோரையும்போல நீங்களும் ஒருவராக இருக்கலாம். ஆனால், உங்கள் பெற்றோருக்கு நீங்கள்தான் உலகமே. என் மகன் இறந்தாலும், அவனுடைய உறுப்புகளால் இன்றைக்கும் மற்றவர்கள் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலம் என் மகனும் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அவன் மரணம் வழியாக, உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டது. இவைதான் எங்களுக்கு ஆறுதல்' - இதயத்தை உருக்கும் இந்த ஸ்டேட்டஸைப் படிக்கும்போதே, பலருக்கும் இது ஹிதேந்திரனுடைய அப்பா அசோகன் சுப்ரமணியனின் ஸ்டேட்டஸ் என்பது புரிந்திருக்கும். அவரிடம் பேசினோம். அதற்கு முன் ஹிதேந்திரன் பற்றிய ஒரு சிறிய நினைவுபடுத்துதல்...

ஹிதேந்திரனின் உறுப்புகளை வைச்சிருக்கிறவங்ககூட தொடர்புல இருக்கிறது எதிக்ஸ் கிடையாதுன்னு யார்கூடவும் நாங்க பேசறதில்ல
ஹிதேந்திரன் அப்பா

2008-ம் வருடம் செப்டம்பர் மாதத்தில் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரன் என்ற 15 வயது பள்ளி மாணவன், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தான். அவனுடைய பெற்றோர் மருத்துவர்கள் என்பதால், மகனுடைய இதயம், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உடலுறுப்புகளை தானம் செய்தனர். இது, அந்த நேரத்தில் நாடு முழுவதும் உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஹிதேந்திரனால், உயிர்பிழைத்தவர்கள் இன்றும் வாழ்ந்துவருகிறார்கள். ஹிதேந்திரனின் பெற்றோர் மகனுடைய பெயரில் அறக்கட்டளை நிறுவி, உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள். தவிர, பள்ளிக் கல்வித்துறையின் ஆறாம் வகுப்பு தமிழ்ப்புத்தகத்தில் ஹிதேந்திரனின் உடலுறுப்பு தானம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

``சென்ற விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு ஹித்து ஞாபகம் ரொம்ப வந்துச்சு. அவன் இருந்தவரைக்கும் அவனும் அவன் தம்பியும் சேர்ந்து வீட்டை அலங்காரம் பண்றது, பிள்ளையார் சிலை வாங்கிட்டு வந்து அலங்காரம் பண்றதுன்னு வீடே கலகலப்பா இருக்கும். இப்பல்லாம் அப்படியொரு கொண்டாட்டமே எங்க வீட்ல கிடையாது. ஹித்து எங்களைவிட்டுப் போனதுக்குப்பிறகு இந்தப் பதினோரு வருஷமா எந்தப் பண்டிகையும் எங்க வீட்ல கொண்டாடறதில்ல'' என்பவரின் குரலில் துக்கத்தின் காயம் கொஞ்சம்கூட ஆறவில்லை.

ஹிதேந்திரன்
ஹிதேந்திரன்

``ஹிதேந்திரனுக்கு விபத்து நடந்த இடத்துக்குப் பக்கத்துல ஒரு முருகன் கோயில் கட்டியிருக்காங்க. அந்தக் கோயிலை கடக்கிறப்போ, அவரை `ஹித்து முருகா'ன்னுதான் கூப்பிடுவேன். கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு ஹிதேந்திரனோட கல்லீரலைக் கொடுத்தோம். அவங்களுக்கு இங்கிலீஷ் தெரியாது. எங்களுக்கு மலையாளம் தெரியாது. அதனால, அவங்களை சந்திச்சப்போ பெருசா பேச முடியல. ஆனா, இந்த ஆபரேஷனுக்கு அப்புறம் அவங்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்திருக்கான். அது மனசுக்கு இதமா இருந்துச்சு. மத்தபடி, ஹிதேந்திரனின் உறுப்புகளை வைச்சிருக்கிறவங்ககூட தொடர்புல இருக்கிறது எதிக்ஸ் கிடையாதுன்னு யார்கூடவும் நாங்க பேசறதில்ல'' என்றவர்,

``தற்போது உடலுறுப்பு தானம் தொடர்பா நிறைய நெகட்டிவான செய்திகளைப் படிக்கிறேன். அப்படியெல்லாம் நடக்காம இருக்கணும்'' என்று தன் வருத்தத்தையும் தெரிவித்தார்.