Published:Updated:

`4 வண்ண சீட்டுகள்; 315 மையங்கள்!'- எப்படி நடக்கிறது ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை?

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று ஒரே கட்டமாக எண்ணப்பட்டு அறிவிக்கப்படவுள்ளன.

வாக்கு எண்ணிகை
வாக்கு எண்ணிகை

தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக நடைபெறாமல் இருந்து வந்த உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு வழக்குகள், பிரச்னைகளைச் சந்தித்து ஒருவழியாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டும் தற்போது நடந்து முடிந்துள்ளது. சென்னை மற்றும் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சிகளில் கடந்த மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப் பதிவு
வாக்குப் பதிவு

முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 76.19 சதவிகித வாக்குகளும் இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தலில் 77.73 சதவிகித வாக்குகளும் பதிவாகின. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 91,975 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சி வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு #ElectionUpdate #NowAtVikatan

தமிழகம் முழுவதும் மொத்தமாக 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட பெட்டிகள் அனைத்தும் இன்று வாக்கு எண்ணிக்கை மையத்துக்குக் கொண்டுவரப்பட்டு, ஒவ்வொரு ஊராட்சி முகவர்கள் முன்னிலையிலும் பெட்டிகள் திறக்கப்படும். அனைத்துப் பெட்டிகளும் திறக்கப்பட்டு அதில் உள்ள வாக்குச்சீட்டுகள் மொத்தமாக ஒரே இடத்தில் கொட்டப்படும். பின்னர் பதிவான 4 வண்ண சீட்டுகள் அனைத்தும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுக் கட்டப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் 3 வாக்கு எண்ணுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

பிரிக்கப்பட்ட சீட்டுகள் தனித்தனி அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு ஒரே சமயத்தில் வேட்பாளர்கள் முன்னிலையில் பல கட்டங்களாக எண்ணப்பட்டு, முடிவுகள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். ஊராட்சி மன்ற வேட்பாளருடன் 3 முகவர்களும், ஒன்றிய வார்டு வேட்பாளர்களுடன் 3 முகவர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் நடக்கும் நிகழ்வுகள் சிசிடிவி கேமிரா மூலம் பதிவு செய்யப்படும். ஒரே சமயத்தில் 4 வண்ண சீட்டுகள் எண்ணப்படுவதால் ஒரு ஊராட்சி மன்றத்துக்கான முடிவுகள் வெளியாகவே குறைந்தது 2 மணி நேரமாகும் எனக் கூறப்படுகிறது. 3 வருடங்களுக்குப் பிறகு தேர்தல் நடந்துள்ளதால் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.