Published:Updated:

மத்திய அரசின் தேனீ வாரியத்தில் உறுப்பினரான முதல் தமிழ்ப் பெண்! - யார் இந்த ஈரோடு மஞ்சுளா?

சர்க்கரை சேர்க்காமல், தேனில் அல்வா, ஜெல்லி, கேக், நெல்லி உட்பட 32 வகையான பொருள்களை விற்பனை செய்றேன். இவற்றை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

manjula
manjula

தேன் மற்றும் அதன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்துவருகிறார், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த மஞ்சுளா. மத்திய அரசின் தேனீ வாரியத்தில் உறுப்பினராக இணைந்த தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். இதுகுறித்து மஞ்சுளாவிடம் பேசினோம்.

manjula
manjula

``கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவுக்குள் மட்டுமே தேன் விற்பனையில் ஈடுபட்டுவந்தேன். தேன் மற்றும் அதன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்றதுன்னா, மத்திய அரசின் தேனீ வாரியத்துல உறுப்பினராகணும். அது ரொம்பவே கடினமான காரியம்.

நீண்டகால அனுபவம் இருக்கணும்; தரமான முறையில் தேனைத் தயாரிக்கணும்; பலகட்ட பரிசோதனைகளிலும் வெற்றி பெறணும்; கோவை வேளாண் கல்லூரியால் சிபாரிசு செய்யப்படணும்; நம்ம தொழில் பத்தி நிறைய மக்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். அப்போதான் வாரியத்துல உறுப்பினராக முடியும். இதற்காகக் கடந்த மூணு வருஷமா ரொம்பவே முயற்சி பண்ணிட்டிருந்தேன்.

manjula
manjula

கோவை வேளாண் கல்லூரியில விண்ணப்பிச்சு, அவங்க மூலமா என் தொழில் பத்தின எல்லா விஷயங்களையும் தேன் வாரியத்துக்கு சமர்ப்பிச்சேன். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனீ வாரியத்துல என்னை உறுப்பினராக்கி, சான்றிதழ் வழங்கியிருக்காங்க. தமிழகத்துல ஏற்கெனவே ஓர் ஆண் மட்டும்தான் இந்த வாரியத்துல உறுப்பினராகியிருக்கார். அதன்பிறகு, இப்போ நான் உறுப்பினராகியிருக்கேன்" என்பவர், தற்போதைய பிசினஸ் நிலவரம் குறித்துப் பேசினார்.

``சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் தேனீ பெட்டிகளை வெச்சு தேன் சேகரிக்கிறேன். என் வீட்டுல இருந்தபடியேதான் மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரிக்கிறேன். சர்க்கரை சேர்க்காமல், தேனில் அல்வா, ஜெல்லி, கேக், நெல்லி உட்பட 32 வகையான பொருள்களை விற்பனை செய்றேன். இவற்றை சர்க்கரை நோயாளிகள்கூட சாப்பிடலாம். இந்தத் தேன் அதிகமாக விற்பனையாகுது.

manjula
manjula

தவிர, மருத்துவக் குணம்கொண்ட கொசுத் தேனையும் விற்பனை செய்றேன். இந்த வகை தேன், கிலோ 3,500 ரூபாய்க்கு விற்பனையாகுது. விற்பனை தவிர, தேன் சேகரிப்பு மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்புக்கான பயிற்சியும் கொடுக்கிறேன்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.