Published:Updated:

வேலூர்: பசியால் வாடிய குழந்தைகள்! -ஆட்சியரைச் சந்திக்க இரவு முழுவதும் சாலையோரம் தங்கிய தம்பதி

குழந்தைகளுடன் சாலையோரம் தங்கிய தம்பதி
குழந்தைகளுடன் சாலையோரம் தங்கிய தம்பதி

வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் நான்கு குழந்தைகளுடன் இரவு முழுவதும் கொசுக்கடியில் தவித்த தம்பதியரின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர், கஸ்பாவிலுள்ள சுடுகாடுப் பகுதியில் வசித்துவந்த முருகன், பச்சையம்மாள் தம்பதியர் இடுப்பில் இரண்டும், கையில் இரண்டுமாக நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மாலை மனு கொடுக்க வந்தனர். மாலை நேரம் என்பதால் ஆட்சியரைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். எங்கு செல்வது எனத் தெரியாமல் ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே சாலையோரம் நான்கு குழந்தைகளுடன் இருவரும் தங்கினர்.

காலணியை தலைக்கு வைத்து தூங்கிய குழந்தை
காலணியை தலைக்கு வைத்து தூங்கிய குழந்தை

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற எந்தவிதமான அடையாளச் சான்றிதழ்களும் இல்லாததால் சுடுகாடுப் பகுதியிலேயே இத்தனை ஆண்டுக்காலமாக தார்ப்பாய் போர்த்திய சிறிய கொட்டகையில் வசித்துவந்ததாகவும், நான்கு குழந்தைகள் ஆன பிறகு அங்கு வசிக்க முடியவில்லை என்பதால், மாற்று இடத்தில் வீடு கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததாகவும் கூறி முருகன், பச்சையம்மாள் தம்பதியர் கண்ணீர் வடித்தனர்.

செருப்பை தலையணைபோல் வைத்து குழந்தைகள் தூங்கியது காண்போரின் இதயத்தை நொறுங்கச் செய்தது. கந்தல் ஆடைகளுடன் காட்சியளித்த குழந்தைகளின் முகம் பசியாலும் வாடியிருந்தது. முருகன், பச்சையம்மாள் தம்பதியரை நள்ளிரவிலேயே சந்தித்துப் பேசினோம். ``எங்களுக்கு ரெண்டு ஆணு, ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கு. சுடுகாட்டுப் பக்கத்துல இருந்தோம். பாம்பு, பூச்சி வருது. அதான் கலெக்டர்கிட்ட வீடு கேட்டு நடந்தே வந்தோம்.

குழந்தைகளுடன் சாலையோரம் தங்கிய பரிதாபம்
குழந்தைகளுடன் சாலையோரம் தங்கிய பரிதாபம்

இருட்டாகிப் போச்சு. குழந்தைகளைத் தூக்கிக்கிட்டு அவ்வளவு தூரம் மறுபடியும் போக முடியாதுங்கறதால இங்கேயே படுத்துக்கிட்டோம். விடிஞ்சதும் கலெக்டர் ஐயாவைப் பார்த்து மனு கொடுக்கலாம்னு இருக்கிறோம். எங்களுக்கு எந்த வேலையும் இல்லை. வருமானமும் இல்லை’’ என்றனர். நள்ளிரவு முழுவதும் குழந்தைகளுடன் கொசுக்கடியிலேயே வெட்ட வெளியில் படுத்திருந்த அவர்களை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அங்கிருந்து அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற விளிம்புநிலை மக்களுக்கும் சேர்த்தே விடியல் வேண்டும் என்று தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு