Published:Updated:

`வீடு இல்லையேன்னு ரொம்பக் கவலைப்பட்டிருக்கேன்!' -மாணவியை நெகிழவைத்த அரசுப் பள்ளி

ஆசிரியர்கள், மாணவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு
ஆசிரியர்கள், மாணவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு

வீடு கட்டுகிற அளவுக்கு அவங்களுக்கு வசதி இல்லைன்னு கேள்விப்பட்டோம். உடனே, இந்த வருஷம் ஹெப்சிபாவுக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம்னு முடிவெடுத்தோம்.

புதுக்கோட்டை மாவட்டம் லெக்கனாப்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளிக்குள் நுழைந்தவுடனே, `தருவோம்-பெறுவோம்' என்ற சேமிப்புப் பெட்டியைக் காணலாம். அந்தப் பெட்டியில், மாணவர்கள் தினமும் தங்களால் இயன்ற பணத்தை சேமித்துவைக்கின்றனர். சிறுவயதிலேயே மாணவர்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள், மாணவர்களின் சேமிப்புப் பணத்தோடு தங்களுடைய பணத்தையும் சேர்த்து, சக ஏழை மாணவர்களின் குடும்பத்துக்கு அவ்வப்போது பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், 20 வருடங்களுக்கும் மேலாக வீடு இல்லாமல், தெரிந்தவர்களின் வீடுகளில் தங்கி வாழ்க்கை நடத்திவந்த அரசுப் பள்ளி முன்னாள் மாணவி ஒருவருக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து வீடு கட்டிக்கொடுத்து நெகிழ வைத்துள்ளனர்.

ஆசிரியர்கள், மாணவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு
ஆசிரியர்கள், மாணவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு

தலைமையாசிரியர் ஆண்டனியிடம் பேசினோம். `` எந்தப் பள்ளியில் வேலைபார்த்தாலும், இல்லாதவர்களுக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்று மாணவர்களிடம் அடிக்கடி சொல்லுவேன். மாணவர்களும் நான் சொல்வதை அப்படியே பின்பற்றுகின்றனர். இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள், பிறர்க்கு உதவுவதில் ரொம்ப ஆர்வமாக இருக்காங்க. அவங்கதான் முன்னாள் மாணவி ஹெப்சிபாவுக்கு வீடு கட்டிக்கொடுக்க முக்கியக் காரணம். ஹெப்சிபாவுக்கு அப்பா இல்லை. அம்மா அரவணைப்பில்தான் இருக்காங்க. கூலி வேலை செஞ்சுக்கிட்டு ரொம்ப வருஷமா தெரிஞ்சவங்க வீட்டுல தங்கித்தான் வாழ்க்கை நடத்திக்கிட்டு வர்றாங்க.

`45 நாள்கள்.. 4.50 லட்ச ரூபாய்!' - வறுமையில் வாடிய நண்பனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வாட்ஸ்அப் குழு

அவங்ககிட்ட வீடு கட்டுகிற அளவுக்கு வசதி இல்லைன்னு கேள்விப்பட்டோம். உடனே, இந்த வருஷம் ஹெப்சிபாவுக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம்னு முடிவெடுத்தோம். மாணவர்கள், ஆசிரியர்கள் தங்களோட பங்களிப்பைக் கொடுத்தாங்க. அதோட என்னோட தொகையையும் சேர்த்து, எங்களால முடிஞ்ச அளவுக்கு அவங்க தங்குகிற அளவுக்கு ஒரு வீடு கட்டிக்கொடுத்திட்டோம். அவங்களுக்கு எவ்வளவு சந்தோஷமோ தெரியலை. எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். தொடர்ச்சியாக, ரொம்பக் கஷ்டப்படுற மாணவர்களுக்கும் அவங்களோட குடும்பங்களுக்கும் உதவணும்" என்றார் உற்சாகத்துடன்.

ஹெப்சிபா அவரது தாய்
ஹெப்சிபா அவரது தாய்

மாணவி ஹெப்சிபாவிடம் பேசினோம். "அரசு செவிலியர் கல்லூரியில, ஹாஸ்டல்ல தங்கி நர்சிங் படிப்பு படிச்சிக்கிட்டு இருக்கேன். லீவு விடும்போதெல்லாம், ஹாஸ்டல்ல இருக்கிற மாணவிகள் எல்லாம், ரொம்ப ஆர்வமாகக் கிளம்பி வீட்டுக்கு போவாங்க. அப்ப எல்லாம் நாம எந்த வீட்டுக்கு போறதுன்னு ரொம்பவே கவலையா இருக்கும். ஹாஸ்டலில் இருந்திடுவேன். அப்பா இல்லை. அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் இதுவரைக்கும் என்னைப் படிக்க வச்சிக்கிட்டு இருக்காங்க.

நமக்கு வீடு இல்லையேன்னு சொல்லி பலமுறை கவலைப்பட் டிருக்கேன். ஆசிரியர்களும் மாணவர்களும் அந்தக் கவலையைப் போக்கிட்டாங்க. எனக்குன்னு இப்போ வீடு இருக்கு. ஆசிரியர்கள், மாணவர்களின் இந்த உதவியை நானும் எங்க அம்மாவும் காலம் இருக்க வரைக்கும் மறக்க மாட்டோம்" என்கிறார் உருக்கமாக.

அடுத்த கட்டுரைக்கு