Published:Updated:

`ஸ்மார்ட் சிட்டிலாம் வேண்டாங்க; இருக்கிறதே போதும்!' - அலங்கார வேலைகளால் அல்லல்படும் 3 மாவட்ட மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோவையில் தேங்கி நிற்கும் மழை நீர்
கோவையில் தேங்கி நிற்கும் மழை நீர் ( தி.விஜய் )

இயற்கையாக ஏற்படும் சிரமத்துக்கு அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று, மக்கள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டாலும், தாங்க முடியாத அளவுக்கு பல செயற்கையான இடர்ப்பாடுகளை அதிகாரிகள் உருவாக்கி வைத்துள்ளதுதான் மக்களின் கோபத்துக்கு முக்கிய காரணம்.

``எங்களுக்கு ஸ்மார்ட் சிட்டியெல்லாம் வேணாம்... சுமாரான சிட்டியே போதும்" என மதுரை, கோவை, தஞ்சாவூர் மாவட்ட மக்கள் புலம்பி வருகின்றனர். ரூ 1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளில் பல, தொலைநோக்குடன் செயல்படுத்தப்படாததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதே பொதுமக்களின் புலம்பலுக்கு காரணமாகியுள்ளது. அத்துடன் மழை நீரை சேமிக்கவோ அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்பது வரலாற்று சிறப்பு மிக்க மூன்று மாவட்ட மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மதுரையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை மூடும் ஊழியர்கள்
மதுரையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை மூடும் ஊழியர்கள்

சாதாரண தூறல் போட்டாலே தண்ணீர் வழிந்தோட வழியில்லாமல் வெள்ளக்காடாக மாறிவிடும் மதுரை மாநகரின் சாலைகள், தொடர் மழையால் கடல் போல ஆகிவிடுகின்றன. இதில் எங்கே மேடு, எங்கே பள்ளம் என்று தெரியாத அளவுக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அல்லல்படும் வகையில் கடந்த சில நாள்களாகப் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இயற்கையாக ஏற்படும் சிரமத்துக்கு அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்று, மக்கள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டாலும், தாங்க முடியாத அளவுக்கு பல செயற்கையான இடர்ப்பாடுகளை அதிகாரிகள் உருவாக்கி வைத்துள்ளதுதான் மக்களின் கோபத்துக்கு முக்கிய காரணம்.

தற்போது பெய்து வரும் சாதாரண மழைக்கே மதுரை மாநகரம் வெள்ளத்தில் சூழந்தது போலுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நான்கு மாசி வீதிகளிலும் தார்ச்சாலையை எடுத்துவிட்டு பலகோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், சிறு மழை பெய்தாலே நான்கு மாசி வீதிகளும் மாசிக் குளமாக மாறிவிடுகிறது. தண்ணீர் வழிய எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

மதுரை
மதுரை

ஆரம்பத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த பெரியார் பேருந்து நிலையம், சிறு சிறு வசதிக் குறைபாடு இருந்தாலும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லவும், நூற்றுக்கணக்கான பேருந்துகள், வாகனங்கள் செல்லும் வகையிலும் பிரச்னை இல்லாமல் மதுரையின் அடையாளமாக இருந்தது. தற்போதோ பேருந்து நிலையத்தை சிறியதாக்கிவிட்டு 6 மாடி கொண்ட ஷாப்பிங் மால் கட்டி வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு ஷாப்பிங் மால் கட்டினால் வேலைக்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும் நகரப் பேருந்தில் பயணம் செய்து மதுரைக்கு வரும் சுற்றியுள்ள கிராமத்து மக்கள், ஷாப்பிங் செய்ய எப்படி வருவார்கள்? இங்கு கட்டுவதற்குப் பதிலாக அனைத்து மாவட்ட மக்களும் வருகை தரும் மாட்டுத் தாவணியில் கட்டினாலாவது உபயோகமாக இருக்கும், அதைவிட்டு பெரியாரில் எதற்காக இந்த ஷாப்பிங் மால் என்ற பொதுமக்களின் கேள்விக்கு பதில் இல்லை.

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள்
மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள்

பெரியாரிலிருந்து திருப்பரங்குன்றம் சாலை, மாரட் வீதி சாலை, ரயில்வே நிலையம் வழியாக மாட்டுத்தாவணி செல்லும் சாலை, எல்லீஸ் நகர், மகபூப்பாளையம், அரசரடி, ஆரப்பாளையம், காளவாசல், செல்லும் முக்கிய சாலைகள் அனைத்தும் ஐக்கியமாகும் பெரியார் பேருந்து நிலையக் கட்டுமானம் ஷாப்பிங் மால் கட்டுமான வேலைகள் முடியாததால் தினமும் ஸ்தம்பித்துவிடுகிறது. அப்பகுதியில் வாகனங்கள் கடந்த செல்ல பல மணி நேரமாகிறது. அதிலும் மழைக் காலத்தில் சொல்லவே வேண்டாம்.

நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதாகக் கூறி நகருக்குள் செல்லும் வைகை ஆற்றின் வடகரை தென்கரையோரம் சாலை அமைத்ததால் வைகை ஆறு செல்லும் வழி குறுகியது. இது எதிர்காலத்தில் மதுரை நகருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்கிறார்கள் மதுரை மக்கள். இன்னும் அந்த சாலைப்பணி முடிவடையாமல் மக்களைத் திக்குமுக்காட வைக்கிறது.

மதுரை
மதுரை

அதுபோல் மீனாட்சியம்மன் கோயில் அருகே பல்லடுக்கு வாகன காப்பகம் கட்டுமானப் பணி இன்னும் முடிவடையவில்லை. அது மட்டுமல்லாமல், ஏற்கெனவே நெருக்கடி மிகுந்த அப்பகுதியில் பல்லடுக்கு வாகன காப்பகத்தில் வாகனங்கள் வந்து செல்வது இன்னும் இடியாப்ப சிக்கலை உண்டாக்கும் என்ற அப்பகுதி கடைக்காரர்களின் புகாரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. 995.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 திட்டங்கள் மூலம் மதுரை நகரை அழகுப்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில் எந்தத் திட்டமும் முழுமை பெறாமல் ஆமை வேகத்தில் உருப்படி இல்லாமல் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆட்சியில் இத்திட்டத்தில் பல முறைகேடுகள் நடப்பதாக மாவட்ட வளர்ச்சி கண்காணிப்பாளர் என்ற முறையில் எம்.பி சு.வெங்கடேசன் கண்காணிப்பு ஆய்வுக்கூட்டத்தை நடத்தி அமைச்சர்கள், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் முன்னிலையில் ஆதாரத்துடன் புகார் எழுப்பினார். தெருக்களில் விளக்குகள் அமைப்பதில்கூட மிகப்பெரிய மோசடி நடந்ததாகவும், புதிய பெரியார் பேருந்து நிலையம் கட்டுமானத்தில் தோண்டிய மணலை எடுத்ததில்கூட ஊழல் நடந்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

வழக்கறிஞர் ஸ்டாலின்
வழக்கறிஞர் ஸ்டாலின்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆரம்பத்திலிருந்து இத்திட்டத்தில் 3 முன்னாள் அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி வருகிறார். நம்மிடம் பேசிய வழக்கறிஞர் பி.ஸ்டாலின், ``மதுரை, மன்னர்கள் காலத்திலயே மாஸ்டர் பிளானுடன் அருமையாக உருவாக்கப்பட்ட நகரம். அப்படிப்பட்ட நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலயே திட்டங்களைச் செயல்படுத்தியதால் நெருக்கடி மிக்க நகரமாகவும், மழைக்காலங்களில் தண்ணீர் ஓட வழியில்லாமல் ஆகிவிட்டது.

கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தேங்கும் தண்ணீர், நகரிலுள்ள குளங்களுக்கும் வைகை ஆற்றிலும் வந்து சேரும் வகையில் ஆரம்ப கால கட்டமைப்பு இருந்தது. வைகை ஆற்றிலிருந்து தெப்பக்குளத்துக்குத் தண்ணீர் செல்லும் வகையில் அந்தக் காலத்திலயே வாய்க்கால் அமைத்திருக்கிறார்கள். ஆக்கிரமிப்பில் அடைக்கப்பட்டிருந்த அந்த வாய்க்கால் பாதை, சில வருடங்களுக்கு முன் தூர் வாரப்பட்டு இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

வைகை ஆறு
வைகை ஆறு
மதுரை ஸ்மார்ட் சிட்டி: தெரு விளக்கு ஒன்றின் விலை
ரூ. 21,666? -அதிர்ச்சி தரும் ஆர்.டி.ஐ தகவல்

இதுபோல் மதுரையில் மழை நீர் தேங்காமல் நேராக போய்ச் சேருகின்ற வகையில் அமைந்திருந்த தல்லாகுளம், பீபி குளம், கிருதுமால் நதி கால்வாய் போன்றவைகள் குடியிருப்புகளாகவும், அரசு கட்டடங்களாகவும் மாறியதால் மழைக்கு தாங்காத நகரமாக ஆகிவிட்டது மதுரை. இன்னொரு பக்கம் தென்கரை - வடகரையை இணைக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டமில்லாத திட்டத்தில் ஓபுளா படித்துறை பாலம், குருவிக்காரர் சாலை பாலம் ஆகியவை புதிதாகக் கட்டபட்டு வருவதால், அதற்குச் சரியான தற்காலிக மாற்றுப்பாதை இல்லாமல் ஏவி பாலத்தையும், தெப்பக்குளம் பாலத்தை மட்டும் மக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை. இதனால் பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் பயணிப்பதால் நேரமும் எரிபொருளும் அதிகம் செலவாகிறது.

ஓபுளா படித்துறை பால வேலையால், வைகை ஆற்றின் நடுவே மணலால் தடுத்து வைத்திருக்கிறார்கள். இதனால் தற்போது வைகையில் தண்ணீர் திறந்துவிடும்போது தண்ணீர் நேராக செல்ல முடியாமல் கரைகளை உடைக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் யாருக்காகத் திட்டமிடுகிறார்கள் என்றே தெரியவில்லை" என்றார்.

மோசமான சாலை
மோசமான சாலை
கோவை: சில மாதங்களிலேயே இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்!-என்ன நடக்கிறது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்?

ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கும்போதே, `இது கமிஷனுக்காக உருவாக்கப்படும் திட்டம், இதில் தொலைநோக்குப் பார்வை இல்லை, ஸ்மார்ட் சிட்டி திட்டம் அதிகம் நடைபெறும் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ என்ற முறையில் என்னிடம்கூட கருத்து கேட்கவில்லை" என்று தற்போதைய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜனும் அப்போதே புகார் தெரிவித்தார். மதுரை எம்பி சு.வெங்கடேசனும் எதிர்ப்பு தெரிவித்தார்.ஆனால், அதைப்பற்றிக் கண்டுகொள்ளாமல் அரைகுறையாகத் திட்டமிடப்பட்டு அப்போது ஆரம்பித்த திட்டம் இப்போதும் அரைகுறையாக நடந்துகொண்டு மக்களை அவதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

கோவை மாநகராட்சியில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க ஆட்சியில் திட்டம் தொடங்கியது முதலே, அ.தி.மு.க பிரமுகரின் மகளை சி.இ.ஓ-வாக நியமித்தது முதல் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. கோவை மாநகராட்சி எல்லையில் உள்ள 8 குளங்களை அழகுப்படுத்துவதுதான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பிரதானம். குளங்களில் கழிவு நீர் கலப்பது பெரிய பிரச்னையாக உள்ள நிலையில், அதைச் சரி செய்யாமல் குளத்தை அலங்கரிக்க கோடிகளைக் கொட்டுவதா என்று எதிர்ப்புகள் எழுந்தன.

கோவை
கோவை
சிதைக்கப்படும் கோவை ரேஸ் கோர்ஸ்! - அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கும் கோவை ஸ்மார்ட் சிட்டி

குளக்கரையில் வாக்கிங், சைக்கிள் பாதை, பூங்கா அமைக்க குளத்தின் கொள்ளளவை குறைத்ததாக புகார் எழுந்தது. மழைக்காலத்தில் அந்தப் புகார் மெய்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, டெல்டா மாவட்டங்கள் அளவுக்கு இல்லாவிடினும் கோவையில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. வாலாங்குளம் நிறைந்து அதன் உபரிநீர் செல்லும் பகுதியும் நிறைந்து சாலையில் மழைநீர் வெள்ளம் போல ஓடி வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக நீர் வெளியேறும் பகுதிகள் அடைக்கப்பட்டன. பணிகள் முடிந்தும் அவை திறக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பு, மழைக்காலம் என்று தெரிந்தும் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததும் பிரச்னைக்கு முக்கிய காரணம். குமாரசாமி குளக்கரையில் கிட்டத்தட்ட 2,000 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தனர்.

கோவை
கோவை
ஸ்மார்ட் சிட்டி ஊழல்... கேரளாவுக்கு மணல் கடத்தல்... சி.இ.ஓ ராஜினாமா!

ஸ்மார்ட் சிட்டி பணிக்காக கடந்த ஆண்டு அந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். கொரோனா முதல் அலை தீவிரமடைந்திருந்த காலகட்டம் அது. அப்போது, இதுபோன்ற பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கச் சொல்லி உத்தரவிட்டும் வீடுகள் இடிக்கப்பட்டு, அந்த மக்கள் நகரத்தை விட்டு வெளியே குடியமர்த்தப்பட்டனர். உக்கடம் பெரியகுளம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 12 அடி தடுப்பு சுவர் கட்டப்பட்டது. ஆனால் மழையால், அது சில மாதங்களிலேயே இடிந்து விழுந்தது.

ஆர்.எஸ்.புரம் பகுதி கோவையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு சாலை வசதியில் குறைவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாதிரி சாலை அமைக்கப்பட்டது. இதற்காக ஏற்கெனவே நன்கு இருந்த சாலையை சுரண்டினர். சில மாதங்களுக்கு அந்தச் சாலை குண்டும், குழியுமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். சில இடங்களில் போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டது.

கோவை நகரம்
கோவை நகரம்
`மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.15 கோடிக்கு மணல் திருட்டு?!’ - விளக்கம் கேட்கும் நீதிமன்றம்

அதேபோல ஏற்கெனவே நல்ல நிலையில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையை மேம்படுத்த 40 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். தற்போது ரேஸ்கோர்ஸ் சாலை சுரண்டப்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மக்களின் அடிப்படைக்குத் தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பது ஒருபக்கம் என்றால், மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் திட்டங்கள் அதிகம்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ரூ.1,000 கோடி மதிப்பில் தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 2019-ல் தொடங்கப்பட்டன. சாலை வசதி, பாதாள சாக்கடைகள் புதுப்பித்தல், வணிக வளாகங்கள், பேருந்து நிலையத்துக்கு புதிய கட்டடம், குளங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அழகுபடுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் சாலை மேம்பாட்டுக்காகக் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டு சாலைகள் புதுப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூரில் தேங்கியுள்ள மழை நீர்
தஞ்சாவூரில் தேங்கியுள்ள மழை நீர்
சென்னை வெள்ளம்: `ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு; நடவடிக்கை நிச்சயம்’ - முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகப் பெய்த தொடர் மழையில் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. அத்துடன் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பொது மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் 1,000 கோடி செலவு செய்யப்பட்டு நகரை அழகுபடுத்துவதாகக் கூறுகின்றனர். ஆனால், நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனவும் ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலரான பனசை.அரங்கன் என்பவரிடம் பேசினோம். ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால், அதன் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை. பாதாள சாக்கடை பணிகளுக்காகச் சாலைகள் தோண்டப்பட்டதில் சாலையின் நடுவே பெரிய பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, நகரின் மையப்பகுதியான தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி உள்ளிட்ட சாலைகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சாலைகளில் செல்ல வேண்டியிருக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி பணிகளால் சேதமடைந்த சாலைகள்
ஸ்மார்ட் சிட்டி பணிகளால் சேதமடைந்த சாலைகள்

புதிய பேருந்து நிலையம், கீழவாசல், நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளன. சாலையோரத்தில் வடிகால்கள் இல்லை என்பதே இதற்கு முக்கிய காரணம். அத்துடன் மழை நீரை சேமிக்கவும் எந்தத் திட்டமும் இல்லை. கழிவு நீர் ஓடுவதற்கான வசதிகளும் செய்யப்படவில்லை. பல நேரங்களில் பாதாள சாக்கடை மேன் ஹோல் வழியாகக் கழிவு நீர் வழிந்து சாலையில் ஓடுகிறது அவற்றை முழுமையாகத் தீர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

நகருக்குள் உள்ள சாமந்தான் குளம், அய்யன் குளம் ஆகியவை சீரமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் ஆறு மற்றும் மழை நீரால் நிரம்புவதற்கான நீர் வழித்தடம் அமைக்கப்படவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி செய்த சோழர்கள் மண்ணில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அதை மேம்படுத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லாதது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நடைபெற்று வரும் பணிகளும் தரமில்லை" எனத் தெரிவித்தார்.

பனசை.அரங்கன்
பனசை.அரங்கன்

வரலாற்று ஆய்வாளர்கள் சிலரிடம் பேசினோம். ``சோழர்கள் நீர் மேலாண்மைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி புரிந்து வந்ததன் சாட்சியாக இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது கல்லணை. ஆற்று நீர், மழை நீர் என எதுவும் வீணாகாமல் சேமித்து பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை நினைத்து சோழ மன்னர்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மாமன்னன் ராஜராஜ சோழன் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு மழை நீர் சேமிப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்து அந்தக் காலத்திலேயே பெரிய கோயிலில் மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்தி அவை குழாய் வழியாக அருகே உள்ள சிவகங்கை பூங்காவில் சென்று சேரும் வகையில் அமைத்திருந்தது பெரும் வியப்பைத் தருகிறது. சிவகங்கை பூங்கா குளத்திலிருந்து நிலத்தடியில் குழாய்கள் அமைத்து நகரில் உள்ள 50 குளங்களிலும் தண்ணீர் நிறையும் வகையில் கட்டமைப்பை உருவாக்கியிருந்தார்.

சாலையில் மழை நீர்
சாலையில் மழை நீர்

அத்துடன் குளங்கள் நிறைந்த பிறகு, மழை நீர் ஆற்றுக்குள் செல்வதற்கான அமைப்பையும் ஏற்படுத்தியிருந்தார். ராஜேந்திர சோழன் தன்னுடைய படைத் தலைவனாக இருந்த ஜெயமூரி நாடால்வான் என்பவரை ஏரிகள் பராமரிப்புக்கான அதிகாரியாகவும் நியமனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீர் மேலாண்மையைப் பார்த்துப் பார்த்து செய்துள்ளனர் என்பதை இவை காட்டுகிறது. மழை நீரில் நிலத்தடி நீர் மட்டம் உயரச் செய்துள்ளனர். குளங்களில் நீர் நிரப்பியுள்ளனர். அதன் பிறகே உபரி நீர் கடலில் கலந்துள்ளன.

கோடைக்காலத்தில் ஆற்றில் ஊற்றுகள் அமைத்து அதிலிருந்து குழாய்கள் வழியாகக் குளங்களை நிரப்பியுள்ளனர். இவற்றுக்கான வரலாற்றுச் சான்றுகள் இன்றைக்கும் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடங்குவதற்கு முன் கமிட்டி அமைத்து ஆலோசித்தனர். அந்தக் கமிட்டியில் வரலாற்று ஆய்வாளர்களை இணைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்கவில்லை. நகரை அழகுபடுத்துவதில்தான் சிந்தித்தார்களே தவிர, மழை நீர் வடியவோ அதைச் சேமிக்கவோ எந்தவிதமான தொலைநோக்குத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அதன் காரணமாகவே மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நிலை தொடர்கிறது'' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு