Published:Updated:

விழுப்புரம்: `அவள் இன்றி நான் இல்லை!' - இறப்பிலும் இணை பிரியாத தம்பதி

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி.
இறப்பிலும் இணை பிரியாத தம்பதி.

மனைவி இறந்த செய்தியறிந்து துக்கத்தில் இருந்த கணவரும் உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூரைச் சேர்ந்தவர் பூங்காவனம் (95). இவரின் மனைவி எல்லம்மாள் (83). இந்தத் தம்பதியருக்கு செல்வராஜ் என்ற மகன் இருக்கிறார். இவர், தி.மு.க-வில் முக்கியப் பிரமுகராக இருப்பவராம். மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பூஜை செய்துவந்த பூசாரி பூங்காவனம், 'ஏழு கொத்து' எனச் சொல்லப்படும் அந்தக் கோயிலின் பூசாரி முறையில், இரண்டாவது முறையைச் சேர்ந்த மூத்த தலைமை பூசாரியாக இருந்துவந்திருக்கிறார். சுமார் 60 வருடங்களுக்கு மேற்பட்ட வாழ்க்கைப் பயணத்தில், மனைவி எல்லம்மாள் மீது அதீத அன்பு செலுத்தி வாழ்ந்துவந்திருக்கிறார் பூங்காவனம். மகன் சரியாக உபசரித்துக்கொள்ள, ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள் இவ்விருவரும். இப்படியாகச் காலங்கள் கடந்து செல்ல, அன்பு மட்டும் இளமையாகவே இருக்க, வயது மட்டுமே இருவருக்கும் கூடிச் சென்றிருக்கிறது.

எல்லம்மாள், பூங்காவனம்
எல்லம்மாள், பூங்காவனம்

நேற்று முன்தினம் (21.08.2021) இரவு 9:00 மணி அளவில் எல்லம்மாள் இயற்கை மரணம் எய்தியிருக்கிறார். தள்ளாடும் வயதிலுள்ள பூங்காவனத்திடம் மனைவி இறந்த செய்தி அதிர்வலையாகச் சென்று சேர்ந்திருக்கிறது. சோகத்தில் ஆழ்ந்துபோன பூங்காவனம், தன் குடும்ப முறைப்படி தன் மனைவிக்கு உரிய சடங்குகளைச் செய்துவிட்டு துக்கம் தாளாமல் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கிறார். மனைவியின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் சோகத்தில் மூழ்கிய பூங்காவனம், மௌனமாகவே அமர்ந்திருந்திருக்கிறார்.

சுமார் 12 மணி அளவில் 'அவள் இன்றி நான் இல்லை' என்பதைப்போல தன் உயிரையும் தன் மனைவி உயிர் சென்ற இடத்தில் இணைத்துக்கொள்ளும் விதமாகக் கீழே சரிந்திருக்கிறார். எல்லாம்மாள் இறந்த துயரத்தில் இல்லம் நிறைந்திருக்க, பூங்காவனமும் மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா: `அவள் இல்லாமல் எப்படி இருப்பேன்?' - இறப்பிலும் பிரியாத கணவன், மனைவி

நெடுநாள் வாழ்க்கையை அன்புடன் ஒற்றுமையாகவே கடத்திய இந்தத் தம்பதி, இறப்பிலும் பிரியாமல் ஒன்றாகவே உயிர் துறந்த சம்பவம், ஒருவர் மீது ஒருவருக்கான பாசத்தை வெளிப்படுத்தியதோடு, அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு