Published:Updated:

`எனது வாக்குமூலத்தை எழுத்துப் பூர்வமாகக் கொடுத்திருக்கிறேன்!' - நீதிமன்றத்தில் சேலம் இளம்பெண் இளமதி

இளமதி
இளமதி ( எம்.விஜயகுமார் )

கொளத்தூரில் செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் முதன்மை அமர்வு மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார் இளமதி.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த கவுந்தப்பாடியைச் சேர்ந்த இளைஞர் செல்வன். பவானி குருப்பநாயக்கம்பாளையத்தைச் சேர்ந்த மாற்றுச் சமூகப் பெண் இளமதி. இருவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டு கொளத்தூரில் கடந்த 9-ம் தேதி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இளமதி கடத்திச் செல்லப்பட்டார்.

இளமதி
இளமதி
எம்.விஜயகுமார்

இளமதியின் கணவன் செல்வன், 'வீரப்பன் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய சாதியக் கும்பல் எங்களைக் கடுமையாகத் தாக்கி என் மனைவியைக் கடத்திச் சென்று விட்டதாகக் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதையடுத்து பெண்ணின் தந்தை உட்பட 18 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நான்கு நாள்களுக்குப் பிறகு கடந்த 14ம் தேதி இளமதி மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். ''என் மகளைக் கொளத்தூர் மணி உட்பட 4 பேர் கடத்திச் சென்று விட்டார்கள்'' என்று இளமதியின் அம்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று 15ம் தேதி பவானி நீதிமன்ற நீதிபதி ஜீவாபாண்டியன் முன்னிலையில் இளமதி ஆஜராகி ''என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. நானாகத்தான் சென்றேன்'' என்று வாக்குமூலம் கொடுத்தார்.

நீதிமன்றம்
நீதிமன்றம்
எம்.விஜயகுமார்

இந்நிலையில் இன்று 16-ம் தேதி கொளத்தூரில் செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் முதன்மை அமர்வு மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார் இளமதி. உறவினர்கள் மற்றும் பா.ம.க கட்சிக்காரர்கள் சூழ இறுக்கமான மனநிலையில் இளமதி இருந்தார். பிறகு நீதிபதி குமரகுரு முன்னிலையில் கூண்டில் ஏறி நின்றார்.

நீதிபதி: உங்க பேரு என்ன?

இளமதி: இளமதி.

நீதிபதி: உங்க அப்பா பேரு?

இளமதி: ஜெகநாதன்.

நீதிபதி: எந்த ஊரு?

இளமதி: பவானி குருப்பநாயக்கம்பாளையம்.

நீதிபதி: யார் கொடுத்த புகாரில் ஆஜராகி இருக்கிறீர்கள்?

இளமதி: செல்வன் கொடுத்த புகாரில் ஆஜராகி இருக்கிறேன்.

நீதிபதி: நீங்கள் கடத்தப்பட்டீர்களா?

இளமதி: என்னை யாரும் கடத்தவில்லை. என் பெற்றோரோடு சென்றேன். தற்போது என் பெற்றோரோடு இருக்கிறேன்.

நீதிபதி: எந்தக் காவல் நிலையத்தில் ஆஜரானீர்கள்?

இளமதி: மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...

பார்த்திபன்
பார்த்திபன்
எம்.விஜயகுமார்

நீதிபதி: அங்கு இதைச் சொன்னீர்களா? எழுத்துப் பூர்வமாக கொடுத்திருக்கிறீர்களா?

இளமதி: என்னுடைய வாக்குமூலத்தை எழுத்துப் பூர்வமாகக் கொடுத்திருக்கிறேன்.

நீதிபதி: உங்க வயது என்ன?

இளமதி: வயது 23.

நீதிபதி: ( இளமதியின் பிறப்புச் சான்று வழங்கப்பட்டது.) பிறந்த தேதி என்ன?

இளமதி: 1997

நீதிபதி: சரி நீங்கள் இறங்கிப் போகலாம்.

அதையடுத்து கூண்டை விட்டு இளமதியை உறவினர்களும் பா.ம.க பிரமுகர்கள் கதிர் ராசரத்தினம், வேலுசாமி வழக்கறிஞர் பகத்சிங் உட்பட பா.ம.கவினர் சூழ்ந்து அழைத்துச் சென்றனர். செல்வன் தரப்பில் வழக்கறிஞர்கள் பார்த்திபன், தமயந்தி, கனகராஜ், சங்கர் ஆஜராகினார்கள்.

இதுபற்றி பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவரும் வழக்கறிஞருமான பார்த்திபன், ``அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை வைத்து சட்டப் பிரிவுகளை மாற்றக் கூடாது. வழக்கு சம்பந்தமாக ஆர்டர் போடும்படியாக இருந்தால் செல்வனுக்கு நோட்டீஸ் கொடுத்துப் போட வேண்டுமென்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டோம். அதற்கு நீதிபதி எந்த ஆர்டரும் போடவில்லையென்று தெரிவித்துள்ளார். செல்வன் தரப்பில் நாங்கள் ஆஜராகி வாதிட இருக்கிறோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு