Published:Updated:

`நோயில் வாடும் மனைவி; போக்குவரத்துக்குக்கூட பணமில்லை!' - கலங்கும் கணவர்

மனைவியுடன் தங்கப்பா
மனைவியுடன் தங்கப்பா

`38 வயதாகும் என் மனைவிக்கு, இந்த வயசிலேயே இப்படியொரு வேதனையைக் கடவுள் தந்துவிட்டானே என நான் கலங்காத நாள்களே இல்லை'.

ஒரத்தநாடு அருகே, கூலித் தொழிலாளி ஒருவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் மனைவியை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லக்கூட பணம் இல்லாமல் வறுமையில் தவித்துவருகிறார். மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என அவர் போராடிவருகிறார்.

தனலெக்‌ஷ்மி
தனலெக்‌ஷ்மி

ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளத்தேவன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர், தங்கப்பா. கூலித் தொழிலாளியான அவரின் மனைவி, தனலெக்ஷ்மி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனலெக்ஷ்மி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துவருகிறார்.

தங்கப்பாவுக்கு போதிய வருமானம் இல்லாத நிலையில், எப்படியாவது தன் மனைவியைக் குணப்படுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பார்த்து வந்துள்ளார். ஆனால், தற்போது போக்குவரத்து செலவுக்கே பணம் இல்லாமல் வறுமையில் வாடுவதாகக் கலங்குகிறார். அதனால், கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக சிகிச்சையைத் தொடர முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

மனைவியுடன் தங்கப்பா
மனைவியுடன் தங்கப்பா

மனைவியின் சிகிச்சைக்கு உதவக் கோரி கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்து காத்திருக்கிறார். இதுகுறித்து தங்கப்பாவிடம் பேசினோம். ``நான், மரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டதால், எனது இடதுகையைக் கொண்டு எந்த ஒரு கடினமான வேலையும் செய்ய முடியாது. அதனால் எளிமையான வேலைகளைச் செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு என் குடும்பத்தைக் கவனித்துவந்தேன். இந்த நிலையில், என்னுடைய இரண்டாவது கையாக எனக்குத் துணையாக இருந்த என் மனைவிக்கு, ரெண்டு வருஷத்துக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல்போனது.

`ஒரு ரூபாய் செலவு இல்லை; 25 நாள் ரிஸ்க்கான சிகிச்சை!'- 12 வயது சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவருக்கு கேன்சர் இருப்பது தெரியவந்தது. இதனால், ஜிப்மர் மருத்துமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் வலியுறுத்தினர். அதன்படி தொடக்கத்தில் மாதத்திற்கு இரண்டு முறை சிக்கிசைக்காக அழைத்துச்சென்று வந்தேன். அதன் பின்னர், மாதம் ஒரு முறை சென்றுவருகிறேன். 38 வயதாகும் என் மனைவிக்கு இந்த வயதிலேயே இப்படியொரு வேதனையை கடவுள் தந்துவிட்டானே என நான் கலங்காத நாள்களே இல்லை.

தனலெக்ஷ்மி
தனலெக்ஷ்மி

`அவளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும், என் ஆயுசுக்கும் அவளை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்' என ஆசைபட்டு, எனக்கு வந்த சம்பளத்தைக் கொண்டும், கடன் வாங்கியும் தொடர்ந்து சிகிச்சைக்காகச் சென்றுவந்தேன். மருத்துவமனையில் எந்தச் செலவும் இல்லை என்றாலும் போக்குவரத்திற்கு என ஒவ்வொரு தடவையும் ஒரு தொகை செலவாகும். ஆனால், கடந்த இரண்டு மாதமா சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்குகூட பணம் இல்லை. மருத்துவமனையில் இருந்து போன் செய்த டாக்டர், `ஏன் சிகிச்சைக்கு அழைத்து வரவில்லை... இப்படியே விட்டீங்கன்னா, உங்க மனைவியின் நிலை ரொம்ப மோசமாகும்' என்றனர். என்ன செய்வதெனத் தெரியாமல், எனக்கு உதவுமாறு கலெக்டரிடமும் மனு கொடுத்து விட்டு, எந்த வகையிலாவது என் மனைவியைக் காப்பாற்ற உதவி வராதா என ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்'' என்று கலங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு