Published:Updated:

100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சீக்கம்பட்டு கிராமம்; சாதித்தது எப்படி?

தடுப்பூசி செலுத்துதல்
தடுப்பூசி செலுத்துதல்

சீக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு, அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.

நம் அன்றாட வாழ்க்கை முறையை அடியோடு திருப்பிப்போட்டது கொரோனா வைரஸ் தொற்றுக் காலம். இந்தக் கொடுந்தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலருடைய உயிரும் பறிபோனது. இந்தத் தொற்றுக்கு எதிராக மக்கள் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் தடுப்பூசி ஒன்றே மக்களுக்கு அரணாக விளங்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தற்போது ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.

சீக்கம்பட்டு கிராமம்
சீக்கம்பட்டு கிராமம்
பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி; நீலகிரி மாவட்ட ஆட்சியரைப் பாராட்டிய முதல்வர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சீக்கம்பட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும், தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக ஊராட்சி செயலாளர் நாராயணமூர்த்தியிடம் பேசினோம். ``சீக்கம்பட்டு கிராமத்தில் மொத்தம் 350 குடும்பங்கள் உள்ளன. இப்போது, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள் என்பதால் எங்கள் கிராமத்தில் உள்ள வாக்காளர் பட்டியலைக் கையில் எடுத்தோம். மொத்தம் 1026 வாக்காளர்கள் இருந்தனர். வேலைக்காக வெளியூர் சென்றுள்ளவர்கள் 234, வெளிநாடு சென்றிருப்பவர்கள் 2, சமீபத்தில் இறப்பு நேர்ந்து பெயர் நீக்கம் செய்யப்படாமல் இருப்பவர்கள் 33, கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் 15, உடல்நலம் முடியாத மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டு படுத்த படுக்கையாக இருப்பவர்கள் 7, கர்ப்பிணி பெண்கள் 15 பேர்... என இவர்களைத் தவிர்த்து, மீதமுள்ள 715 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. பட்டியலில் இல்லாமல் தற்சமயம் 18 வயது நிரம்பிய சுமார் 30 இளம் வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தியுள்ளோம்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி பொதுமக்களிடம் விழிப்புணர்வை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வந்தோம். மே 13-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடித்தோம். 12 தடவை ஊரில் முகாம் போட்டிருக்கிறோம். முதல் முகாமின் போது யாரும் வரவில்லை. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எங்களுடைய உறவினர்களே சுமார் 20 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக ஒவ்வொருவராக போடத் தொடங்கினர்.

சிறிது நாள்களுக்கு முன் கிராமத்தில் மூன்று நபர்கள் இறந்துவிட்டனர். அதில் ஒருவர், கொரோனா சிகிச்சையிலிருந்து வீடு திரும்பி, பின் ஒரு சில வாரத்தில் இறந்தவர். அதன் பின் மக்கள் அனைவரும் அக்கறையோடு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கிராமத்திலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதனால் மருத்துவர்களுக்கு கிராமத்து இளைஞர்கள் மரியாதை செலுத்தினார்கள்" என்றார்.

கிராமத்து இளைஞர்கள் கௌரவிக்கும் படம்
கிராமத்து இளைஞர்கள் கௌரவிக்கும் படம்

கிளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவப் பொறுப்பாளர் கதிரவனை தொடர்பு கொண்டு பேசினோம். ``கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன்முறையாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கிராமம் என்று கூட சொல்லலாம். கிராமச் செயலாளர், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர் போன்றோர் மிகவும் உதவியாக இருந்தனர். 18 வயதிற்கு மேற்பட்டவர்களை எளிதாகக் கண்டறிவதற்காக வாக்களர்கள் பட்டியலைக் கையில் எடுத்துச் செயல்பட தொடங்கினோம். வேலைக்காக வெளியூர் சென்றவர்கள், உடல்நிலை சரியில்லாத முதியவர்கள், கொரோனா தொற்றிலிருந்து சமீபத்தில் மீண்டவர்கள் போன்ற சிலரை தவிர்த்து, தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டோம்.

முதன்முறையாக தடுப்பூசி போடுவதற்கு நாங்கள் அந்த கிராமத்திற்குச் சென்றபோது, சில பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் ஓட்டம் பிடித்து ஓடத் தொடங்கினார்கள். என்றாலும், 40% மக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மீதம் உள்ள 60 சதவிகிதத்தினருக்கு ஊரக வேலை (ஏரி வேலை) செய்யும் பொழுது விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திட முயன்றோம். ``தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் காய்ச்சல் இருந்தால் ஒரு நாள் ஓய்வு எடுப்பதற்கும் அனுமதிக்கிறோம்" என்றும் எடுத்துக்கூறி தடுப்பூசி செலுத்தினோம். இதன் மூலம் 75% பூர்த்தி ஆகியது.

மீதம் உள்ளவர்களுக்காக அவர்களுடைய வீடுகளுக்கே சென்றோம். சிலர் திட்டினார்கள், சிலர் பயந்தார்கள். அப்படி இருந்தும் பொறுமையாக அவர்களுக்கு எடுத்துக் கூறி தடுப்பூசி செலுத்தினோம். சில வீடுகளில் பெண்கள், ``தடுப்பூசி போட்டுக் கொண்டபின் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், வீட்டில் உள்ளவர்களுக்கு எப்படி சமைப்பது, அவர்களை பார்த்துக்கொள்வது" என்று பயந்தனர். அப்போது, அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாக இருந்து, ``அப்படியெல்லாம் ஏதும் ஆகாது. அப்படி மீறி தங்களுக்கு உடல் நிலை சரியில்லை எனில் நாங்கள் சமைத்து தருகிறோம்" என்றும் கூறினர்.

தடுப்பூசி செலுத்துதல்
தடுப்பூசி செலுத்துதல்
புதுச்சேரி: `100% தடுப்பூசி; கொரோனா இல்லாத கிராமம்!’ - ஆளுநரிடம் சான்று பெற்ற புதுக்குப்பம்

இப்படியாக கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தி முடித்துவிட்டோம். கடந்த ஜூன் 3ம் தேதி வெளியூர் சென்றிருந்த 10 பேர் ஊருக்கு வந்தனர். அவர்களுக்கும் தடுப்பூசி போட்டு விட்டோம். தற்போது கிராமத்தில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட்டோம்.

கடந்த சனிக்கிழமை அன்று தான், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்ற அறிவிப்பு வந்தது. அடுத்த அரை மணி நேரத்திலேயே 2 கர்ப்பிணி பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்திவிட்டோம். அடுத்த கட்டமாக அருகில் உள்ள தாமல், பூவனூர் கிராமத்தில் இதேபோன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு