Published:Updated:

`பா.ஜ.க-வில் இணையவில்லை; நான் அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானவன்!’ - `சலூன்கடை’ மோகன் விளக்கம்

பா.ஜ.க நிர்வாகிகள் வாழ்த்தியபோது
பா.ஜ.க நிர்வாகிகள் வாழ்த்தியபோது ( ஈ.ஜெ.நந்தகுமார் )

பிரதமர் பாராட்டியதற்காக பா.ஜ.க நிர்வாகிகள் வாழ்த்த வீட்டுக்கு வந்தார்கள். அப்போது சால்வை அணிவித்து உறுப்பினர் அட்டைகளைக் கொடுத்தார்கள். அதை மரியாதைக்காக வாழ்த்து அட்டைபோல நினைத்து பெற்றுக்கொண்டோம்.

மான் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மோகன், நேற்று மாலை குடும்பத்துடன் பா.ஜ.க-வில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தான் பா.ஜ.க-வில் இணையவில்லை என்கிறார் மோகன். இதன்மூலம் பிரதமரால் பாராட்டுப் பெறுகிறவர்களை வைத்து பா.ஜ.க-வினர் விளையாட்டு காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

மோகன் குடும்பத்தினர்
மோகன் குடும்பத்தினர்
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை மேலமடைப் பகுதியில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன், அப்பகுதியில் கொரோனா ஊரடங்கால் கஷ்டப்படும் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகப் பள்ளியில் படித்து வரும் தன் மகளின் எதிர்காலத்துக்காக சேர்த்து வைத்த பணத்தை எடுத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி உட்பட அத்தியாவசிய பொருள்களை கடந்த மாதம் வழங்கினார். இதைக் கேள்விப்பட்டு அவரின் சேவையை அனைவரும் பாராட்டினார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை வானொலியில் 'மான் கி பாத்தில்' பேசிய பிரதமர் மோடி, 'கொரோனா ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற மக்கள் தங்களுடைய சொந்த சேமிப்பு மூலம் ஏராளமான மக்களுக்கு உதவியுள்ளனர். மதுரையில் சலூன் வைத்திருக்கும் மோகன் என்பவர், மகளின் படிப்பு செலவுக்காக, தான் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேர்த்து வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாவை ஊரடங்கால் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள்'' என்று பேசியிருந்தார்.

உறுப்பினர் அட்டை வழங்கியபோது
உறுப்பினர் அட்டை வழங்கியபோது
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்தத் தகவல் மதுரை முழுவதும் பரவவே சலூன் கடைக்காரர் மோகனை பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று மக்கள் பாராட்டினார்கள். பிரதமர் பாரட்டிப் பேசியதைப் பற்றி தன் உணர்வுகளை நம்மிடமும் மோகன் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டார்.

இந்தப் பரபரப்புக்கிடையில் அவர் நேற்று மாலை பா.ஜ.க-வில் இணைந்துவிட்டதாகத் தகவல் பரவியது. மதுரை மாநகர பா.ஜ.க தலைவர் சீனிவாசனிடமிருந்து உறுப்பினர் அட்டையை பெறுவதைப்போல புகைப்படங்களும் வெளியானது. அப்போதே அவரை கட்டாயப்படுத்தி பா.ஜ.க-வில் சேர்த்துள்ளனர் என்ற தகவலும் பரவியது.

`பிரதமர் பாராட்டியதை நம்ப முடியல; எதையும் எதிர்பார்த்து உதவி செய்யல!’ - நெகிழும் `சலூன்கடை’ மோகன்

இதுபற்றி சலூன்கடைக்காரர் மோகனிடம் கேட்டோம், ``நான் பா.ஜ.க-வில் இணையவில்லை. நான் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானவன். பிரதமர் பாராட்டியதற்காக பா.ஜ.க நிர்வாகிகள் வாழ்த்த வீட்டுக்கு வந்தார்கள். அப்போது சால்வை அணிவித்து உறுப்பினர் அட்டைகளைக் கொடுத்தார்கள். அதை மரியாதைக்காக வாழ்த்து அட்டைபோல நினைத்து பெற்றுக்கொண்டோம். அவ்வளவுதான். கட்சியில் சேரவில்லை. இதுவரை எந்தக் கட்சியிலும் உறுப்பினர் இல்லை. சலூன் கடை நடத்தும் எனக்கு எல்லாக் கட்சியிலும் நண்பர்கள் உள்ளனர்'' என்றார்.

மோகனுக்கு பா.ஜ.க  நிர்வாகிகள் வாழ்த்தியபோது
மோகனுக்கு பா.ஜ.க நிர்வாகிகள் வாழ்த்தியபோது
ஈ.ஜெ.நந்தகுமார்

தான் கட்சியில் இணையவில்லை என்று மோகன் சொல்லும் நிலையில், பா.ஜ.க நிர்வாகிகள் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பிரதமர் பாராட்டிய நபரை, கட்சிக்கு இழுக்க நினைத்த பா.ஜ.க-வினரின் திட்டம் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு