Published:Updated:

சென்னை: கொட்டித்தீர்த்த பெருமழை... கணிக்கத் தவறிய வல்லுநர்கள்! - என்னக் காரணம்?

சென்னை மழை
News
சென்னை மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி திடீரென நிலப்பகுதிக்கு நகர்ந்ததே அதிகனமழைக்குக் காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை கடந்த நூறு வருடங்களில் இதுவரை பெய்திடாத அளவுக்கு கொட்டித்தீர்த்தது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகளில் நீர் நிரம்பியது. இது ஒருபுறமிருக்க, தலைநகர் சென்னையில் பெய்த தொடர் கனமழை காரணமாக, மழைநீர் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. நகரின் பல பகுதிகள் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறின. மழை தொடர்ந்து பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல்வேறு முயற்சிக்குப் பின்னர் தேங்கியிருந்த மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

வாகன நெரிசல் சென்னை
வாகன நெரிசல் சென்னை

இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று தமிழக கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்று கூறப்பட்டது. சென்னையில் நேற்று மதியம் தொடங்கிய மழை இரவு வரை கொட்டித் தீர்த்தது. தொடர் கனமழை காரணமாகச் சென்னையில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. மொத்த நகரமும் பலமணி நேரமாக வாகன நெரிசலில் சிக்கித் தவித்தது. இரவு 11 மணிக்கு மேல் தான் வாகன நெரிசல் சற்றுக் குறைந்து, சாலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின. இருந்தபோதும், பல இடங்களில் தேங்கிய மழைநீர் வடியவே இல்லை. விடிய விடிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வானிலை அறிக்கை குறித்தும், நேற்று சென்னையில் கனமழையை கணிக்கத் தவறியது ஏன் என்பது குறித்தும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், ``சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிகக் கனமழை பெய்யும். கடலூர், புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிகக் கனமழை பெய்யலாம்" என்று கூறினார்.

சென்னை மழை
சென்னை மழை

மேலும், ``இருக்கும் தரவுகளின் அடிப்படையில் தான் மழை குறித்துக் கணிக்கிறோம். நேற்றுப் பொறுத்தவரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டிருந்ததை நாம் முன்பே தெரிவித்திருந்தோம். நான் முன்பு கணித்திருந்ததன் படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த மேலடுக்கு சுழற்சி கடற்பகுதியிலிருந்து அருகில் வரும்போது தான் நம்மால் சரியாகக் கணிக்க முடியும். உருவான சுழற்சி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நகர்ந்து வரும். அப்படி வேகத்தை வைத்து கணித்ததில் இன்று மழை வரும் என்று எதிர்பார்த்தோம். ஒருசில நேரத்தில், நாம் எதிர்பார்த்திராத விதமாக வேகமாக நகர்ந்து விட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேற்று மழையைக் கணிக்க முடியாமல் போனதற்கு, இதுபோன்ற ஒரு நிகழ்வே காரணம். நாம் முன்பு ஆய்வு செய்த நேரத்தில் அது கடலிலிருந்தது. செயற்கைக்கோள் படங்களில் பார்க்கும்போது நிலப்பகுதியிலிருந்தது. காற்றின் வேகத்தில் சென்றிருக்கலாம். எப்படியும் முன்பின் நகர்வதால் வித்தியாசம் ஏற்படலாம். அப்படியே வித்தியாசம் வந்தாலும், இந்த மிகக் கனமழையைப் பொறுத்தவரைத் துல்லியமாக இந்த இடத்தில் தான் வரும் என்பதைச் சொல்ல முடியாது. காற்றின் திசை சற்று மாறினாலும் அது வேறொரு மாவட்டத்துக்குச் சென்றுவிடும். நாம் முன்பு கூறிய சில வானிலை ஆய்வறிக்கையைப் பார்த்திருப்பீர்கள். நாம் ஒரு மாவட்டத்தில் மழை பெய்யும் என்று கூறியிருப்போம். ஆனால் அதற்கு அருகில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும். இதை நாம் துல்லியமாகக் கூற முடியாது.

சென்னை மழை
சென்னை மழை

இதனால், நாங்கள் ஒரு மாவட்டத்திலிருந்தால் கூட, அதை அதிகப்படியாக அருகில் உள்ள சில மாவட்டங்களோடு சேர்த்து அறிக்கை கொடுப்போம். கனமழை பெய்யும் என அறிக்கை கொடுத்தது போல ஒரு சில மாவட்டங்களில் மழையே பெய்திருக்காது. ஆனால், அறிவிப்பு இல்லாத சில மாவட்டங்களில் மழை பெய்திருக்கும். சென்னையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் அதி கனமழை பதிவாகியிருக்கிறது. மற்ற சில பகுதிகளில் அந்த அளவுக்கு மழை இல்லை. இந்த அளவுக்குத் தான் நம்மால் துல்லியமாகக் கணிக்க முடியும் என்று இருக்கிறது. நேற்று கனமழையைக் கணிக்க முடியவில்லை. இன்று கனமழை வரும் என்று கணித்திருக்கிறோம்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``இருந்தாலும், இரண்டு நாள்களுக்கு முன்பே சென்னையில் மழை பெய்யும் என்ற அறிக்கையைக் கொடுத்திருந்தோம். அந்தமான் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் தான் நாம் ரீடிங் எடுக்கிறோம். இதற்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில் ரீடிங் எடுக்க எந்த உபகரணமும் கிடையாது. இந்தப் பகுதிகளில் செயற்கைக்கோள் படங்களை வைத்துத் தான் நாம் தெரிந்துகொள்கிறோம். செயற்கைக்கோள் படங்களை வைத்துக்கூட ஒருசில நேரங்களில் காற்றின் வேகத்தையும் சுழற்சியையும் கணக்கிடுவது சற்று கடினம்தான். ரேடாரால் முன்கூட்டியே கணிக்க முடியாது. அப்போது இருக்கும் காற்றின் வேகம், புயல் நிலை, மழை போன்ற சில விவரங்கள் குறித்துத் தான் தெரிந்துகொள்ள முடியும்" என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

கனமழையைக் கணிக்கத் தவறியது தொடர்பாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்,``இப்படி ஒரு மழை வரும் என்று கணிக்கத் தவறியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். கடந்த 15 வருடங்களில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. இன்று (நேற்று) மழை பெய்யும் என்று கணித்திருந்தேன், ஆனால் இப்படி ஒரு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கவே இல்லை. 50-க்கும் மேற்பட்ட தரவுகளில் எதிலும், இப்படி மழை பெய்யும் என்பதற்கான தரவுகள் இல்லை. 5 மி.மீ மழை பெய்யும் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால், 50 மி.மீ மழை பெய்திருக்கிறது. ஆனால், இப்படி 200 மி.மீ மழை பெய்தது கிடையாது. சென்னையில் இப்படி நடந்தது மிகவும் அரிதான ஒன்று" என்று தெரிவித்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து சென்னை ரெயின் பக்கமும் இதே போன்ற ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.