Published:Updated:

`22 கேரட் தங்க இழை; முப்பரிமாண தோற்றம்!’- செட்டிநாட்டை அலங்கரிக்கும் தஞ்சாவூர் ஓவியங்கள்

நாகராஜ் குடும்பத்தோடு ஓவியத்தை ரசித்தபோது.
நாகராஜ் குடும்பத்தோடு ஓவியத்தை ரசித்தபோது.

``சாமியை நேரில் பார்க்கும் உயிரோட்டத்தை எங்கள் ஓவியத்தில் கொடுக்கிறோம்" தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் நெகிழ்ச்சி.

சோழர் ஆட்சிக்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் ஓவியங்கள், தற்போது பலராலும் விரும்பி வாங்கப்படுகிறது. தஞ்சாவூர் ஓவியங்கள் மற்ற ஓவியங்களைவிடத் தனித்துவமாக விளங்கியதால், பெரும் மாளிகைகளை அலங்கரித்தன.

வண்ண கற்கள்  பதிக்கும் பணி
வண்ண கற்கள் பதிக்கும் பணி

தற்போது இந்தியா முழுவதும் பல இடங்களில் இந்த ஓவியங்கள் கிடைக்கின்றன. இந்தத் தொழிலில் பாரம்பர்யமாக ஈடுபட்டுவரும் காரைக்குடி கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன், ``தங்கத்தால் கண்களைக் கவரும் இந்த தஞ்சாவூர் ஓவியங்களை 4 தலைமுறையாகச் செய்துவருகிறோம். எங்கள் மூதாதையர் பல்வேறு அரண்மனைகளுக்கும் தஞ்சாவூர் ஓவியங்களைச் செய்து கொடுத்துள்ளனர்.

அவர்கள் செய்த தத்துவத்தின் அடிப்படையில் சில மாற்றங்களை மட்டும் செய்து தஞ்சாவூர் ஓவியங்கள் ஆர்டரின் பெயரில் வழங்குகிறோம். என்னுடன் என் மனைவி ஜெயந்தியும் இணைந்து இந்தத் தொழிலைச் செய்து வருகிறார். எங்களுக்குக் கீழ் 25-க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்கின்றனர்.

ஓவியத்துக்கு வர்ணம் தீட்டும்போது...
ஓவியத்துக்கு வர்ணம் தீட்டும்போது...

22 கேரட் தங்க இழைகளையும், கண்களைக் கவரும் கற்களையும் பயன்படுத்தி இந்த ஓவியத்தைச் செய்து முடிக்கிறோம். அதிகப்படியான சாமி படங்கள்தான் செய்கிறோம். முப்பரிமாண முறையைப் பயன்படுத்தி நாங்கள் தனித்துவமாக ஓவியங்கள் செய்வதால் எங்கள் ஓவியத்துக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. முப்பரிமாண முறையில் சாமி படங்களைச் செய்வதால் கோயிலுக்கு நேரில் சென்று இறைவனை வணங்கிய திருப்தி கிடைக்கும்.

ஆகம விதிகளையும் கடைப்பிடித்து ஓவியங்கள் செய்கிறோம். ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான ஓவியங்களைச் செய்து கொடுத்துள்ளோம். தங்கம் பயன்படுத்துவதால் இந்த வகை ஓவியங்கள் சற்று விலை அதிகமாக இருக்கிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த ஓவியங்கள் வந்துவிட்டன. எங்கள் ஓவியங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன.

ஓவியம்
ஓவியம்

டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் அரசு உதவியோடு கண்காட்சியில் கலந்துகொள்வதால், விற்பனை வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கிறது. மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 90% நகைக் கடையில் எங்களுடைய ஓவியங்கள்தான் இடம்பெற்றுள்ளன. அந்த அளவுக்கு அதிகமான நபர்கள் எங்கள் ஓவியங்களை விரும்புகின்றனர். ஓவியத்தைப் பொறுத்து அதற்கான நேரம் செலவாகும். 1 வாரம் முதல் 2 மாதம் வரை கூட வேலைப்பாடுகள் இழுக்கும். ஆனால் நேர்த்தியாக ஓவியம் அமைந்துவிடும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு