Published:Updated:

`கொந்தகை விவசாய நிலத்தில் முதுமக்கள் தாழி, எலும்புக் கூடு!’ - காலத்தைக் கணக்கிட பகுப்பாய்வு

கீழடி
கீழடி

`தென்னைக் கன்றுகள் நடுவதற்காகக் குழிகள் தோண்டும் பணிகள் நடைபெற்றுள்ளது. அப்போது சுமார் 4 அடி ஆழத்தில் முதுமக்கள் தாழியில் எலும்புக்கூடு இருந்துள்ளது.'

சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணிகள், மத்திய தொல்லியல்துறை சார்பாக நடத்தப்பட்டன.

தாழிகளுக்குள்
தாழிகளுக்குள்

அதற்குப் பின் 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடத்தி முடிக்கப்பட்டது.

கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணி முடிந்ததைத் தொடர்ந்து அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருள்கள் மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதும் கிடைக்கப்பட்ட பொருள்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்படும்.

கொந்தகை
கொந்தகை

இந்நிலையில் (19.2.2020) கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. கீழடி மட்டுமன்றி கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணி நடைபெற்றுவருகின்றன. கொந்தகையில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பழைமையான ஈமக்காட்டில் அகழாய்வுப் பணி நடைபெற்றுவருகிறது. இந்த ஈமக்காடு தனியார் பட்டா இடத்தில் உள்ளதால் உரிமையாளரின் அனுமதியுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஈமக்காடு, கொந்தகை கால்நடை மருத்துவமனைக்கு முன்பாக சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் முழுமையாக அகழாய்வு செய்யும்போது தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தும் விதமாகப் பல்வேறு பொருள்கள் கிடைக்கலாம் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தாழிகள்
தாழிகள்

இந்நிலையில், கொந்தகை ஈமக்காட்டுப் பகுதியில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அகழாய்வு நடைபெறும் பகுதிக்கு அருகில் உள்ள விவசாய விளை நிலத்தில் மனித எலும்புக்கூடு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதி விவசாயிகளுக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தில் கரும்பு சாகுபடி முடிந்து தென்னைக் கன்றுகள் நடுவதற்காகக் குழிகள் தோண்டும் பணிகள் நடைபெற்றுள்ளன. அப்போது சுமார் 4 அடி ஆழத்தில் முதுமக்கள் தாழியில் எலும்புக்கூடு இருந்துள்ளது.

இதைக் கண்ட விவசாயிகள் உடனடியாகத் தொல்லியல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விளைநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள மனித எலும்புக் கூட்டை தொல்லியல் துறையினர் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபணுவியல் துறை பேராசிரியர்கள் பத்திரமாக எடுத்து பகுப்பாய்வு செய்ய கொண்டு சென்றனர்.

எலும்புகள்
எலும்புகள்

முதுமக்கள் தாழியில் மனிதனின் மண்டை ஓடு, கை கால் பகுதி எலும்புகள் மற்றும் இரண்டு மண் பாண்ட பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ``இந்த எலும்புக் கூடுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நபர்களின் எலும்பாகத்தான் இருக்க வேண்டும். எனினும், பகுப்பாய்வு செய்த பின்னரே எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மனிதரின் எலும்புக் கூடு என்பதைக் கூற முடியும்" எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு